மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: தயிர் அவல் தோசை

கிச்சன் கீர்த்தனா: தயிர் அவல் தோசை

கோடையில் நல்ல ஜீரண சக்தியைத் தருவது தயிர். இதில் உள்ள புரோட்டீன் பாலில் உள்ள புரோட்டீனைவிட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவிகிதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும். தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். இந்த தயிர் அவல் தோசை, காலை நேரத்தை ரம்மியமாக்குவதுடன் நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும்.

என்ன தேவை?

இட்லி அரிசி – ஒரு கப்

உளுத்தம்பருப்பு – கால் கப்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

அவல் - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும். மாவு பாதி அரைந்ததும் அதனுடன் அவல், தயிர் சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். பிறகு மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் எண்ணெய்விட்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும். விருப்பமான சட்னி, சாம்பாருடன் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: தயிர் அவல் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும். அதேபோல நிலவுகின்ற வெப்ப நிலையைப் பொறுத்து மாவு புளிக்கும் நேரமும் சிறிது மாறுபடும்.

நேற்றைய ரெசிப்பி: தயிர் அவல்

புதன், 3 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது