மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

சிறப்புக் கட்டுரை : மக்களைத் தள்ளிவைத்துவிட்டு பொருளாதார மாற்றம் சாத்தியமா?

சிறப்புக் கட்டுரை : மக்களைத் தள்ளிவைத்துவிட்டு பொருளாதார மாற்றம் சாத்தியமா?

நா. ரகுநாத்

‘அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதும், நாட்டு மக்களில் அனைத்து தரப்பினரையும் அரசு சந்தேகப் பார்வையோடும், குற்றவாளிகளாகவும் நோக்கும் இந்த பரஸ்பர நம்பிக்கையின்மை சூழல்தான் இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதாரப் பிணியின் ஊற்றுக்கண்’ எனும் தொனியில் பொருளாதார நிபுணரும் நாட்டின் முன்னாள் தலைமை அமைச்சருமான மன்மோகன் சிங் அவர்கள் சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

எந்தவொரு பொருளாதாரமும் சுமுகமாக இயங்குவதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கைதான்(trust). அந்த நம்பிக்கை தகர்ந்துவிடும் பட்சத்தில் எவ்வளவு முன்னேறிய பொருளாதாரமும் ஆட்டம் கண்டுவிடும். மக்கள் மத்தியில் பொருளாதார அமைப்பின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பது சாதாரண காரியம் அல்ல.

நவம்பர் 2016 பணமதிப்பு நீக்கம்(demonetization) நடவடிக்கையைத் தொடர்ந்து மக்கள் தங்கள் கையில் வைத்திருந்த ரொக்கப் பணம் அனைத்தையும் வங்கியில் செலுத்தியே ஆக வேண்டும்என்ற நிலை ஏற்பட்டது. நாட்டில் பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு, குடும்பங்களின் மொத்த சேமிப்பில் வங்கியில் டெபாசிட் ஆக வைத்திருக்கும் பணத்தின் பங்கு பெரும் வீழ்ச்சியைக் கண்டதும், கையில் ரொக்கமாக வைத்திருக்கும் பணத்தின் பங்கு கிடுகிடுவென அதிகரித்ததும் சமீபத்தில் தெரியவந்தது.

கையில் வைத்திருக்கும் பணத்தை மக்கள் நுகர்வுக்காக செலவு செய்யாமல் இருப்பதுதான் தற்போதைய பொருளாதாரத் தொய்வுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று சிலர் அனுமானிக்கின்றனர். இது அடிப்படையற்ற அனுமானம் அல்ல; பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை குறையும்போதும், அதன் காரணமாக நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அதிகரிக்கும் போதும்தான் மக்கள் கையிருப்பின் அளவை உயர்த்துவர். அந்த வகையில் பார்க்கும்போது மன்மோகன்சிங் வைத்திருக்கும் வாதம் சரியானது என்றே தெரிகிறது.

ஆனால் இது சமீபத்திய நிகழ்வு மட்டுமே. இந்தியப் பொருளாதாரம் எதனால் வேகம் இழந்துள்ளது என்பதைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவதற்கு அதன் வளர்ச்சி வியூகத்தில்(growth strategy) உள்ள குறைகளை அடையாளம் காண்பது அவசியம்.

வேகமாக வளர்ந்த ஆசிய நாடுகளின் வளர்ச்சி வியூகம்

இந்தியப் பொருளாதாரம் கணிசமான எண்ணிக்கையில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஏன் திணறுகிறது? ஊரக இந்தியா ஏன் நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது? இந்த இரு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான் என்று பல பொருளியல் அறிஞர்கள் கருதுகின்றனர்: உற்பத்தித்திறன் குறைவாக இருக்கும் வேளாண்துறையில் ஈடுபட்டிருப்பவர்களை, உற்பத்தித்திறன் அதிகமாக இருக்கும் துறைகளில் போதிய அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, அங்கு மடைமாற்றம் செய்ய நாம் தவறிவிட்டோம். ஆசியாவில் தொழில்மயமான நாடுகள் பலவும் இந்த மடைமாற்றலை சாத்தியப்படுத்தி இருக்கும்போது, இந்தியாவில் இது நிகழவில்லை.

இரண்டாம் உலகப்போருக்கு பின், ஏகாதிபத்தியமும் காலனிய ஆதிக்கமும் உலகின் பல நாடுகளில் வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால், அதன்பிறகு உடனடியாக முதலாளித்துவத்திற்கும் சோசியலிசத்திற்கும் இடையேயான பனிப்போர் தொடங்கியது. இத்தகையதொரு உலக சூழலில்தான் இந்தியா போன்ற புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கின. புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுள் முதலாளித்துவம் அல்லது சோசியலிசம் என ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்த நாடுகளுக்கு பல்வேறு பொருளாதார உதவிகள், அதிலும் குறிப்பாக பொருட்களை உற்பத்தி செய்து வளர்ந்த நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள், கிடைத்தன.

இந்தியா எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவாகவும், அந்த சமயத்தில் நாட்டின் தொழிற்துறை மிகவும் பிற்பட்ட நிலையில் இருந்ததன் காரணத்தாலும், மிகப்பெரிய உள்நாட்டு சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் இருந்ததாலும் ஏற்றுமதியை மையப்படுத்திய பொருளாதார வளர்ச்சி வியூகத்தை (export-led growth strategy) வடிவமைக்க முடியாமல் போனது.

சிங்கப்பூர்- கொரியா வளர்ச்சி எப்படி?

ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் 1960களின் பிற்பாதியில் தொடங்கி அடுத்த இரண்டு பத்தாண்டுகளுக்கு, வளர்ந்த நாடுகளிடம் இருந்து தொழில்நுட்பங்களைப் பெற்று, தீவிரமான மனித உழைப்பு தேவைப்படும் பொருட்களை (labour intensive goods) உற்பத்தி செய்து, உலக சந்தையில் அவற்றை விற்று வேகமாக வளர்ந்தன. ஊரகப் பகுதிகளில் நிலச் சீர்திருத்தம் செய்து, வேளாண் துறையில் உற்பத்தித்திறனை அதிகரித்து, அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் சுகாதாரம் வழங்கி, தொழிற்துறையில் கணிசமான எண்ணிக்கையில் வேலைகளை உருவாக்கி தனிநபர் வருமானத்தைப் பெருக்கியதோடு, அந்நாடுகள் வறுமையையும் பெரியளவில் குறைத்தன. இந்த மாற்றங்களை ஏற்படுத்தியதில் அந்நாட்டு அரசுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதே பாதையைப் பின்பற்றி மக்கள் சீனம், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், வங்கதேசம் போன்ற மற்ற ஆசிய நாடுகளும் தொழிற்துறை உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரித்து வேகமாக வளர்ந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மனிதவள மேம்பாடு

இவர்களோடு எல்லாம் போட்டி போட்டு இந்தியாவால் ஏன் உலக சந்தையில் தன்னுடைய பொருட்களை விற்கமுடியவில்லை?

இதற்கு முக்கியக்காரணம் மனிதவளங்களை வளர்த்தெடுப்பதில் நாம் போதிய முதலீடுகள் செய்யாததே. நாடு விடுதலை பெற்ற பின்பு பொருளாதார வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட வியூகத்தில் பள்ளிக்கல்வி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. உயர்கல்விக்கான நிறுவனங்கள், ஆராய்ச்சி கூடங்கள் நிறுவப்பட்டன. ஆனால் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் பள்ளிக்கல்வியே பெற முடியாதபோது, உயர்கல்வி பெறும் சிலரைமட்டுமே வைத்துக்கொண்டு வளர்ச்சி வியூகத்தை எப்படி செயல்படுத்துவது?

மேலும், விவசாயமற்ற மற்ற துறைகளில் வேலை செய்யத் தேவைப்படும் திறன்களை மக்கள் வளர்த்துக்கொண்டு, தங்களைத் தயார்படுத்திக்கொள்ள அரசின் இடையீடுகள் மிகவும் அவசியம். அந்த இடையீடுகளை இந்தியாவில் ஆட்சியில் இருந்த எந்த கட்சியும் இதுவரை முழுமையாக மேற்கொள்ளவில்லை. நவீன பொருளாதாரத்திற்கு தேவையான தொழிற்துறைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது என்றாலும், அதன்மேல் ஒரு வலுவான கட்டுமானத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் நாம் வெற்றி பெற முடியவில்லை.

தனியார் தொழில் செய்வதற்கு போடப்பட்ட பல கட்டுப்பாடுகள்தான் இந்தியா வேகமாக வளராமல் போனதற்கு காரணம் என்று வாதம் செய்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால், உண்மையில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிக்கான வியூகத்தை செயல்படுத்த முடியாமல் போனதற்கு காரணம், கல்விபெற்ற, ஆரோக்கியமான உழைப்புப்படையை நம்மால் உருவாக்க முடியாமல் போனதே.

கல்விக்காக அரசு உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்6 விழுக்காடு செலவு செய்ய வேண்டும் என்று 1966இல் கோத்தாரி கமிஷன்பரிந்துரை செய்தது. ஆனால், இன்றுவரை கல்விக்கு ஒன்றிய, மாநில அரசுகள் செய்யும் செலவு, உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காட்டைத் தொட்டதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பள்ளிக்கல்வியிலேயே இப்போதுதான் நாம் நூறு விழுக்காடு சேர்க்கையை நெருங்கியுள்ளோம். மாணவர்களின் இடைநிற்றல் விகிதம்(drop-out rate), அதாவது, பள்ளிக்கல்வி முடிக்காமல் இடையிலேயே படிப்பை நிறுத்திவிடும் மாணவர்களின் பங்கு 30 விழுக்காடு. மேலும், வழங்கப்படும் கல்வியின் தரமும் வருந்தத்தக்கதாகவே உள்ளதை Pratham எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிடும்Annual Status of Education Report தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.

சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து செய்யும் செலவு, பல ஆண்டுகளாக தேச மொத்த உற்பத்தியில் 1.5விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு அரசு செய்யும் செலவைவிட மக்கள் தங்களுடைய கையில் இருந்து செய்யும் செலவே அதிகம் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை2017-18.

இன்றும்கூட உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-5 வயதுக் குழந்தைகளில் 50 விழுக்காடு குழந்தைகள் இந்தியாவில்தான் உள்ளன. இந்தியாவிலுள்ள 0-5 வயதுக் குழந்தைகளில் 40 விழுக்காடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டபோது, ‘இது அரசின் நிதிச்சுமையை அதிகரித்துவிடும்; அதற்கான விலையை அடுத்த தலைமுறையினரே கொடுக்க வேண்டியிருக்கும்’ என்றெல்லாம் சொன்னார்கள். இந்த ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்தானே அடுத்த தலைமுறையினர்? அவர்களுடைய நலனுக்காக செய்யும் செலவை நிதிச்சுமை என்றால் நியாயமா?

மக்களின் வளர்ச்சியில் பொருளாதார வளர்ச்சி

பொருளாதாரத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்காக பல நெறிமுறைகளை நீக்கி, 1991இல் மன்மோகன்சிங் அரங்கேற்றிய புதிய பொருளாதாரக் கொள்கையில் (New Economic Policy) மனிதவள மேம்பாட்டுக்கான எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. மக்கள்நலன் குறித்து இத்தகைய அணுகுமுறையை வைத்துக்கொண்டு நாம் அனைவரையும் உள்ளடக்கிய, நீண்ட கால வளர்ச்சிக்கான பாதையில் செல்வதென்பது கனவிலும் நிகழாத ஒன்று. அப்படியே நிகழ்ந்தாலும் அதை அறமற்ற வளர்ச்சி என்றே நாம் கருத வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் முதலிய அத்தியாவசியங்களை உறுதிசெய்யும் மனித ஆற்றலை மையப்படுத்திய வளர்ச்சிப்பாதை மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றையெல்லாம் சந்தை பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிடாமல், அரசு முன்முயற்சி எடுத்து மனிதவளங்களை வளர்த்தெடுக்க வேண்டும் .மக்களின் வளர்ச்சியில்தான் பொருளாதார வளர்ச்சியைக் காண வேண்டும். அத்தகைய வளர்ச்சி வியூகத்தை வடிவமைத்து செயல்படுத்துவதே அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

எழுத உதவிய கட்டுரைகளின் இணையச்சுட்டிகள்:

1. https://www.thehindu.com/opinion/lead/the-fountainhead-of-indias-economic-malaise/article30000546.ece

2. https://www.theindiaforum.in/article/what-should-we-do-about-indian-economy

3. https://www.livemint.com/news/india/how-india-s-growth-bubble-fizzled-out-11574004165054.html

கட்டுரையாளர் குறிப்பு

நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

சனி 23 நவ 2019