மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 டிச 2019

காங்கிரஸ் பேரணி: ஸ்தம்பித்த டெல்லி!

காங்கிரஸ் பேரணி: ஸ்தம்பித்த டெல்லி!

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் இன்று நடந்த பேரணியில் வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள், மோடி அரசு பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டது, நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தச் செயல்பட்டு வருகிறது என்று கண்டித்தனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் தேசத்தை காப்போம் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. காஷ்மீர் 370 சட்டத் திருத்தம் நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை, ஆகியவற்றைக் கண்டித்து இந்த பேரணியை நடத்தக் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று பேரணி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர். சுமார் 1 லட்சம் தொண்டர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்களின் வருகையால் தலைநகரே இன்று ஸ்தம்பித்துக் காணப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், ”ஆறு மாதங்களில், பிரதமர் மோடி அரசு இந்தியாவின் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டது. பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகிலேயே நாம் முதலில் இருப்பதாகக் கூறுகிறார். பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை. நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. ராணுவத்தினரை நிறுத்தி காஷ்மீர் மக்களின் குரலை அடக்கி வருகின்றனர். வட கிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகிறது. ஒவ்வொரு நாளும் கொலை மற்றும் வன்கொடுமை செய்திகளை தான் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.

ராகுல் காந்தி பேசுகையில், ரேப் இன் இந்தியா என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் அல்ல ராகுல் காந்தி. உண்மையை சொன்னதற்காக என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. பிரதமரும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் குறித்து பேசிய அவர், நம் நாட்டின் வலிமையே பொருளாதாரம் தான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகிதத்தை எப்படி அடைந்தோம் என்று மற்ற நாடுகள் நம்மை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். ஆனால் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.200க்கு விற்கப்படுகிறது. மோடியின் கையால் நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பழிப்பு குறித்துப் பேசிய ராகுல், ”2016ல் தொலைக்காட்சியில் தோன்றி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். தற்போது பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள முடியாமல் இருக்கிறோம்” என்றுள்ளார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர், அசாம், நாகாலாந்து, திரிபுராவுக்குச் சென்று பாருங்கள் அங்கு போராட்டங்கள் பற்றி எரிகின்றன. நாட்டை பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் தான் அரசாங்கம் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அலட்சியமாக எங்களுக்கு தெரியாது என்று சொல்கின்றனர்” என்றும் கூறியுள்ளார்.

சோனியா காந்தி பேசுகையில், ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. நாட்டைக் காப்பாற்றக் கடைசி மூச்சு வரை போராட வேண்டும். மோடி – அமித் ஷா அரசாங்கம் நாடாளுமன்றத்தைப் பற்றியோ அல்லது இதர நிறுவனங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை, உண்மையான பிரச்சினைகளை மறைத்து மக்களை போராட வைப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

சனி 14 டிச 2019