மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

நித்தியின் நிதி திரட்டும் வித்தை!

நித்தியின் நிதி திரட்டும் வித்தை!

தென்னமெரிக்கத் தீவுகளில் கரீபியன் தீவுகளில் 1960 களில் அனாதையாகக் கிடந்த பல தீவுகளில் அமெரிக்கா அணுகுண்டு சோதனைகள் உள்பட பல சோதனைகளை நடத்தியுள்ளது. பின் அப்படியே அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டது. இப்படிப்பட்ட பல தீவுகள் தென் அமெரிக்கக் கடற்பகுதிகளில் திகிலடைந்து போய் கிடக்கின்றன. அந்தத் தீவுகளில் புல் பூண்டு கூட முளைக்காமல் இருக்கின்றன.

இதேநேரம் இப்படிப்பட்ட சோதனைகளில் சிக்காமல் தப்பிப் பிழைத்த தீவுகள்தான் இன்று பணக்காரர்களின் பிடியில் சொகுசு சொர்க்கங்களாக நீடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு தீவைத்தான் நித்யானந்தா வாங்கி கைலாசா என்று பெயரிட்டுள்ளார். நித்தி வாங்கிய கைலாசா தீவுக்கு அதற்கு முன் என்ன பெயர் என்ற தகவல் எங்கும் கிடைக்கவில்லை. ஆனபோதும் அந்தத் தீவின் ஒருமுனையில் தனது சிம்மாசனத்தைப் போட்டு அமர்ந்து கொண்டு, சத்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார். நித்தி வெளியிட்ட புகைப்படங்களில் இருப்பது தீவின் ஓர் ஓரம்தான்.

உதாரணமாக தென் அமெரிக்காவில் சிலி அருகே உள்ள குஃபா என்ற தீவு சுமார் 49 ஆயிரம் ஏக்கர் பரப்பு கொண்டது. இதன் விலை 2 கோடி அமெரிக்க டாலர். அதேநேரம் பிரேசில் அருகே உள்ள இஸ்லா போனிடா என்ற தீவு 20 ஏக்கர் பரப்புதான் அதன் விலை 35 லட்சம் அமெரிக்க டாலர். இப்படி தீவுகளுக்கு பரப்பளவை மட்டுமே அடிப்படையாக வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இந்த ரீதியில் பார்த்தால் நித்யானந்தா வாங்கியிருக்கும் தீவின் விலை நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்வளவு கோடிகள் நித்திக்கு வந்தது எப்படி? நித்திக்கு வந்தது இருக்கட்டும், அது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றது எப்படி?

நித்தியின் நிதியாதாரத்துக்கான தேடலில் இறங்கியபோது அவரது ஒவ்வொரு படிநிலைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன.

கிட்டத்தட்ட 2010 ஆம் ஆண்டு வரை நித்தியின் பெரும்பாலான பொருளாதார ஈட்டுதல்கள் என்பது அவரது சத்சங்கம்தான். அதாவது நித்தியின் சொற்பொழிவுகள்தான். வேதங்கள், உபநிஷத்துகள் பற்றி அடர்த்தியான, நீரோட்டமான ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் சத்சங்கத்தில் பங்கேற்பவர்கள் மூலம் கட்டணம் பல கோடி ரூபாய்களுக்கு வசூலாயின. இதற்கிடையில் மதுரை ஆதீனத்தின் பல பகுதிகளை நித்தியின் குழாமினர் உறவாடி ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க நித்தி ஆசிரமத்தினர் எடுத்த பல முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பெங்களூரு பிடதி ஆசிரமத்துக்கே சென்றுவிட்டார் நித்தி.

நித்தியின் சத்சங்கத்தில் லயித்துப் போன, அதிசயித்துப் போன பல மல்டி மில்லியனர்கள் அவருக்கு கோடி கோடியாக வாரி வழங்கினர். இது பிடதி ஆசிரமம் நடத்தவும் நித்தியின் உல்லாசத்துக்காகவுமே செலவானது. இதன் பின்னர்தான் நிரந்தர நிதிக் கட்டமைப்புக்குத் திட்டமிட்டார் நித்தி. அதற்கான அச்சாரம்தான் அவர் நடத்தும் குருகுலம்.

பிடதி ஆசிரமத்தில் ஆன்மீகத்தைத் தாண்டி பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடக்கும். இந்திய கல்வி முறையின் இப்போதைய நிலை என்ற தலைப்பில் ஒரு சத்சங்கம் என்றால் அதற்கு மிகப்பெரிய பள்ளி, கல்லூரி அதிபர்கள் அழைக்கப்படுவார்கள். ஏற்கனவே நித்தியின் சத்சங்கத்தைக் கேட்டு அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் தொழிலதிபர்கள் அழைக்கப்படுவார்கள்.

அங்கே பேசும் நித்தி, ‘இந்தியாவுக்கு இப்போதைய தேவை வேதம், உபநிஷது, யோகா கலந்த கல்வி முறை. இதற்கான சரஸ்வதி என்னிடம் இருக்கிறாள், லட்சுமி உங்களிடம்தான் இருக்கிறாள். இந்தக் கல்விமுறையால்தான் இந்தியாவை இனி காப்பாற்ற முடியும். இதற்காக உதவுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார். இப்படிப்பட்ட நித்தியின் சொற்பொழிவுகளால் தான் பிடதியிலும், பிடதி தாண்டி அகமதாபாத்திலும் குருகுலங்கள் என்று அழைக்கப்பட்ட கல்விக் கூடங்களை நிறுவினார்.

இந்த கல்விக் கூடங்களில் சேர்க்கப்படும் யாரும் சாதாரண வர்க்கத்து மாணவர்கள் அல்லர். அப்பர் மிடில் கிளாஸ் கூட கிடையாது. முழுக்க முழுக்க மேல்தட்டு வர்க்கத்தினர்தான். சத்சங்கத்துக்கு வரும் மிகப்பெரிய தொழிலதிபர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் இந்த குருகுலத்தின் மாணவர்கள்.

இப்படித்தான் எல் ஈடி பல்பு தயாரிக்கும் நிறுவனத்தின் சி இ ஓ ஆன ஜனார்தன் சர்மா சத்சங்கம் வழியாக தன் பிள்ளைகளை குருகுலத்தில் சேர்த்தார்.

“ நான் இந்து முறை மற்றும் இந்திய கலாச்சாரத்தை கடுமையாக நம்பும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன். அவர்களின் எல்.ஈ.டி தேவைகளைப் பற்றி விவாதிக்க நான் முதலில் ஆசிரமத்திற்குச் சென்றேன். ஆசிரமத்தில் நடக்கும் இந்திய கல்வி முறை குறித்த குழு விவாதத்திற்கு அவர்கள் என்னை அழைத்தார்கள். அவர்கள் நவீன கல்வியுடன் உபநிஷத் அடிப்படையிலான கல்வியையும் யோகாவையும் வழங்கிவருகிறோம் என்று என்னிடம் விளக்கினார்கள். இந்த கருத்துகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டேன் நான். எனது குழந்தைகள் அனைவரையும் பெங்களூருவைச் சேர்ந்த நித்யானந்தா தியான பீடத்தில் 2013 இல் சேர்த்தேன். ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது நித்தியானந்தாவின் இந்த குருகுலம் என்பது சரஸ்வதிக்கான தளம் அல்ல. அது நித்தியின் லட்சுமியை அதாவது நிரந்தரமான நிதிக் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான அச்சாரம் என்பது” என்கிறார் ஜனார்தன சர்மா.

இப்போது தீவு வாங்க நித்தி பயன்படுத்தியிருக்கிற பணம் முழுக்க முழுக்க இந்த குருகுலம் மூலமாக வந்ததுதான். வேதம், உபநிஷது, யோகா எல்லாம் குருகுலத்தின் வெளிப் பூச்சுகள். குருகுலத்தின் உள்ளே நடப்பது என்ன?

பெங்களூரு- டூ தென் அமெரிக்கத் தீவுகள்: நித்யானந்தா தப்பிய ரூட் !

நித்தி தீவு வாங்கியது ஏன், எப்படி?

வெள்ளி, 6 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon