மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

தோட்ட தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பிய விவசாயி!

தோட்ட தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பிய விவசாயி!

தலைநகர் டெல்லியில் விவசாயி ஒருவர் தனது காளான் பண்ணையில் பணியாற்றி வந்த 10 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 70,000 ரூபாய் செலவில் விமானம் மூலம் சொந்த ஊர் அனுப்பிவைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் எந்த உதவியும் செய்யாததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையும் சமீப காலமாக பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் பணி புரிந்த தொழிலாளர்களை விமானத்தில் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பிவைத்து அனைத்து முதலாளிகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

தலைநகர் டெல்லியை அடுத்துள்ள திகிபூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி பாப்பன் சிங். இவர் தனது நிலத்தில் காளான் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவரது பண்ணையில் பிகார் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கடந்த 20 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகின்றனர். இதனிடையே கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இதையடுத்து அந்த தொழிலாளர்களை தன்னுடனேயே தங்கவைத்துக்கொண்ட பாப்பன் சிங், கடந்த இரண்டு மாதங்களாக அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி பாதுகாப்பாக பார்த்துகொண்டார். தற்போது விமான சேவை தொடங்கியுள்ளதை தொடர்ந்து சுமார் 70,000 ரூபாய் செலவு செய்து, விமானம் மூலம் சொந்த ஊருக்கு தனது தொழிலாளர்களை பத்திரமாக அனுப்பிவைக்கவுள்ளார்.

இது குறித்து பேசிய தொழிலாளர்கள், “நாங்கள் விமானத்தில் செல்வோம் என வாழ்நாளில் இதுவரை நினைத்துப் பார்ததில்லை. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த எங்களிடம் வார்த்தைகள் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon