மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 7,500 ரூபாய்! மோடிக்கு சோனியா யோசனை!

  ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 7,500 ரூபாய்! மோடிக்கு சோனியா யோசனை!

கொரோனா  வைரஸ்  தொற்றை எதிர்த்து இந்திய நாடு 21 நாள் ஊரடங்கு  உத்தரவில் இரண்டாவது நாளை இன்று (மார்ச் 26)  கடந்து கொண்டிருக்கும் நிலையில்.... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு  முக்கிய கடிதம் ஒன்றை  எழுதியுள்ளார்.அதில் வைரஸ் தொற்றுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சோனியாகாந்தி சில யோசனைகளையும் பிரதமரிடம் முன்வைத்துள்ளார். “21 நாள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த  காலம்தான்,  இந்திய விவசாயத்தின் முக்கியமான  அறுவடை  காலம். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மார்ச் இறுதியில்தான் பல்வேறு விவசாய பெருமக்கள் அறுவடையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயத்தை பொருளாதார ரீதியாக நம்பியுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறுவடை நேரத்தில் அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்யும் பயிர்களுக்கு உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி நியாய் யோஜனா என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. அது ஏழை எளிய மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் அளித்தது. அந்தத் திட்டத்தை இப்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் ஒவ்வொருவரது கணக்கிலும், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும், முதியோர் உதவித்தொகை பெரும் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களின் வங்கி க் கணக்கிலும் 7,500 ரூபாய் செலுத்தி அவர்களின் வாழ்வில் இந்த 21 நாள் ஊரடங்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு அரசு காக்க வேண்டும்” என்று சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

-வேந்தன்

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon