மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

உச்ச நீதிமன்றத்தைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் திமுக!

உச்ச நீதிமன்றத்தைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் திமுக!

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் செய்துகொண்டிருக்க, அரசியல் கட்சிகளும் விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரமாக உள்ளன.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு மற்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது. இதுதொடர்பாக விளக்கமளித்த திமுக தலைவர் ஸ்டாலின், ‘நாங்கள் தேர்தலை நிறுத்த முயலவில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றுதான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்’ என்று குறிப்பிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 30) திமுக முறையீடு செய்தது. இதனையடுத்து, திமுக மனு மீது இரண்டு வாரங்கள் கழித்து விசாரணைக்குப் பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியைச் சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், திமுக வழக்கறிஞர் அணிச் செயலாளர் கிரிராஜன் நேற்று மனு அளித்தார். அதில், “உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். புதிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை திமுக எதிர்க்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon