மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

புதிய இந்தியாவுக்கு வலுசேர்க்கும் தமிழகம்: மோடி

புதிய இந்தியாவுக்கு வலுசேர்க்கும் தமிழகம்: மோடி

புதிய இந்தியாவுக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் யோசனை இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி வழியாக “மன் கி பாத்” (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்த வருடத்தின் முதல் மன் கீ பாத் நிகழ்ச்சி குடியரசு தினத்தில் அமைந்தது. எப்போதும் காலை 11 மணிக்கு மன் கீ பாத் உரையாற்றும் மோடி, குடியரசு தின நிகழ்ச்சிகளால் மாலை 6 மணிக்கு உரையாற்றினார்.

நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, “குடியரசு தினத்தன்று உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று புதிய பாடங்களைப் பற்றி விவாதிக்கவும், நம் நாட்டு மக்களின் சமீபத்திய சாதனைகளையும், நாட்டையும் கொண்டாடுவதற்கும் மன் கீ பாத்தில் இணைந்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பரிந்துரைகள், முயற்சிகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் கற்றுக்கொள்வதற்குச் சிறந்த ஒரு தளமாக மன் கீ பாத் உள்ளது” என்று தெரிவித்தார்.

“மழைநீர் சேகரிப்புக்கு ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்துவதற்காகப் புதுமையான யோசனை தமிழகத்திலிருந்து முளைத்துள்ளது. நமது நாடு இதுபோன்ற எண்ணற்ற யோசனைகளால் நிரம்பியுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற யோசனைகள் புதிய இந்தியாவுக்கு வலுசேர்க்கிறது. ஆழ்துளைக் கிணறுகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க இது உதவும். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கவும் முடிவும். அவர்களை நாம் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்ட மோடி, இரு வாரங்களுக்கு முன்பு பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றபோது 25 ஆண்டுகள் புரூ பழங்குடியினை அகதிகளின் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவந்து அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது எனவும் கூறினார்.

மேலும், “வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை, ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்’ கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விளையாட்டுத் துறை வேகமாக வளரும். இதனால் தேசிய அளவில் புதிய விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். புதிய திறமைகள் கொண்ட வீரர்கள் நாட்டுக்குக் கிடைப்பார்கள்” என்றும் தெரிவித்தார்.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon