மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

பட்னவிஸின் பிராமண ஆதிக்கம்: மகாராஷ்டிர பாஜகவில் பிளவு!

பட்னவிஸின் பிராமண ஆதிக்கம்: மகாராஷ்டிர பாஜகவில் பிளவு!

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்ததும், ‘இந்த ஆட்சி சில மாதங்கள்தான் நீடிக்கும். அதற்குள் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு வந்துவிடுவார்கள்” என்று பாஜகவினர் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் பாஜகவுக்கு அடுத்த அடியாக, அக்கட்சியில் இருந்து சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகா விகாஸ் அகாதிக்கு ஆதரவளிக்க இருப்பதாக தகவல்கள் மும்பையில் இருந்து வருகின்றன.

மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளான முன்னாள் மாநில அமைச்சர் பங்கஜா முண்டே மராட்டிய பாஜகவில் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மராட்டிய மாநிலத்தில் 45% பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களை விட்டுவிட்டு பாஜகவில் பிராமணரான பட்னவிஸுக்கு முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படுவதை பங்கஜா முண்டே போன்றோர் விரும்பவில்லை. அவரோடு ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த சுமார் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் பட்னவிஸுக்கு எதிராக கட்சிக்குள் செயல்படுவது அல்லது சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

பிராமணரான பட்னவிஸுக்கு பாஜக தலைமை முக்கியத்துவம் கொடுப்பதால் மராட்டியத்தில் அடர்த்தியாக இருக்கும் ஓபிசி சமூகத்தினர் தாங்கள் கட்சியில் ஓரங்கப்படுவதாக உணர்ந்து, பாஜகவை விட்டு விலகிக் கொண்டிருக்கின்றனர்..

முன்னாள் எம்.எல்.ஏ பிரகாஷ் ஷெண்ட்கே, "பாஜகவுக்குள் இருக்கும் ஓபிசி தலைவர்கள் கட்சியின் மகாராஷ்டிரா தலைமையால் ஓரங்கட்டப்படுகிறார்கள். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, ஆனால் 2019 சட்டமன்றத் தேர்தலில் இது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. 2014 ல், சட்டமன்றத் தேர்தலுக்கான டிக்கெட் எனக்கு மறுக்கப்பட்டது, எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. நான் ஏன் கைவிடப்பட்டேன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. .மாநில தலைமை எங்கள் பலத்தை குறைக்க முயற்சிக்கிறது. தேசிய தலைமையால் இவ்விஷயத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால், அது மாநில பாஜக மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று டிசம்பர் 6 ஆம் தேதி மும்பையில் பிரிண்ட் ஊடகத்திடம் பேசினார்.

பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜு தோட்சம் "இது திணறடிக்கிறது. ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேவேந்திர ஃபட்னவிஸின் அனுமதியின்றி கேள்விகளைக் கேட்கவோ அல்லது எங்கள் குறைகளை சட்டமன்றத்தில் முடியவில்லை. அச்சத்தின் காற்று இருந்தது” என்கிறார்.

இந்நிலையில் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பண்டாரி, ‘மாநில பாஜகவுக்குள் அதிருப்தியும் கோபமும் இருப்பது உண்மைதான். ஆனால் அதை நாங்கள் சமாளிப்போம்.பாஜகவிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் விலகுகிறார்கள் என்பது உண்மையல்ல” என்கிறார்.

சனி, 7 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon