மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்: மும்முனை வியூகம்!

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்:  மும்முனை வியூகம்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“உள்ளாட்சித் தேர்தலை 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில், நேற்று இரவு வரை ஆலோசித்து அதிமுக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது.

ஒருபக்கம் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி, மாறி மாறி தொடுக்கப்பட்ட வழக்குகளால் எழுந்தாலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவது என்பதில் உறுதியாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில நாட்கள் முன்பே தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சியினரை வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதே அவர்களிடம், ‘எதுவாக இருந்தாலும், உங்க கட்சி மாவட்டச் செயலாளரும், எங்க கட்சி மாவட்டச் செயலாளரும் பேசி முடிவு பண்ணிப்பாங்க’ என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினார்.

இந்த நிலையில் அதிமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தலைமைக் கழகத்தில் இருந்து சென்ற உத்தரவில், ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் 70% இடங்களில் அதிமுகதான் போட்டியிட வேண்டும். மற்ற 30% இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கூட்டணிக் கட்சியினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

வடமாவட்டங்களில் பாமக, தேமுதிக ஆகிய இரு கூட்டணிக் கட்சிகள் கடுமையாக டிமாண்ட் வைக்கக் கூடியவை. இங்கே மட்டும்தான் அதிமுகவுக்கு சிற்சில பிரச்சினைகள். தென்மாவட்டங்களில் பாமக இல்லை, தேமுதிகவுக்கும், பாஜகவுக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

பாமக முதலில் தனக்கு 30% இடங்கள் வேண்டுமெனக் கேட்டது. ஆனால் பேசிப் பேசி 15% இடங்களுக்கு பாமகவை சம்மதிக்க வைத்துவிட்டனர் அதிமுகவினர். எத்தனை பர்சன்டேஜ் என்று பேசி முடித்த பின்னரே, எந்தெந்த இடங்கள் என்று முடிவெடுத்தனர். சில மாவட்டங்களில் பாமகவுக்கு 13%, 12% என்று கூட குறைந்தது அதேபோல தேமுதிக 20% என்ற நிபந்தனையை ஆரம்பத்தில் விதித்தது. அவர்களிடமும் பேசி 10% என்ற அளவில் சம்மதிக்க வைத்துவிட்டது அதிமுக. பாஜகவுக்கு 10% என்ற அளவில் பேசி முடிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 12% வரை பாஜகவுக்கு அதிக ஷேர் கிடைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் நேற்று இரவு 11 மணி வரையிலும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் உட்கார்ந்து கூட்டணிக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் பேசி முடித்திருக்கிறார்கள்.

திமுகவிலோ இதற்கு நேர் மாறாக இருக்கிறது நிலைமை. உள்ளாட்சித் தேர்தல் வராது என்றே திமுகவின் பல நிர்வாகிகள் அசட்டையாக இருந்ததுதான் இதற்குக் காரணம். கடந்த 8ஆம் தேதி நடந்த மாசெக்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று பேசினார். ஆனால், இன்று காலை வரை பல மாவட்டங்களில் திமுக கூட்டணியில் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடியவில்லை என்பதே நிலைமை.

இவர்களுக்கிடையில் அமமுகவும் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண தீவிரமாக இருக்கிறார்கள். பொது சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமாகிவிட்டார் தினகரன். நாளை டிசம்பர் 13 தினகரனுக்குப் பிறந்தநாள். அன்று எல்லா மாவட்டங்களிலும் அமமுகவினரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய சொல்லிவிட்டார். தேர்தல் பணிகளில் அமமுகவினரிடம் இருக்கும் வேகம்கூட திமுகவினரிடம் இல்லை என்பதே லேட்டஸ்ட் அப்டேட்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வியாழன், 12 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon