மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

ராஜீவ்காந்தி மருத்துவமனை: கொரோனா வார்டில் ரோபோட்!

ராஜீவ்காந்தி மருத்துவமனை: கொரோனா வார்டில் ரோபோட்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். இவர்களுக்கும் கொரோனா தொற்று எளிதில் ஏற்படலாம் என்பதால் அவர்களைப் பாதுகாக்கவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது என்றாலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதைக் குறைக்கும் வகையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரோபோட்டை பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ஜெயந்தி கூறுகையில், கொரோனாவை எதிர் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சிறப்பு வார்டுகள் , உயர் தொழில்நுட்ப மருத்துவ வசதி தயார் நிலையில் உள்ளன.

மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கொரோனா பாதித்துள்ள நோயாளிகளுக்குத் தண்ணீர், உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்குவதற்காக நாள்தோறும் பலமுறை நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனை ஓரளவு குறைக்கும் பொருட்டு, தொழில்நுட்ப ரீதியிலான தீர்வை நாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நோயாளிகளுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை வழங்கும் பணிகளில் ரோபோட்டை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் மருத்துவ சேவைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக நோயாளிகளுடன் இருந்தால் மட்டும் போதும்.

ரோபோக்கள் பயன்படுத்தும் போது அவை நோயாளிகள் இருக்கும் அறைக்கு முன் சென்றதும் ஒலி எழுப்பும். இதையடுத்து நோயாளிகள் கதவைத்திறந்தால் உணவு மற்றும் மருந்தை எடுத்துக் கொள்ளலாம். அப்போது ரோபோவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் திரை மூலம் நோயாளிகளுக்குச் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள்.

நோயாளிகளுக்கும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இதன் மூலம் கேட்கலாம். பின்னர் ரோபோ அங்கிருந்து வந்ததும் சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

முதலாவதாக இரண்டு ரோபோக்கள் பயன்படுத்தத் திட்டமிட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரோபோக்களை ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.

கவிபிரியா

செவ்வாய், 24 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon