மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

ஐந்து அமைச்சர்கள் நடத்திய ரகசிய யாகம்!

ஐந்து அமைச்சர்கள் நடத்திய ரகசிய யாகம்!

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆயுள் விருத்திக்காகவும் தமிழக அமைச்சர்கள் ஐந்து பேர் கேரளாவில் ரகசிய யாகம் வளர்த்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். அவரின் வழியில் தற்போதைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். ஜோதிடர்களின் ஆலோசனை இல்லாமல் முக்கிய முடிவுகளையும் எடுப்பதில்லை என்ற அளவுக்கு அவர்களின் நம்பிக்கை உள்ளது. இதற்கு உதாரணமாக கடந்த வருடம் தலைமைச் செயலகத்திலுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறையில் யாகம் வளர்க்கப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பல யாகங்களை வளர்த்த முக்கிய குருக்கள் ஒருவர் நம்மிடம் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். “ஜெயலலிதா இருக்கும்போது முக்கியமான நேரத்தில் மட்டும் இந்த கோயிலில் இந்த யாகம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வார். சில முக்கியமான யாகங்களின்போது அவரே நேரில் கலந்துகொள்வார். நாங்கள் உச்சரிக்கும் மந்திரத்தை உற்று கவனிப்பார். சிறிய தடுமாற்றம் ஏற்பட்டாலும் கூட அவரின் கோபம் உச்சமாகிவிடும். அவரே ஸ்லோகமும் சொல்வார்.

இப்போது முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரை யாகத்தை முழுமையாக நம்பி அதற்காகவே பல லட்சங்கள் வரை செலவு செய்து வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு மாதத்திற்கு ஒருமுறை திருப்பதிக்கு போய் வருவதோடு, குலதெய்வம் கோயிலுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்கிறார். அவரது மனைவி துர்க்கை கோயிலுக்கும் காளி கோயிலுக்கும் சென்று யாகம் செய்கிறார்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “தமிழக அமைச்சரவையில் பவர்புல்லாக விளங்கும் கொங்கு பகுதியைச் சேர்ந்த இருவர் உள்பட ஐந்து முக்கிய அமைச்சர்கள் கேரளாவில் உள்ள பிரபலமான கோயிலில் சத்ரு சமஹார யாகமும், அதிகமான சக்தி வாய்ந்த சூலினி யாகமும் செய்துள்ளனர். சூலினி யாகம் செய்தால் அதற்கு உடனே பலன் கிடைக்கும். எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது. தன்வசமுள்ள அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். உடலிலுள்ள பிணி நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்” என்ற தகவலையும் அந்த குருக்கள் பகிர்ந்துகொண்டார்.

சூலினி யாகம் எப்படி செய்வார்கள் என்று நாம் கேட்டபோது, “யாக குண்டம் 6 அடி நீளம், 6அடி அகலம், 10 அடி ஆழம் இருக்கும். இதில்தான் யாக பொருள்களைப் போட்டு பிழை இல்லாமல் மந்திரம் ஓதுவார்கள்” என்று தெரிவித்தவரிடம், இந்த யாகத்தின் முக்கிய நோக்கம் என்னவென்று கேட்டோம்.

சில மணி நேரத்திற்குப் பிறகு நமது லைனுக்கு வந்தவர், “சசிகலா சிறையிலிருந்து தற்போது வெளியே வரக்கூடாது. திமுக ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த யாகம் செய்யப்பட்டது. அடுத்த யாகத்தை மார்ச் மாதம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த யாகத்தால் திமுக தரப்புக்கு பின்னடைவு ஏற்படலாம். சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதில் சிக்கல்கள் உருவாகும்” என்று தெரிவித்தார்.

மக்களுக்குச் சேவை செய்து அதன்மூலம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவதற்கு முயற்சிசெய்யாமல், அரசியல் ரீதியாக எதிரிகளை வீழ்த்த யாகங்கள் வளர்ப்பது, டன் கணக்கில் பசுநெய்யை ஊற்றுவது, லட்சக்கணக்கில் செலவு செய்வது போன்ற பிற்போக்குத்தனமான காரியங்களை செய்துவருவது வேடிக்கையாக உள்ளதாகக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திங்கள், 20 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon