மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

உதயநிதி போராட்டம்: தவிர்க்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்

உதயநிதி போராட்டம்: தவிர்க்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்

குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிர்த்து நேற்று (டிசம்பர் 13) திடீரென திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் ஆர்பாட்டத்தில் இறங்கினார்கள் அக்கட்சியின் இளைஞரணியினர்.

ஏற்கனவே இது தொடர்பாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டிருந்த நிலையில் இந்த வாய்ப்பை திமுக இளைஞரணி இழந்துவிடக் கூடாது என்று இளைஞரணியிடம் சொல்லப்பட்டதை அடுத்து அவசர அவசரமாக 12 ஆம் தேதி இரவு முடிவு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.

அதன்படி நேற்று காலை உதயநிதி சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார். ஒருமணி நேரத்தில் போய்விடுவார்கள் என்று போலீஸார் நினைக்கையில், திடீரென சாலை மறியலிலும் இறங்கினார் உதயநிதி, ஆயிரக்கணக்கான இளைஞரணியினர் திரண்டதால் பஸ்ஸில் ஏற்றி நந்தனத்தில் தங்க வைத்து மாலை 6.15 மணிக்குதான் விடுவித்தனர்.

உதயநிதி கூட எப்போதும் நிழல் போல இருக்கும் அன்பில் மகேஷ் உட்பட கட்சியின் எந்த எம்.எல்.ஏ., எம்பிக்களும் இந்தப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. காரணம் சட்ட திருத்த நகலை கிழித்து எறியும் போராட்டத்தில் ஈடுபட்டால் அதையே அடிப்படையாக வைத்து எம்.எல்.ஏ.பதவி தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதால் எந்த எம்.எல்.ஏ.வும் உதயநிதியின் போராட்டத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே சட்ட நகல் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது என்பதை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாறாக அவர் கைது செய்யப்பட்டு நந்தனத்தில் வைக்கப்பட்டிருந்தபோது எ.வ. வேலு, பொன்முடி உள்ளிட்ட பல கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சென்று உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், உதயநிதி உள்ளிட்ட 644 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் போலீஸார்.

நேற்று மாலை விடுவிக்கப்பட்டதும் நேராக திமுக தலைவர் ஸ்டாலினை சென்று சந்தித்து முதல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டதற்காக வாழ்த்து பெற்றார் உதயநிதி.

சனி, 14 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon