உள்ளாட்சி தேர்தல்: மீண்டும் நீதிமன்றப் படியேறும் திமுக

public

இட ஒதுக்கீடு, வார்டு வரையறை தொடர்பான சட்டக் கூறுகளை நிவர்த்தி செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 6) தீர்ப்பளித்த நிலை யில், இன்று (டிசம்பர் 7) தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது திமுக. .

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ஆம் தேதி வெளியிட்ட நிலையில், இதனை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சித் தேர்தலுக்கான டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணை செல்லாது என உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என இன்று காலை முதலே தகவல்கள் வந்துகொண்டிருக்க, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தேர்தல் ஆணையத்துக்கு இன்று பிற்பகல் நேரில் சென்று, ’வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீட்டு ஆகியவற்றை முழுமை செய்துவிட்டே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நினைவுபடுத்தி மனு கொடுத்து வலியுறுத்தினார். ஆனால் அவர் கொடுத்த சில நிமிடங்களில் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னதாக 2ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை வாபஸ் பெற்ற அவர் செய்தியாளர்களிடம்,

“தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி (நாளை மறுநாள்) துவங்கி 16ஆம் தேதி முடிகிறது. வேட்புமனு பரீசிலனை 17ஆம் தேதி நடைபெறும். மனுவைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் டிசம்பர் 19.

தேர்தல் நாளன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெறும். இருகட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 2020 ஜனவரி 2 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஜனவரி 6ஆம் தேதி பதவியேற்பர். மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்கள் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “ஊரகப் பகுதிகளிலுள்ள 91,975 பதவிகளை நிரப்பிட நேரடித் தேர்தல் நடைபெறும். 27 மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 515 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 9, 624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும், 76, 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இதில் அடங்கும். வாக்குப் பதிவுக்கு 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்ற விவரங்களையும் வெளியிட்டார்.

எனினும் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேதி அறிவிப்பையே, வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட சில மாறுதல்களுடன் அப்படியே வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

கடந்த 2ஆம் தேதி வெளியான அறிவிப்பில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், எந்த தேதியில் எத்தனை வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் என்பதை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பில் முதல் கட்டத்தில் 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்று 15 ஆவது பத்தியின் d பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு அடுத்த பத்தியான e யில், ‘ தேர்தல்கள் நடத்தப்படும்போது அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீட்டு சட்டத்தின் 6 ஆவது பிரிவு பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறது.

ஆனால் தமிழக தேர்தல் ஆணையரோ d பத்தியை மட்டுமே படித்தவர் போல மீண்டும் அதே தேர்தல் அறிவிக்கையை, சற்றே சில மாற்றங்களை செய்து அறிவித்திருக்கிறார். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், அதிகாரபூர்வ நோட்டிபிகேஷன் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார் தேர்தல் ஆணையர் பழனிசாமி. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றங்களை ஆழம் பார்க்கும் செயலா இது என்றும் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இன்று காலை மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியின் டிஜிட்டல் திண்ணை பகுதியில், “உள்ளாட்சித் தேர்தல் வராதுன்ற தைரியத்தில் நாம் பேசாமல் இருந்துவிடக்கூடாது. ஏனென்றால் இவ்வளவு தூரம் தேர்தலை நடத்த அதிமுக முயற்சி செய்யும்போது இனியும் ஏதாவது ஒரு வகையில் திடீர்னு அறிவிப்பை வெளியிட்டு புது மாவட்டங்கள் தவிர பிற பகுதிகளுக்கு தேர்தலை நடத்த எடப்பாடி முயற்சிக்கலாம். அதனால நாம எதுக்கும் தயாரா இருக்கணும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி வார்டு வரையறையை நாலு மாசத்துக்குள்ள முடித்துவிட்டு அதற்குப் பிறகுதான் தேர்தல் நடத்தணும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை நடத்தியே தீருவேன் என எந்த தைரியத்தில் சொல்றாருன்னா ஆட்சியில இருக்கிற தைரியத்தில் மட்டும்தான் சொல்றாரு. அதனால தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டா ஒருபக்கம் சட்ட ரீதியா நாம போராடிக்கிட்டே இன்னொரு பக்கம் தேர்தலை ஃபேஸ் பண்ணவும் ரெடியாகணும். இதப் பத்தி 8 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல பேசுவோம்’என்று சொன்ன ஸ்டாலின் , மேலும், ‘தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இவ்வளவு பொறுப்பில்லாம நடந்துக்குறது புதுசு இல்ல. அதனால மீண்டும் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டாங்கன்னா நாம சுப்ரீம் கோர்ட்டு தான் போகணும்’ என்றும் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்’’என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த சில நிமிடங்களிலேயே திமுகவின் வழக்கறிஞர்கள் வில்சன், நீலகண்டன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹியின் வீட்டுக்குச் சென்று தேர்தல் ஆணையரின் அறிவிப்பை எதிர்த்து முறையீடு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மாநிலத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. இதை எதிர்த்து நாம் மீண்டும் நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

எனவே உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் இடியாப்பச் சிக்கலாகிறது.

[டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்: அடுத்து என்ன? ஸ்டாலின் போட்ட திட்டம்!](https://minnambalam.com/k/2019/12/07/18/localbody-elections-supreme-court-judgement-dmk-what-next)

[உள்ளாட்சித் தேர்தல்: 2016-2019 உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?](https://minnambalam.com/k/2019/12/07/21)

[இன்று உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு!](https://minnambalam.com/k/2019/12/07/37)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *