மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

டிரம்ப் பதவி நீக்கம்: தீவிரமாகும் நடைமுறைகள்!

டிரம்ப் பதவி நீக்கம்: தீவிரமாகும் நடைமுறைகள்!

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு செய்யும் என்று அதன் சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று (டிசம்பர் 5) அறிவித்திருக்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முழு பதவிக்காலத்தையும் முடிப்பாரா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜோ பிடனுக்கு எதிராக சில விசாரணைகளை நடத்த உக்ரைனுக்கு நிபந்தனைக்குட்பட்ட ராணுவ உதவியை ஊழல் முறையில் செய்ததாக ஜனநாயக கட்சியினர் டிரம்ப் மீது குற்றம் சாட்டினார்கள். உள்நாட்டு அரசியலுக்காக வெளிநாட்டு சக்திகளை டிரம்ப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை தீவிரமாக எழுப்பினார்கள். அதை முதலில் குப்பை என்று மறுத்தார் டிரம்ப்

டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான செயல்முறைகள் பிரதிநிதிகள் சபையில் தொடங்கப்பட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடைபெறலாம், மேலும் செனட்டில் ஒரு விசாரணை 2020 ஜனவரி மாத தொடக்கத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் பெலோசி இதுகுறித்து விளக்கம் அளித்தபோது, “நான் யாரையும் வெறுக்கவில்லை. நான் அதிபருக்காக எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப், "நீங்கள் என் மீது குற்றஞ்சாட்டப் போகிறீர்கள் என்றால், இப்போதே விரைவாகச் செய்யுங்கள். நாங்கள் செனட்டில் ஒரு நியாயமான விசாரணையை நடத்த முடியும். இந்தப் பிரச்சினையை சீக்கிரம் முடித்துவிட்டு நாடு மீண்டும் தன் வேலையைப் பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் டிரம்ப்.

வெள்ளி, 6 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon