_கமல்-பிகே கூட்டணி முறிந்தது எப்படி?

public

கழக அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் மினி தொடர்-6

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பிரசாந்த் கிஷோருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது எனலாம்.

அதற்கு முன்பே பிரசாந்த் கிஷோர் ரஜினியை சந்தித்துப் பேசியதும், அதுபற்றி ரஜினியே கமலிடம் பகிர்ந்துகொண்டதும் கமலுக்கு பிகே பற்றி சில நெருடல்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அதேநேரம் ஏற்கனவே பிகேவுடன் பத்து கோடி ரூபாய் செலவில் போட்ட ஒப்பந்தத்தையும் முறித்துக் கொள்ள கமல் விரும்பவில்லை.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கமல் கட்சியின் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களை செய்யச் சொல்லி பரிந்துரைத்தது பிகே டீம். அந்த டீமின் ஆலோசனையின் பேரில் தமிழகத்தை 9 மண்டலங்களாகப் பிரிப்பது, ஒரு மண்டலத்துக்கு குறைந்தது 5 மாவட்டங்கள் என்றும், ஒரு மாவட்டத் தலைவர், அவருக்குக் கீழ் மூன்று மாவட்டச் செயலாளர்கள், 6 இணைச் செயலாளர்கள், 6 துணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர், 15 செயற்குழு உறுப்பினர்கள் என்று மாவட்ட அமைப்பு வரையறுக்கப்பட்டது. இதேபோல ஒன்றிய, நகர, கிளை அமைப்புகளும் கட்டமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதன் பேரில் கடந்த ஒரு வார காலமாக நிர்வாகிகள் தேர்வு விரிவாக நடைபெற்று புதிய நிர்வாகிகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டது.

இதெல்லாம் தேர்தலுக்குப் பின்பு! தேர்தலுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளிடம் பெரியதொரு கேள்வி எழுந்தது.

கமல் தேர்தலில் நிற்பாரா என்பதுதான் கேள்வி. நடப்பது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. ஆனால் கமல்ஹாசன் மாநிலத்துக்காக மாற்றுத் தலைவராகத்தான் அடையாளம் காட்டப்படவேண்டும். எனவே சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் நிற்கலாம் என பலர் கருதினர். சிலரோ, கட்சியின் தலைவரே தேர்தலில் நிற்க மறுத்தால் மற்றவர்களுக்கு அதுவே தார்மீக பின்னடைவாக இருக்கக் கூடும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ மோதிப் பார்ப்பதுதானே தலைமைக்கு அழகு என்ற கருத்தையும் முன் வைத்தார்கள்.

இதுபற்றி பிகே டீம் கமலுக்கு அளித்த பரிந்துரை மிக முக்கியமானது. அதாவது கோயமுத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் கமலுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இங்குள்ள அனைத்து அம்சங்களையும் ஆய்ந்து பார்த்ததில் 35% வரையில் வாக்கு பெறுவதற்கு மக்கள் நீதி மய்யத்துக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே கமல் தேர்தலில் போட்டியிடுவதாக கருதினால் இந்த மூன்று தொகுதிகளில் ஒன்றில் நிற்கலாம் என்பதே பிகே டீம் கொடுத்த ஆலோசனை. கமலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கலாமா, சட்டமன்றத் தேர்தலில் நிற்கலாமா என்ற ஊசலாட்டச் சிந்தனை இருந்தது.

ஆனால் கட்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதாலும் கட்சிக்காக மாநிலம் முழுதும் பிரச்சாரம்செய்ய வேண்டும் என்பதாலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தார் கமல்ஹாசன். சட்டமன்றத் தேர்தலில் நிற்கலாம் என முடிவெடுத்தார்.

ஆயினும் பிகே டீமின் ஆலோசனைப்படி தனக்காக பரிந்துரைக்கப்பட்ட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரனை நிறுத்தினார் கமல்ஹாசன்.

தேர்தல் முடிவுகள் மக்கள்தான் இறுதியான ‘உத்தி வகுப்பாளர்கள்’ என்பதை நிரூபித்தது. கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் 1 லட்சத்து, 45 ஆயிரத்து 14 ஓட்டுகளை வாங்கினார். இது கமலுக்கே அதிர்ச்சிதான். தனக்கான தொகுதி என்று சிபாரிசு செய்யப்பட்ட தொகுதியில் ஓரளவுக்கு செலவு செய்தும் (சுமார் 4 கோடி செலவு என்று சொல்கிறார்கள்) வாங்கிய ஓட்டுகள் ஒன்றரை லட்சம் கூட இல்லையே என்பதால்தான் அந்த அதிர்ச்சி.

அதேபோல பிகே டீம் பரிந்துரைத்த பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் வாங்கிய ஓட்டுகள் 59 ஆயிரத்து 693. திருப்பூரில் 64 ஆயிரத்து 657 ஓட்டுகள் வாங்கியது மக்கள் நீதி மய்யம்.

எதிர்பார்த்த இடங்களில் அதிர்ச்சி என்றால் எதிர்பாராத இடங்களில் இருந்து மகிழ்ச்சி கிடைத்தது கமல்ஹாசனுக்கு. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் சற்று செலவு செய்தார்கள். அதாவது கோடிக் கணக்கில் செலவு செய்தார்கள்.

ஆனால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதர் வாங்கிய ஓட்டுகளின் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 525. அதுவும் முதலில் இங்கே சிவகுமார் என்பவர் நிறுத்தப்பட்டு பின்னர் அவர் மாற்றப்பட்டு ஸ்ரீதர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் செலவு செய்தது வெறும் ஆறு லட்ச ரூபாய்தான். ஆனாலும் அவர் வாங்கிய ஓட்டுகளின் எண்ணிக்கை ஒருலட்சத்தைத் தாண்டி மக்கள் நீதி மய்யத்தின் டாப் தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடித்தது ஸ்ரீபெரும்புதூர்.

இதேபோல் மத்திய சென்னையில் கமீலா நாசர் 92 ஆயிரத்து 249 வாக்குகளும், வட சென்னையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மௌரியா 1 லட்சத்து 31 167 வாக்குகள் வாங்கியதும், தென் சென்னையில் ரங்கராஜன் 1 லட்சத்து 35ஆயிரத்து 465 வாக்குகள் வாங்கியதும் கமல்ஹாசனோ பி.கே டீமோ எதிர்பார்க்காதவை. இவர்கள் தேர்தலுக்காக செலவு செய்த தொகை மிகச் சில லட்சங்கள்தான் என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு முன்புவரை பிகே டீமின் பரிந்துரைகளை தீவிரமாக செயல்படுத்தி வந்த கமல்ஹாசன் தேர்தல் முடிவுக்குப் பின், சற்றே தயங்கினார். எதிர்பார்த்த இடங்களில் இடியும், எதிர்பாராத இடங்களில் மழையும் பெய்ததை அடுத்து நெருடலோடுடனே தொடர்ந்தது பிகே-கமல் கூட்டணி. ஆனால் அதன் பின் பிகே சொன்ன ஒரு கூட்டணி யோசனை கமலை ரொம்பவே யோசிக்க வைத்தது.

அதற்கும் எடப்பாடி மீது பிரசாந்த் கிஷோர் பார்வை படுவதற்கும் சரியாக இருந்தது.

எடப்பாடிக்கு பிரசாந்த் கிஷோர் ஒர்க் அவுட் ஆனாரா?

(கார்ப்பரேட் அரசியல் பயிலக் காத்திருங்கள்…)

[ரஜினிக்கு பிரசாந்த் கிஷோர் தந்த ரிப்போர்ட்-கமல் அதிர்ச்சி!](https://minnambalam.com/k/2019/12/09/57)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *