மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 24 பிப் 2020

டிஜிட்டல் திண்ணை: பாஜகவை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது! எடப்பாடியிடம் அமைச்சர்கள்

டிஜிட்டல் திண்ணை:  பாஜகவை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது! எடப்பாடியிடம் அமைச்சர்கள்

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் என்பதை விட அதிமுக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது’என்று கடுமையாக குற்றம் சாட்டினார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பதிலளித்தார். பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேள்வி கேட்டார் அவர்.

இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக இடையேயான வார்த்தைப் பரிமாற்றங்கள் சூடு அடைந்துகொண்டே இருக்கின்றன. இடையில் அமைச்சர் பாஸ்கர், ‘பாஜகவை விட்டு எப்போது போவோம் என்று அதிமுக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்று சொன்னார். பின் அதை சமாளித்தார். அதாவது எப்போதும் பேசும் அமைச்சர்கள் முதல் எப்போதாவது பேசும் அமைச்சர்கள் வரை அத்தனை பேரும் பாஜகவை குறிவைத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த நிலையில் திருச்சியில் நடந்த பாஜக பிரமுகர் கொலை குறித்தும் பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுகவை விட அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘சட்டத்தின் ஆட்சி அரசாங்கத்தில் இருந்து நழுவி பல பேரிடம் சென்றுவிட்டது. காவல்துறையின் கட்டுப்பாடு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று பேசியிருக்கிறார் பொன்.ராதா.

இந்த சூழலில்தான் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். இருவரும் சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு, பின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்தார்கள். அதற்குப் பின் எடப்பாடி ஒவ்வொரு அமைச்சருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இரவு வரை இப்படி ஒரு ஆலோசனை திடீரென அதுவும் தலைமைச் செயலகத்தில் ஏன் நடந்தது என்று பல்வேறு காரணங்கள் பேசப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சி நகரப்புறத் தேர்தல், அமைச்சரவை மாற்றம், கட்சிப் பிரச்சினைகள் என்று பலவற்றையும் விவாதித்த முதல்வர் எடப்பாடி, பாஜக பற்றியும் அமைச்சர்களிடம் கேட்டிருக்கிறார். இதற்கு பல அமைச்சர்கள்,’பாஜகவோடு கூட்டணி வைத்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் ஓட்டுக் கேட்கக் கூட போக முடியாது. நம் சாதனைகளை சொல்லியே ஓட்டுக் கேட்கலாம், மோடி செய்ததை எல்லாம் சொன்னால் நமக்கு ஓட்டு கிடைக்காது’ என்று வெளிப்படையாகவே முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள்.

விரைவில் பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக தரப்பில் இருந்து அதிகார பூர்வ பதில்வரலாம் என்று காத்திருக்கிறார்கள் அமைச்சர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

செவ்வாய், 28 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon