bபிகே என்ட்ரி! அதிரும் திமுக ஐடி விங்!

public

கழக அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் மினி தொடர் 11

ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி  பரிந்துரையின் பெயரில்  பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு  தேர்தல் உத்தி வகுப்பாளராக வந்திருக்கிறார் என்பதை பார்த்தோம். ஆந்திராவில் கடந்த  சட்டமன்றத் தேர்தலில் கார்ப்பரேட் வித்தகரான சந்திரபாபு நாயுடுவையே தோற்கடித்த பெருமை ஜெகன் மோகன் ரெட்டிக்கு உண்டென்றால், அதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு கிஷோருக்கும்   உண்டு என்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறது திமுக.

ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வகுக்கும் வியூகங்களில் பாதி அதன் தேர்தல் அறிக்கை மூலம் வெளிப்படும். மீதி உள் வியூகமாக கருதப்படும். திமுக தேர்தல் அறிக்கையின் வித்தியாசமான அறிவிப்புகள் ஒவ்வொரு அரசியல் மாணவருக்கும் பாடமாகவே அமைந்திருக்கின்றன என்று சொல்லலாம். எப்போதோ திமுக அறிவித்த தேர்தல் அறிக்கைகள் இப்போது வட இந்திய தேர்தல்களில் புது அம்சங்களைப் போல அறிவிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

தேர்தல் நேரத்தில் மக்கள் நாடித்துடிப்பை பிடித்து பார்த்து அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்தி, கூட்டணிக் கட்சிகளில்  சிலவற்றை வெளியேற்றி, வெளியே உள்ள கட்சிகளில் சிலவற்றை உள்ளே கொண்டுவந்து திமுகவின் தேர்தல் வியூகங்களையெல்லாம் தொகுத்தால், அதுவே ஒரு அரசியல் பெரும் பாடமாக அமையும் என்பதில் கலைஞரின் எதிர்ப்பாளர்கள் கூட மாற்றுக்கருத்து கொள்ளமாட்டார்கள்.

இந்த நிலையில்தான்  கலைஞருக்கு பின்னான காலகட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை முழுமையாக வெற்றி பெற வைத்த மு.க .ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கிஷோரோடு  வியூகக் கூட்டணி அமைத்திருக்கிறார். திமுகவுக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் குழுமத்துக்கும் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் நிர்வாகிகள் இடையே என்ன மாதிரியான கருத்துக்களை ஏற்படுத்தியிருக்கிறது?

பிகேவின் என்ட்ரியால் அதிமுகவைப் போலவே முதல் அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது திமுகவின் ஐடி விங். பிகேவின் என்ட்ரி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திமுக ஐடிவிங் நிர்வாகிகளிடையே கேட்டோம்.

“தலைமையின் முடிவு நடந்தேறிவிட்டது. அதை மாற்ற எங்களால் முடியாது. ஆனால் பிகேவின் டீமுக்கும் திமுகவின் ஐடி விங்குக்கும் மோதல்கள் என்பதை விட, ஊடல்கள் நெருடல்கள் நேர்ந்திடும் என்பதைத் தவிர்க்கவே முடியாது.

திமுகவில் ஐடி விங் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆயினும் இன்றுவரை ஐடி விங்குக்கு அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான அளவு நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. முதலில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் சிலர் பணிச் சூழலாலும், சொந்தக் காரணங்களாலும் பணியில் இருந்து விலகிவிட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை இன்னும் நியமிக்கவில்லை. பல மாவட்டங்களில் மாவட்ட துணை அமைப்பாளர் போன்ற இரண்டாம் நிலைப் பதவிகள் இன்னும் காலியாகவே இருக்கின்றன.

மாவட்ட அமைப்பாளர்களில் பெரும்பாலும் பலரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். உழைத்து வருகிறார்கள். இவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து மிகச் சிறந்த பயிற்சி கொடுத்து வருகிறார் ஐடி விங் மாநில செயலாளர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன். குறிப்பாக கடந்த இடைத்தேர்தலில் தேர்தல் களத்திலும், பிரசார முடிவுக்குப் பின் வாக்குப் பதிவு வரையிலான காலகட்டத்திலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் எந்தெந்த இடங்களில் ஏன் வாக்கு குறைந்தது என்பது வரையிலும் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்திருக்கிறது ஐடி விங்.

ஆனால் இப்போது பிகேவின் வருகையை ஒட்டி ஐடி விங் மாநில செயலாளர் பி.டி.ஆர்.பி. தியாகராஜனின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. தனக்கு திமுகவுக்குள் இருந்து யாருடைய ஆலோசனையும், இன் புட்களும் தேவையில்லை என்பது பிகே- திமுக தலைமையிடம் திட்டவட்டமாக தெளிவாகக் கூறிவிட்ட ஒன்று.

ஆனால் திமுக தலைமையிலிருந்து சிலர், ‘உங்களிடம் இருக்கும் டேட்டாக்களை பிரசாந்த் கிஷோருக்கு கொடுங்கள். அவருக்கு முதற்கட்ட ஒத்துழைப்பைக் கொடுங்கள்’ என்று சொல்லியிருப்பதாகவும் கேள்வி. ஆனால் இதற்கு பிகே ஒப்புக் கொள்வாரா, திமுகவின் ஐடி விங்கிடம் இருக்கும் டேட்டாக்களை அவர் பெற்றுக் கொள்வார். ஆனால் அதை அவர் நம்புவாரா? இதெல்லாவற்றையும் விட ஐடி விங்கின் பயிற்சி பெற்ற தேர்தல் வியூகங்கள் இனி என்னாகுமோ?” என்று கேட்கிறார்கள் ஐடி விங் நிர்வாகிகளே.

அடுத்து மாவட்டச் செயலாளர்கள். உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களின் போது ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தன் நம்பிக்கைக்குரியவர்களிடம் கேட்ட முதல் கேள்வி, ‘யாருய்யா அந்த பிரசாத் (சில மாவட்டச் செயலாளர்கள் இப்படித்தான் பெயரை உச்சரிக்கிறார்கள்) கிஷோர்… அவரு பெரிய இவரோ?”

அவைக் குறிப்பில் ஏற்றும்படியான நடையில் இந்தக் கேள்வியின் மொழிநடையை மாற்ற்றியமைத்திருக்கிறோம். இந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் திமுக மாசெக்களின் எண்ண ஓட்டம் என்ன?

(கார்ப்பரேட் அரசியல் பயிலக் காத்திருங்கள்)

[தெலுங்கு தேசத்துக்கு உதவிய திமுக; திமுகவுக்கு உதவிய ஜெகன்](https://minnambalam.com/k/2019/12/14/33/teligu-desam-party-seek-help-from-dmk-now-ysr-helps-to-dmk)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *