மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

மார்ச்சுக்குப் பிறகு... ரஜினியின் அரசியல் கணக்கு!

மார்ச்சுக்குப் பிறகு... ரஜினியின் அரசியல் கணக்கு!

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ரஜினிகாந்த் திரைப்படம் எப்போதெல்லாம் திரைக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சுதான் அதிகம் எழும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, ‘அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும்’ ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

எனினும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், இன்று வரையில் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா, மாட்டாரா என்ற விவாதம் முற்றுப்பெறாமலேயே இருந்துவருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ரஜினியின் பேச்சுகளில் அரசியல் நெடி அதிகம் தென்படுகிறது. அது அதிகளவில் சர்ச்சைகளையும் உண்டாக்குகிறது.

கடந்த 14ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் பொன் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில், ராமர், சீதா ஆகிய இந்துக் கடவுள்களின் நிர்வாணப் படங்களைப் பெரியார் ஊர்வலமாக எடுத்துச் சென்று செருப்பால் அடித்ததாகப் பேசியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அதுபோன்றுதான், ‘முரசொலி வைத்திருப்பவர் திமுககாரர். துக்ளக் வைத்திருப்பவர் அறிவாளி’ என ஒப்பிட்டும் பேசினார். முரசொலி விவகாரத்தில் திமுகவினர் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவிக்க, பெரியாரைக் கொச்சைப்படுத்தி உண்மைக்கு மாறான தகவலைச் சொன்னதாக ரஜினி மீது திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

ரஜினி வாய் தவறி அவ்வாறு பேசியிருக்கலாம் என கே.எஸ்.அழகிரி கூறியிருந்தாலும், தனது பேச்சுகள் அனைத்தையும் அவர் திட்டமிட்டுத்தான் பேசிவருவதாகக் கூறுகிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். ‘பலரின் ஆலோசனைகளைப் பெற்றுதான் ரஜினி இவ்வாறு பேசுகிறார். அதனால்தான் மற்றவர்களைவிட ரஜினியின் ஒவ்வொரு பேச்சும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுகிறது’ என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்போது, சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ள ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தினரைச் சந்தித்தே ஆறு மாதங்கள் ஆகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

துக்ளக் விழாவுக்கு முன்னதாக ரஜினிக்கு நெருக்கமான டாக்டர் நண்பர் ஒருவர், அவரை சந்தித்து ஒரு மணி நேரம் வரை பேசியுள்ளார். தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து அவரிடம் மிகவும் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் ரஜினி.

‘தமிழகத்துல இப்போ அரசியல் மோசமா இருக்கு. மக்கள் திமுக, அதிமுக என இரு கட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மார்ச் மாதத்துக்கு மேல் ஒரு நல்ல முடிவை எடுப்போம். அப்போது என் தலைமையை ஏற்றுவருபவர்கள் வரட்டும். மற்ற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் இப்போதே நம்முடன் வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். நல்லதே நடக்கும். எல்லாம் அந்த ஆண்டவன் முடிவு’ என்று அவரிடம் அழுத்தமும் திருத்தமுமாகச் சொல்லியுள்ளார். ஆகவே, சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஜினி அரசியல் முடிவைப் பற்றி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “தலைவர் விரைவில் கட்சியை ஆரம்பிப்பார். உடனே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, மக்கள் மனத்தில் பதியும் வகையிலான சின்னத்தைப் பெறுவார். 2021 தேர்தலைக் கூட்டணியுடன் சந்திக்கவுள்ளோம். அதற்கான பணிகள்தான் தற்போது வேகமெடுத்துள்ளன. ஒரு குழு இதற்காகப் பணியாற்றி வருகிறது” என்று தெரிவித்தார்.

சனி, 18 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon