மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

அமித் ஷா சட்டம்: பரவும் வன்முறை!

அமித் ஷா சட்டம்: பரவும் வன்முறை!

திரிபுரா மாநிலத்தில் 48 மணி நேரத்துக்கு இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கடந்த 9ஆம் தேதி உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்ய, பாஜகவின் பெரும்பான்மை பலம் காரணமாக அது நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதால் ஆவேசமடைந்த அவர்கள், ரயில்களை மறித்தும், டயர்களை சாலைகளில் கொளுத்தியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்த மசோதா நிறைவேற்றப்படுவது ஆபத்தான வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ள அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய், இது அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், அசாமிற்குள் வருவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

இதேபோல, மசோதாவுக்கு எதிராக திரிபுரா மாநிலத்தின் பழங்குடியினக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மாநிலம் தழுவிய காலவரையற்ற பந்த்தை அறிவித்துள்ளதால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திரிபுரா தலைநகர் அகர்தலாவில், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் அரசு அலுவலகங்கள், கடைகள், பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து திரிபுரா அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வதந்திகள் பரவியதன் காரணமாக திரிபுராவின் மனு மற்றும் கஞ்சப்பூர் பகுதிகளில் பழங்குடியினர்களுக்கும், பழங்குடியினர் அல்லாத மக்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. இது அந்தப் பகுதிகளில் வன்முறையான சூழலை உருவாக்கியுள்ளது. எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படும் போலி புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள் வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளன.

மேற்கண்ட சம்பவங்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும், கடுமையான சட்டம் ஒழுங்கு நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும், சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவும் இணையதளப் பயன்பாடு 48 மணி நேரத்துக்கு நிறுத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2 மணி முதல் திரிபுரா முழுவதும் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.

செவ்வாய், 10 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon