Zநித்தி தீவு வாங்கியது ஏன்- எப்படி?

public

இந்தியாவில் இருந்து எத்தனையோ பொருளாதாரக் குற்றவாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பியோடியிருக்கிறார்கள். விஜய் மல்லையா, லலித் மோடி என்று கோடானு கோடிகளை சுவாஹா செய்துவிட்டு வெளிநாடுகளில் இன்றும் அவர்கள் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள்.

ஜாஹிர் நாயக் போன்ற மத அடிப்படைவாதிகள் கூட சிற்சில சர்ச்சைகளில் சிக்கி மலேசியா போன்ற வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

ஆனால் நித்யானந்தா இவர்களைப் போல அல்ல… பொருளாதாரக் குற்றமோ,கருத்தியல் ரீதியான குற்றமோ அல்ல. ஆன்மீகம் என்ற பெயரைப் பயன்படுத்தி பாலியல் வல்லுறவு கொண்டிருக்கிறார் என்று நித்யானந்தா மீது வலுவான புகார்களுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் ஆகியோர் இந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் ராமநகர் மூன்றாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை 40 முறைகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்து வருகிறார் நித்யானந்தா. இந்த வழக்கு விசாரணையில் நித்யானந்தாவுக்கு எதிரான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படுவதற்கு தேவையான ஆவணங்கள், சாட்சிகள் எல்லாம் போதுமான அளவுக்கு உள்ளன.

இப்போது இதைவிட கொடிய குற்றமாக குழந்தைகளை வைத்து தன்னுடைய பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டதாக குஜராத் ஆசிரமத்தில் இருந்து நித்யானந்தாவுடன் செயலாளராக பணியாற்றிய ஜனார்த்தன சர்மாவே புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகார்கள் போக்சோ சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டுள்ளன. இந்த வழக்கிலும் நித்யானந்தாதான் ஏ ஒன்.

இப்படிப்பட்ட ஒரு பாலியல் குற்றவாளியான நித்யானந்தா, இனி இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஆபத்து என்றும், மற்றவர்கள் போல வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றால் கூட இந்த வழக்குகளின் கீழ் இண்டர்போல் உதவியுடன் கைது செய்யப்படுவோம் என்றும் உணர்ந்துதான், ‘ தனி நாடு’ என்ற தனி வழியில் போயிருக்கிறார்.

தென் அமெரிக்க கண்டத்தில் ஈகுவேடார் பகுதியில் இருக்கும் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அந்தத் தீவுக்கு கைலாசா என்று தனி பெயரிட்டு அதில் தனது அரசாங்கத்தையும் நிறுவியிருக்கிறார் நித்தி. இந்த கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் தரக்கோரி ஐ.நா.வுக்கு விரிவான மனு ஒன்றையும் அனுப்பியிருக்கிறார் நித்யானந்தா. அந்த மனுவிலேயே ராம்நகரில் நடக்கும் பாலியல் வழக்கு குறித்துதான் பிரதானமாகக் குறிப்பிட்டிருக்கிறார் நித்யானந்தா. சுமார் 90 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில் முதலில் தன்னை அகதியாக அங்கீகரிக்குமாறு நித்யானந்தா கோரியிருக்கிறார்.

ஆதி சைவ பாரம்பரியத்தை பின்பற்றி பரப்பியதற்காக இந்தியாவில் தான் துன்புறுத்தப்படுவதாகக் கூறியுள்ள நித்யானந்தா… ‘இந்திய நீதிமன்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை மூன்றாம் தரப்பினரால் சுய இன்பம் செய்யப்படும் மருத்துவ நடைமுறைகளுக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றன. ஆண்குறி ஊசி மற்றும் மலக்குடல் ஆய்வு மற்றும் பிற ஆக்கிரமிப்பு பரிசோதனைகளை தாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. ‘குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் செயலைச் செய்ய உடல் திறன் உள்ளவரா என்பதைத் தீர்மானிக்க“ ஆற்றல் சோதனை ”என அழைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளில் இந்தியா ஒரு காட்டுமிராண்டித்தனமான நடைமுறையைப் பயன்படுத்துகிறது. மருத்துவ சோதனை என்று அழைக்கப்படும் இந்த முறை பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதைகளின் ஒரு வடிவமாகும். இந்த மருத்துவ பரிசோதனை ஒரு மருத்துவரால் வெறும் பரிசோதனை என அதிகாரிகளால் வகைப்படுத்தப்பட்டாலும், இது நடைமுறையில் அரசியல் எதிரிகளை இழிவுபடுத்துவதற்கும், , இயலாமை செய்வதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு ஆக்கிரமிப்பு மற்றும் வேதனையான சித்திரவதையாகும்” என்று தனது மனுவில் கூறியுள்ளார் நித்தி.

மேலும் இந்திய பீனல் கோடு இன்று ஆர்.எஸ்.எஸ்.சால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் வன்முறை கும்பல் வாடகைக்கு கொலைசெய்யும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இந்த தாக்குதல்கள் பொதுவாக உள்ளூர் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளம் அல்லது திமுக தலைவர்கள் போன்றவர்களால் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன” என்று குற்றம் சாட்டும் அவர், பாஜக, ஆர்.எஸ்.எஸ். விஹெச்பி, பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார். அதாவது தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் பிம்பங்களை மறைக்க இந்து என்ற முழக்கத்தையும் ஆதி சைவம் என்ற ஆயுதத்தையும் பயன்படுத்தி ஐ.நா.வில் முறையிட்டு அகதியாகி, தலாய் லாமா போன்ற ஒரு ஏற்பாட்டுக்கு தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார் நித்யானந்தா.

ராம்நகர் வழக்கு தன்னை நெருக்குவதை உணர்ந்து இந்த திட்டங்கள் எல்லாம் நித்தியால் நெடுமாதங்கள் முன்பே போடப்பட்டவைதான்.

அதனால்தான் உலக அளவில் தீவு விற்பனைக்கு புகழ் பெற்ற தென் அமெரிக்கப் பகுதிகளில் ஒரு தீவை வாங்கி அதற்கு பெயர் சூட்டு விழா நடக்கும் வரை இந்திய உளவுத்துறைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தீவு எப்படி வாங்குவது என்பது மிகச் சுவாரஸ்யமான விஷயம்.

தாம்பரத்துக்கு மிக அருகில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து நிமிட தூரம் என்றெல்லாம் நாம் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் பார்த்திருப்போம். ஆனால், உலக அளவிலான ரியல் எஸ்டேட் பிசினஸ் பற்றி பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். உலக அளவில் பல மில்லியனர்கள் தங்களது விடுமுறையை தங்கள் செல்வத்துக்கு ஏற்றாற்போல் கழிக்க விரும்புவார்கள். இதுவரை யாரும் தங்காத இடத்தில் தங்க வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான தீவு விற்பனைதான் இந்த உலகளாவிய ரியல் எஸ்டேட் பிசினஸ்.

ஆசியா, ஆப்பிரிக்கா, கனடா, கரீபியன், மத்திய அமெரிக்கா, ஐரோப்பா, தென் பசிபிக், அமெரிக்கா போன்ற பல்வேறு கண்டங்களில் கடல்களுக்கு நடுவே இதுவரை யாரும் தீண்டாத பல தீவுகள் இன்னும் மிதந்துகொண்டிருக்கின்றன. நம்மூர் நடிகர்கள் ஊட்டியிலும், மூணாறிலும் எஸ்டேட் வாங்குவதைப் போல பிரம்ம்மாண்ட மில்லியனர்கள் தீவு வாங்குகிறார்கள். தீவுகளை விலைக்கும் வாங்கலாம், வாடகைக்கும் பிடிக்கலாம். இதற்காக இணையத்திலேயே பல விற்பனைத் தளங்கள் உள்ளன.

அமேசானில் நாம் செல்போன் தேடுவது போல இங்கே தீவுகள் தேடப்படுகின்றன. இரண்டரை ஏக்கர் கொண்ட குட்டிக்குட்டித் தீவுகள் முதல் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட பல தீவுகள் இருக்கின்றன. இவற்றில் சில அரசுகளுக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. ஆனால் பல தீவுகள் தனியாரிடம்தான் இருக்கின்றன. இந்த வகையில்தான் நித்யானந்தா தனது அமெரிக்க சீடர்கள் மூலமாக இந்தத் தீவை வாங்கியிருக்கிறார். ஈக்குவடார், ட்ரினிடா டொபாகோ அருகே உள்ள இந்தத் தீவை வாங்கியிருக்கிறார் நித்தி. கரிபீயன் பகுதியில் 460 ஏக்கர் பரப்பில் இருக்கும் ஒரு தீவின் விலையே 6 கோடியே 20 லட்சம் டாலர் என்று இணைய தளங்கள் கூறுகின்றன. அப்படியென்றால் ஆயிரக்கணக்கான ஏக்கர் கொண்ட தீவுகள் என்ன விலை என்று நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.

திருவண்ணாமலை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த நித்யானந்தாவுக்கு தீவு வாங்கும் அளவுக்கு பணம் ஏது?

**(நித்தி சர்ச்சை நீளும்)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *