மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 2 டிச 2020

திமுகவிலிருந்து விலகிய பழ.கருப்பையா

திமுகவிலிருந்து விலகிய பழ.கருப்பையா

திமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலக்கியவாதியான பழ. கருப்பையா 2011ஆம் ஆண்டு அதிமுக சார்பில் துறைமுகம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு, அதிமுகவையும், அக்கட்சியின் தலைமையையும் கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார். இதன் காரணமாக பழ.கருப்பையாவை அதிமுகவிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். அடுத்த நாளே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஆனாலும், சமீப காலமாக ஊடகங்களில் பேசும்போதும், பத்திரிகைகளில் எழுதும்போதும் அதிமுகவையும் திமுகவையும் ஒருசேர விமர்சித்துவந்தார். இதனால் அவர் விரைவில் திமுகவிலிருந்து விலகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திமுகவிலிருந்து விலகுவதாக இன்று (டிசம்பர் 12) அறிக்கை வெளியிட்டுள்ளார் பழ. கருப்பையா.

அதில், “சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் திமுகவில் சேர எனக்கு தயக்கம் இருந்தது. ஒரு பொதுவிழாவில் மிகைபடச் சொன்னாரோ என்ற அளவுக்கு கலைஞர் என்னை வலியுறுத்தி அழைத்தார். கலைஞர் மறைந்த அன்றே திமுகவிலிருந்து வெளியேறுவது குறித்து சிந்தித்தேன்.பாஜக எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிக்கொண்டே போனது.

கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன். ஸ்டாலினை நேரடியாகப் பார்த்து விடையும் பெற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலைப் பொதுவாழ்வின் அங்கமாக ஏற்பது, உட்கட்சிக்குள்ளேயே விமர்சிக்க முடியாத அளவுக்கு கட்சி விசுவாசம் என்ற பெயரில் அவற்றை நிலைநாட்டுவது, இவையெல்லாம் எந்த வகையிலும் பொதுவாழ்வுக்கு ஏற்புடையது அல்ல.

மாநிலங்கள் பல கூறுகளாக உடைந்து கிடப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது, இவையெல்லாம் மொழி, இன உணர்வை சிதைக்கும் போக்குகளாகும். இதிலுள்ள ஆபத்துக்களை திமுக சரியாக புரிந்துகொண்டிருக்கிறது என என்னால் கருத முடியவில்லை. வெறும் ஒருநாள் அறிக்கைகளோடு இவை முடிந்துவிடுபவை அல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஊழலே ஊழலை இடப்பெயற்சி செய்கிறது. மாற்று அரசியல் என்னும் கருத்தே என்னுடைய விலகலுக்கான காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon