மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

ஐசியுவில் திருமணம்: தாலி கட்டியதும் தப்பிய மணமகன்!

ஐசியுவில் திருமணம்: தாலி கட்டியதும் தப்பிய மணமகன்!

காதலித்துவிட்டு, சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் புனேவில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அப்பெண்ணை ஏமாற்றிய அந்த நபரை கண்டுபிடித்து அழைத்து வந்து ஐசியு வார்டிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர். எனினும் திருமணம் நடந்த சிறிது நேரத்திலேயே அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த சுராஜ் நலவடே என்ற நபரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆசை வார்த்தைகளைக் கூறி அந்த பெண்ணுடன் உடலுறவையும் வைத்துள்ளார் சுராஜ் நலவடே. ஆனால் தாழ்த்தப்பட்ட சாதி என்றும் இந்த திருமணம் நடைபெறாது என்றும் கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார். தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார்.

இதனிடையே இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மன உளைச்சலிலிருந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து, சுராஜ் நலவடேவை தேடிக் கண்டுபிடித்த அப்பெண்ணின் உறவினர்கள் கடந்த வியாழன் அன்று மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஐசியு வார்டிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒரு பக்கம் ஊசி, மறுபக்கம் மூக்கில் டியூப் என்று ஐசியுவில் சிகிச்சையிலிருந்த பெண்ணுக்குத் தாலி கட்டியுள்ளார் சுராஜ் நலவடே.

ஆனால் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மீண்டும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐபிசி பிரிவு 376(வன்கொடுமைக்கான தண்டனை) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சுராஜ் நலவடேவை தேடி வருகின்றனர்.

ஞாயிறு, 8 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon