மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 26 பிப் 2021

தெரிந்த பெயர் தெரியாத வரலாறு: தலைவி ஃபர்ஸ்ட் லுக்!

தெரிந்த பெயர் தெரியாத வரலாறு: தலைவி ஃபர்ஸ்ட் லுக்!

மின்னம்பலம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் இளமைக்காலம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என நான்கு விதமான தோற்றங்களில் அவர் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்குத் தமிழில் ‘தலைவி’ எனவும் இந்தியில் ‘ஜெயா’எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப்படத்திற்காக கங்கனா தமிழ் மொழி, பரதநாட்டியம் ஆகியவற்றைப் பயின்று வந்தார். மேலும் கங்கனாவை படத்தில் ஜெயலலிதா போன்று தோற்றமளிக்க வைக்க பிளேட் ரன்னர், கேப்டன் மார்வெல் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று(நவம்பர் 23) தலைவி படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நிமிடம் 32 வினாடிகள் நீளம் கொண்ட வீடியோவின் ஆரம்பத்தில், திரைப்பட நடிகையாக நடனமாடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு அதில் ‘ஒரு சூப்பர் ஸ்டார் ஹீரோயின்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து ‘ஒரு புரட்சி நாயகன்’ என்று குறிப்பிட்டு தொண்டர்கள் சூழ கட்சிக்கூட்டத்தில் மேடையில் நிற்பது போன்ற காட்சி வருகிறது. அந்த மேடையில் 24 ஜூன், 1991 என்று ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோவில் ‘உங்களுக்குத் தெரிந்த பெயர், ஆனால் தெரியாத வாழ்க்கைக் கதை’ போன்ற வாசகங்களும் இடப்பெற்றுள்ளது.

ரசிகர்கள் இந்தப்படத்தையும், கங்கனாவின் தோற்றத்தையும் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தவர்கள் பலரும் இந்த போஸ்டரில் இருப்பவர் கங்கனா போன்றும் இல்லை, ஜெயலலிதா போன்றும் தோன்றவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தலைவி திரைப்படம் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 23 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon