அதிகாரம் இல்லை: அதிருப்தியில் தமிழக டிஜிபி திரிபாதி?

public

கடந்த நவம்பர் மாதத்தில், ஐம்பது டி.எஸ்.பி.களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவு போட்டார் டிஜிபி திரிபாதி. சில நாட்களில் அந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்து சிலரை இருந்த இடத்திலேயே நியமித்தார். சிலர், விருப்பப்பட்ட இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

உதாரணமாகத் தஞ்சாவூரில் சாதாரண பதவியில் இருந்த டிஎஸ்பி ஶ்ரீகாந்த், கடலூர் கோட்ட டிஎஸ்பியாகவும், கடலூர் டிஎஸ்பி (குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று வெற்றிபெற்றவர்) சாந்தி பெரம்பலூர் மாவட்டத்தில் டம்மி பதவிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

ஆர்டர் வந்த மறுநாளே தஞ்சை டிஎஸ்பி ஶ்ரீகாந்த் சீருடையில் கடலூர் எஸ்.பி ஆபீசுக்கு பதவியேற்க வந்துவிட்டார். அங்கே எஸ்.பி.யை சந்திக்க சாந்தியும் காத்திருந்தார்.

எஸ்.பி.அபினவ் அப்போது ஸ்ரீகாந்திடம், “சி.எம். புரோக்ராம் இருக்கிறது. அதனால் நீங்கள் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்” என்று ஶ்ரீகாந்தை அனுப்பிவைத்துவிட்டார். அதற்குள் டிஎஸ்பி சாந்தி தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் உதவியை நாடினார். அவரும் உடனே டிஜிபியை தொடர்பு கொண்டு, ‘ நல்ல ஆபீஸர். அவரை ஏன் மாற்றவேண்டும்?” என்று கேட்டுள்ளார். இது ஒரு பக்கம் என்றால் தன் சொந்த முயற்சியால் காவல்துறை உயரதிகாரிகளையும் சந்தித்து தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய முயற்சிகள் எடுத்தார் டி.எஸ்.பி. சாந்தி.

இதற்கிடையில் ஶ்ரீகாந்த் டிஎஸ்பி கடலூர் வந்து பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார்.ஆனால் அவர் பொறுப்பேற்ற இரண்டாவது நாளே திருச்சி மாநகர உதவி ஆணையராக மாற்றப்பட்டார். தன் முயற்சியில் வெற்றிபெற்ற டி.எஸ்.பி. சாந்தி மீண்டும் கடலூரில் பணியைத் தொடங்கியிருக்கிறார்.

பொதுவாக டிஎஸ்பி மாற்றவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி, அல்லது சரக டிஐஜி, மண்டல ஐஜியிடம் கருத்து கேட்பார்கள் அல்லது சம்பந்தப்பட்ட டிஎஸ்பிகளிடம் விருப்பம் கேட்பார்கள். இதையெல்லாம் தாண்டி குறிப்பிட்ட அதிகாரிகள் மீது புகார்கள் வந்தால் யாருடைய விருப்பத்தையும் கேட்காமல் எஸ்.பி.சி.ஐ.டி ரிப்போர்ட்டை வைத்து இடமாற்றம் செய்வார்கள். இதுதான் காவல்துறை நடைமுறை.

ஆனால் மேற்குறிப்பிட்ட டி.எஸ்.பி. சாந்தி உட்பட பல அதிகாரிகள் மாற்றத்தில் வழக்கமான போலீஸ் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் டிஜிபியின் உத்தரவுகளே மாற்றி அமைக்கப்பட்டது வெள்ளை மாளிகையில் கடும் அதிர்வுகளையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையில் உளவுத்துறை அலுவலகம், டிஜிபி அலுவலகம் இரண்டு அதிகார மையங்கள் உள்ளன. அதில் இப்போது டிஜிபி தான் டம்மியாக இருப்பதாகக் கருதுகிறார். முன்பெல்லாம் காவல் நிலையங்களில் புகார்கள் வந்தால் உடனடியாக சி.எஸ்.ஆர் கொடுக்கவேண்டும். எப்.ஐ.ஆர் போடவேண்டும் என்றால் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டரே முடிவு செய்வார்கள். முக்கியமான அரசியல் சார்ந்த புகாராகவிருந்தால் எஸ்.பி, அல்லது மாநகர ஆணையரைக் கேட்டு வழக்குப் பதிவு செய்வார்கள்.

தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குப் புகார்கள் வந்தால் உடனடியாக சி.எஸ்.ஆர். கொடுக்கக்கூடாது, எப்.ஐ.ஆர், போடக்கூடாது, எஸ்.பி.யிடம் கேட்க வேண்டும், எஸ்.பி, உளவுத்துறையில் உச்சத்தில் உள்ள அதிகாரியிடம் கேட்கவேண்டும், அவர் சிக்னல் கொடுத்த பிறகுதான் சி.எஸ்.ஆர், மற்றும் எப்.ஐ.ஆர் போடவேண்டும், அதுவும் மேலிடம் சொல்லும் செக்‌ஷன்தான் போடவேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகப் புலம்புகிறார்கள் கீழ்மட்ட அதிகாரிகள்.

காவல் நிலையத்தில் இருக்கும் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்கள் புகாரைக் கையில் வாங்கி வைத்துக்கொண்டு மேலிட பதிலுக்குக் காத்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் சத்தம் போடுகிறார்கள். இதுபோன்ற சங்கடங்களைச் சந்திக்கமுடியாமல் பல அதிகாரிகள் விடுப்பில் போகலாமா, அல்லது விருப்ப ஓய்வில் போகலாமா என்று பேசுகிறார்கள். சில அதிகாரிகள் பிரச்சனைகள் வராத அளவுக்கு மேலிடம் ஒப்பினியன் கேட்காமல் வரும் புகார்களுக்கு சி.எஸ்.ஆர் கொடுத்துவருகிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் தெலங்கானா கால்நடை மருத்துவர் கொலை விவகாரத்தை அடிப்படையாக வைத்து, டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 2ஆம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், உதவி கோரி வரும் அழைப்புகள் குறுஞ்செய்திகள் தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் சரக எல்லை, நடைமுறை சிக்கல்கள் போன்ற வரைமுறைகளைத் தாண்டி தாமதமின்றி உடனடி எடுக்கவேண்டும். காவலன் கைப்பேசி செயலியைப் பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாகப் பெண்கள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் பிரபலப்படுத்த வேண்டும். இந்த செயலி குறித்து பொது இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். ஆபத்து ஏற்படும் போது உடனே போலீசாரை அழைக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாகத் திகழ வேண்டும். ஒவ்வொரு மாநகர காவல் ஆணையரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், சரக காவல் துணைத் தலைவர் மற்றும் மண்டல காவல்துறைத் தலைவர் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, ‘காவலன் செயலி’யின் பயன்பாட்டை ஊக்குவிக்க தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அதனால் விளைந்த பயன்கள் குறித்து வருகிற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில் டிஜிபி திரிபாதியைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள் சில அதிகாரிகள். அவர்களிடம் தனது குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார் திரிபாதி.

“நான் டம்மி டிஜிபியாகதான் இருக்கிறேன். என்னால் ஒரு நேர்மையான போஸ்ட்டிங் கூட போடமுடியவில்லை. உடல் நலக் குறைவு காரணமாக ஒரு போலீஸ்காரர் இடமாறுதல் வேண்டி என்னை மெடிக்கல் ரிப்போர்ட்டுடன் வந்து பார்க்கிறார். அதை ஆராய்ந்து பார்த்து நியாயம் இருப்பதால் அவர் விருப்பப்பட்ட இடத்திற்கு இடமாறுதல் போட்டு ஃபைலை முதல்வருக்கு அனுப்புகிறேன். ஆனால், அங்கே முதல்வரைச் சுற்றியுள்ள இரும்பு சுவர்கள் என் ஆர்டரையே தடுத்து நிறுத்துகின்றன” என்று புழுங்கியபடியே சொல்லியிருக்கிறார் திரிபாதி.

“உளவுத்துறை ரிப்போர்ட் கூட டிஜிபி திரிபாதிக்கு முழுமையாக சென்றடைவதில்லை எனவும் சில அமைச்சர்கள் மூலமாகவே முக்கியமான விஷயங்களை டிஜிபி தெரிந்துகொள்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் கூட டிஜிபிக்கு இந்த அளவுக்கு நெருக்கடி வந்ததில்லை” என்கிறார்கள் வெள்ளை மாளிகையில் நடக்கும் விஷயங்களை அறிந்த காக்கிகள்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *