மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: கோயில் காட்டிலிருந்து பனங்காட்டுக்கு - ஒரு பயணம்

சிறப்புக் கட்டுரை: கோயில் காட்டிலிருந்து பனங்காட்டுக்கு - ஒரு பயணம்

நிவேதிதா லூயிஸ்

உலக சுற்றுச்சூழல் தினம் உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. “காடு” என்பதை எங்கோ தொலைவில் மனிதன் வாழிடத்திலிருந்து வெகு தூரத்தில் கற்பனை செய்து பார்த்திருந்த ஆள் நான் இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகாமையையும், சுழித்து ஓடும் பொருநை ஆற்றின் ஆர்ப்பரிப்பையும் பார்த்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு, கிர்ர்ர்ர்ர் என்ற காட்டின் ரீங்காரம் அடிவயிற்றில் அட்ரீனலின் சுரக்கச் செய்யும் சக்தி வாய்ந்தது. சைக்கிளில் பயணித்தால் மூன்றே கிலோமீட்டர் தொலைவில் தலையணை, அங்கிருந்து மேலே அகஸ்தியர் அருவி, அதனுடன் மந்திகள், அவ்வப்போது மான், மயில், எக்கச்சக்க பாம்புகள் என்று காட்டுடன் இயைந்த வாழ்க்கைதான் சிறுவயதில் எனக்கு வாய்த்தது.

சமீபத்தில் காணிக்குடி காணிக்காரர்கள் பற்றிய எரிக் மில்லரின் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதில் ‘பன்னி மாதிரி உறங்காத, மிளா போல சாடாத’ என்ற அவர்களது பேச்சு வழக்கு சொற்றொடர்களை வாசித்ததும், பாட்டியும் அம்மாவும் சிறுவயதில் நம்மை இதே சொற்றொடர்களைக் கொண்டு ஏசியது மனதுக்குள் ஓடியது. அன்றாட செய்கைகளை காணி மக்கள் எப்படி காடுகளுடன் தொடர்புபடுத்தி பேசி வந்தார்களோ, அதே பேச்சு வழக்கு காடுகளை ஒட்டிய சிறு கிராமப்பகுதி மக்களின் பேச்சிலும் கலந்தே விட்டிருக்கிறது. காணிகளின் பெரும் சொத்து அவர்களது மருத்துவப் பச்சிலைக் காடுகள். இந்தக் காடுகளைப் பேணிப் பாதுகாக்கும் பணியைக் காணிகள் உயிரினும் மேலாகச் செய்வதுண்டு. ‘காடு புலியைக் காக்கும்; புலி காட்டைக் காக்கும்’ என்ற சொற்றொடர் காணிகள் வழங்கிவரும், நான் சிறுவயதில் சுற்றித்திரிந்த முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உண்டு. இன்று காடுகளும் அருகிப் போயின, பச்சிலை அறிவும் காணாமல் போனது.

இப்படிக் காணாமல் போனவையின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவை ‘புனிதக் காடுகள்’. உலகெங்கும் உள்ள பண்பாடுகளில் இந்தப் புனிதக்காடுகள் பாதுகாக்கப்படுவதுண்டு. செல்டிக், பால்டிக், ஜெர்மானிக், கிரேக்கம், ரோமை, ஜப்பான், மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கச் செவ்விந்தியர் என்று பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் காடுகள் இருந்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 448 ‘கோயில் காடுகள்’ உண்டு என்று பி.எஸ்.சாமி, குமார் மற்றும் சுந்தரபாண்டியன் என்ற ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும் இந்தக் காடுகளுக்கு அருகாமையில் ஐயனார், சாஸ்தா, அம்மன், கிராம தேவதைகள், சுடலை, நாகர்கள் என்று பல சிறு தெய்வக் கோயில்களும், அடர் காடுகளுக்கு அருகாமையில் சைவ, வைணவ கோயில்களும் உள்ளன.

நான் வாழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் இவ்வாறான ஆறு புனிதக் காடுகள் உண்டு. அவற்றில் சர்வ சுதந்திரமாக என்னவென்றே அறியாமல் சுற்றித் திரிந்த காலமும் உண்டு. பாபநாசம் சொரிமுத்தையன் கோயில் காடு, பாபநாசம் திருநீலகண்ட வனப்பேச்சி (வனப்பேச்சி என்பது தான் ஊரில் வழங்குபெயர்) காடு, மேலணை காட்டுக்கருமாண்டி அம்மன் காடு, பாபநாசம் காட்டுக்கருமாண்டியம்மன் காடு, காரையாறு பேச்சியம்மன் காடு, அகத்தியர் அருவி சிவன் காடு என்று மருதம், நாவல் என்று பெருமரங்கள் சூழ்ந்திருக்கும் அடர் காடுகள் இவை. இவற்றை கேரளப் பகுதியில் ‘காவுகள்’ என்று வழங்குவதுண்டு. அந்தப் பெயர்களே இன்று ஊர்ப்பெயர்களாகவும் வழங்கிவருவதுண்டு. ஆரியங்காவு, ஊர்ப்பழச்சிக் காவு, மடயிக்காவு, அந்தளூர்க்காவு என்று இந்தப் புனிதக்காடுகளின் பெயர் தாங்கிய ஊர்களே அங்குண்டு. இந்தக் காடுகளில் நடக்கும் ‘தெய்யம்’ விழாக்கள், நாகர் வழிபாடுகள் வெகுபிரசித்தம்.

சொரிமுத்தையன் கோயில் காட்டில் முடியெடுக்கும் வழக்கமும், காட்டுக்குள் மரங்களில் தொட்டில் கட்டுவதும், சலங்கைகள் கட்டுவதும், வண்ண வண்ணக் கயிறுகள் கட்டுவதும், காட்டுக்குள் பொங்கல் வைப்பதும் வாடிக்கை தான். இந்தக் காடுகளை ஒருவழியாக 2002ஆம் ஆண்டு அரசு வனங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவந்திருந்தாலும், இன்று காட்டுக்குள் சென்று பொங்கலிடும் கூட்டம் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. நகர்ப்புறத்து சாமிகளின் ஆக்கிரமிப்பில் ஐயன் கோயில் காடுகளில் பொங்கல் வைப்பதும், கிடா வெட்டுவதும், குதிரை வைப்பதும் வெகுக்குறைவே.

இந்த மலைக்காட்டிலிருந்து நான் வாழ்க்கைப்பட்டுச் சென்றது கடற்காட்டுக்கு. அம்மாவின் தோழியான மோட்சம் சிஸ்டர் சொல்வார், “ஏட்டி, நீ மலங்காட்டு எலும்பிச்சையா இருந்து கடப்பொறத்து உப்புக்குலா வாக்கப்பட்டு ஊறுகாயாகிப் போன?” என்று! சில நேரம் சிரிப்பாக இருந்தாலும், அது தான் உண்மை. அவர் விளையாட்டாய் அப்படிச் சொன்னாலும், குறிஞ்சித் திணையில் ஊறிய என் வாழ்க்கை, நெய்தல் நிலப்பரப்பின் உப்புடன் விளைந்து, சீனப்பரணிக்குள் ஆண்டாண்டாய் பாதுகாப்பிலிருக்கும் ஊறுகாயாய்த் தான் போனது. இந்தத் திணைமாற்றத்தை உறுதி செய்ததும் உப்பே தான்!

திருமணமாகி கணவன் வீட்டுக்குப் புகும் பெண்ணின் முன் ஓலைப் பெட்டி நிறைய கல் உப்பைக் கொணர்ந்து வைத்து, அவள் கையால் உப்பை இரு கைகளையும் சேர்த்து அள்ளிப் போடும் சடங்கு என் புகுந்த வீட்டிலும் உண்டு. இந்தியத் திருமணங்களில் உப்பு ஆற்றும் பங்கு அளப்பரியது. உப்பு வளமையின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. சைக்கோ அனலிஸ்டுகளான வுல்ஃபன்ஸ்டெயின் மற்றும் எர்னஸ்ட் ஜோன்ஸ் இருவரும் உப்பை ஆண்மை மற்றும் வீரத்தின் அறிகுறியாகக் கருதுகிறார்கள். “உப்பு சத்தியாகிரகத்தில் ஆங்கிலேயரின் மூக்கை உடைத்து காந்தி உப்பை அள்ளியது அவர்களது ஆளுமையைக் கேள்விகேட்டதும், அதிகாரத்தை, அது காட்டும் ஆண்தன்மையைத் தனதாக்கிக் கொண்டதன் குறியீடு” என்று இருவரும் பதிவு செய்கிறார்கள்.

‘கடல்விளை அமுதம்’, ‘வெண்கல் அமிழ்தம்’ என்று உப்பைக் கொண்டாடுகின்றன சங்கப்பாடல்கள். கவிஞர் கலீல் ஜிப்ரான், “நம் கண்ணீரிலும், கடலிலும் உப்பு கொட்டிக்கிடக்கிறது; உப்பில் புனிதமான ஏதோ ஒன்று இருக்கிறது” என்று எழுதுகிறார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி ஹோமர், தான் எழுதிய ‘ஒடிசியில்’ உப்பின் சுவை அறியாதவர்கள் என்று டிராய் நகரை வென்ற எபிரோது மக்களைப் பகடி செய்கிறார்.

கணவரின் ஊரான வேம்பாரில் கணவர் வீட்டுக்குச் சொந்தமான காடு ஒன்று இருந்தது. இந்தக் காடு, “பனங்காடு”. பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் இந்தப் பெரிய பனங்காடுகளில்தான் அவர்களது மூதாதையர் வசித்து வந்தனர். ஆள் அரவமில்லா மணற்காடு அது. இன்று நடந்தாலும், கால் புதையப் புதைய நடக்கலாம். மணல் என்றால் கடல் மண் போல அல்ல. கடலிலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கும் பனங்காட்டு மணல், அத்தையின் வார்த்தையில் “குருத்து மணல்”, சில இடங்களில் செவேரென்று இருக்கும், சில இடங்களில் வெளேரென்று காலுக்கடியில் நெகிழும். அதில் கால் புதைய நடப்பது பெரும் அவஸ்தை தான். வேம்பாரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பெரும் தேரி ஒன்றும் உண்டு. அதன் எச்சமாக இங்கும் வெகு சல்லிசான மணல் இருக்கும்.

திருமணம் ஆகி நான் போன புதிதில் தன் ‘சொக்காரன்மார்’ பனங்காட்டிலுள்ள அந்தோனியார் கெபிக்கு நேர்ச்சை நிறைவு செய்ய எங்கள் இருவரையும் அழைத்துச் சென்றார் அத்தை. காரிலிருந்து இறங்கி வேகாத வெயிலில் இழுத்துக் கொண்டு, பனங்காட்டின் ஊடே நடந்து ஒருவழியாக ‘கெபிக்கு’ வந்து சேர்ந்தால், அது ஒரு மிகச் சிறிய தூபி போலத்தான் இருந்தது. தூபியின் மேல் சிறு அந்தோனியார் சுரூபம் ஒன்றும் காய்ந்து போன மாலைகளுடனும், சில மெழுகுதிரிகளுடனும் தெரிந்தது.

சிறியதாக ஜெபம் ஒன்றை சொல்லிவிட்டு, மாலை போட்டு வணங்கி, மெழுகுதிரிகள் ஏற்றினோம். “இந்தக் கெபியை நாங்க தான் செங்கலும் மண்ணும் சொமந்து கொண்டு வந்து கட்டுனோம், இதுக்கு அப்பப்போ நாந்தான் கொஞ்சம் சுண்ணாம்பு வாங்கிட்டு வந்து வெள்ளையடிக்கேன்” என்று அத்தை சொன்னார்.

வேம்பாரிலேயே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தையின் துணிச்சல் அலாதியானது. இத்தனை பிள்ளைகளை ஒற்றை சம்பளத்தில் கரையேற்ற மாமா திணறிக்கொண்டிருந்தபோது கொஞ்சமும் சலிக்காமல் கூடை பின்னி, பாத்திரம் வாடகைக்குத் தந்து, தட்டி பின்னி, புளி அள்ளிச் சுமந்து என்று கடுமையாக உழைத்திருக்கிறார். கெபியின் கதையை இன்னும் விளக்கினார். அந்தக் காலத்தில் பனங்காட்டில் ஆண்கள் பனை சீவச் செல்வதும், பெண்கள் நிறைந்த பதநீர் பானைகளைத் தலையில் சுமந்து விடிலியிலுள்ள பிரமாண்ட அண்டாவில் ஊற்றி பதநீர் காய்ப்பதும், நாலைந்து கிலோமீட்டர் நடந்துசென்று விறகு வெட்டி தலையில் சுமந்து எடுத்து வருவதும், ஓலை வேய்ந்தக் குடிசைகளில் சமையல் செய்வதும், குழந்தைகளை கவனித்துக் கொண்டும் இருப்பதுண்டு.

இதில் அவ்வப்போது பனை அடைத்துக் கொடுப்பதும், குடிசைக்கு அருகாமையில் சரியான பருவத்தில் கிழங்கு போடுவதும், அருகே தண்ணீர் கிடைத்தால் அவரை, சுரை, தக்காளி, கத்தரி என்று காய்கறிகள் போடுவதும் உண்டு. ஆடுகள் வளர்த்து அதன் புழுக்கையை மட்டுமே கொண்டு மணற்காட்டை காய்கறித் தோட்டமாக மாற்றியிருக்கிறார்கள். தண்ணீருக்கு அங்கங்கே ஊற்று பார்த்து தோண்டிக் கொள்வதுண்டு. வேம்பாறு அருகே ஓடிக்கொண்டிருப்பதால் பத்தடி தோண்டினாலே தண்ணீர் வரும் கருணை கொண்ட நிலப்பரப்பு அது!

தானே முளைத்து வளரும் கருவை மரங்களை வெட்டி, மூட்டம் போட்டு கரி தயாரிப்பது அந்தப்பகுதியில் வெகு பிரபலமான தொழில். விறகு வெட்டிக்கொண்டு ஊருக்குள் கொண்டு சென்று விற்கும் பெண்களும், பதநீர், நுங்கு கொண்டு செல்பவர்களும் கிழக்கேயிருந்து சென்றால், வேம்பாற்றைக் கடந்து தான் ஊருக்குள் செல்ல வேண்டும். ஊரை விட்டு வெளியே வசித்து வந்தவர்களான மூதாதையர், சாலையும், பாலமும் வருவதற்கு முன் கடற்கரையோரமாக நடந்தே தான் ஊருக்குள் சென்று வந்திருக்கிறார்கள். ஊருக்குள்ளும் இவர்களுக்குத் தனி வீடுகள் உண்டு என்பது தான் ஆச்சரியமே!

ஊருக்குள் ஆறு மாதமும், பனை பருவமான மீதமுள்ள ஆறு மாதங்கள் பனங்காட்டிலுமாக வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் பனங்காட்டிலிருந்து கரையை அடைய வேண்டும் என்றால், இந்தப் பனை வடலிகளைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். இந்தக் காடுகளுக்குக் காவலாகத்தான் ‘அந்தோனியார்’ முதலில் இங்கு வந்துசேர்ந்தார்.

யாரோ ஒரு மூதாதை ஆள் பனங்காட்டைக் காக்கும் பொருட்டும், அதைக்கடந்து செல்லும் தன் குடும்பத்து உயிர்களைக் காக்கவேண்டியும் இந்தக் கெபியை நிறுவியிருக்க வேண்டும். 16ஆம் நூற்றாண்டுவாக்கில் இந்தப் பகுதி மக்கள் கிறிஸ்துவத்தைத் தழுவியதாகச் சொல்லப்பட்டாலும், எங்கள் மூதாதை மக்கள் தோமையாரை வழிபடுபவர்கள். குடும்பத்தில் பல தலைமுறைகளாக ‘தொம்மை’ என்ற பெயரொட்டு பலருக்கு உண்டு. அத்தையும் ‘தொம்மை இன்னாசி’தான்.

இன்று கூட சென்னை தேவாலயங்களில் உங்கள் பெயரை தொம்மை ஒட்டுடன் சொன்னால், “நீங்கள் தூத்துக்குடியா?” என்று கேட்பவர்களுண்டு. அந்தளவுக்கு தொம்மை பெயர் பிரசித்தம். 10ஆம் நூற்றாண்டில் கேரளாவின் தரிசப்பள்ளி எரிப்புக்குப் பின் தமிழகத்துக்குத் தப்பி ஓடிவந்த தோமை கிறிஸ்துவர்களான இவர்களை தரிசுக்கல் நாயக்கர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள் மானுடவியலாளர்கள். இவர்கள் வணங்குவதும் தோமையாரைத்தான். தாமஸ் ஆஃப் கேனாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்றே நான் கணிக்கிறேன்.

சில ஆண்டுகள் கழித்து இன்னொரு பயணத்தில், பனங்காட்டுக்குள் இருக்கும் சிறு கெபி ஏன் அந்தோனியாரைக் கொண்டிருக்கிறது என்ற என் ஐயத்தைக் கேட்க, “அவரு தானம்மா பேயை எல்லாம் ஓட்டுறவரு?” என்றார் அத்தை வெள்ளந்தியாக. கூடவே அவரது சிறுவயதில் ஆற்று வெள்ளத்துக்கும், கொள்ளை நோய்க்கும், பனங்காட்டின் சலசலப்புக்கும் எப்படி எல்லாம் அவரது மூதாதையர் அச்சமுற்று இருந்திருக்கிறார்கள் என்று அடுக்கினார். பனங்காட்டுக்குள் பேய் இருப்பதாகவும், அதை இந்தக் கெபியிலுள்ள அந்தோனியார் விரட்டுவதாகவும் இந்த மனிதர்கள் நம்பியதாகச் சொன்னார். வேம்பாரின் பனங்காட்டு ஐயனாரைப் பார்த்துப் பழகிய இவர்கள், அந்தோனியாரைத் தங்கள் காட்டுக்குக் காவலாக்கிக்கொண்டார்கள்.

கேரளக் காவுகளில் நாகர்களாகவும், தமிழகக் கோயில் காடுகளில் ஐயனாராகவும் வழிபடப்பட்ட ‘கோயில் காட்டு சாமி’, இங்கே அந்தோனியாராக மாறிப்போனார். பேயை ஓட்ட ஆயுதமாக அவர்கள் பயன்படுத்தியது அந்தோனியார் முன் எரியும் விளக்கின் எண்ணெய்தான். அதை பூசிக்கொண்டு, ஜெபித்தபடியே சிறுவயதில் காட்டைக் கடந்து சென்றதை அத்தை விவரித்துக் கொண்டிருந்தார்.

கதை கேட்டுக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தால் பல இளம் பனங்கன்றுகள் செழித்து நின்றிருந்தன. ஒவ்வொன்றையும் ஆசையுடன் ஓடிச் சென்று இந்தக் கன்று நான் வளர்த்தது, இதற்குத் தண்ணீர் இறைத்து அவ்வப்போது வந்து ஊற்றுவேன் என்று குழந்தை போல குதூகலமாக சொல்லிக்கொண்டிருந்தார். தண்ணீரா? நடுக்காட்டுக்குள் ஏது தண்ணீர் என்று கேட்டால், அதுவும் அந்தோனியாரின் புதுமை என்றவர், அங்கிருந்த சிறு கிணற்றை சுட்டிக்காட்டினார். கடலிலிருந்து ஏறக்குறைய நூறு மீட்டர் தொலைவில் தெளிந்த இனிய குடிநீர் அந்தக் கிணற்றில் இப்போதும் உண்டு. அதில் தண்ணீர் கோரி ஊற்ற ஏதுவாக வாளியும் கயிறும் எப்போதும் இருக்கும், அத்தை போல குடும்பத்தைச் சேர்ந்த யார் அந்தப்பக்கம் சென்றாலும், பனங்கொட்டைகளை விதைத்து, தண்ணீர் ஊற்றிவிடுவதுண்டு.

“அப்பப்போ தண்ணீ ஊத்துனாத்தான வடலி உண்டாயி சுத்தி பனை நிக்கும்? நம்ம சொக்காரமார் காட்டுக்குள்ள பனை இல்லைன்னா எப்புடி? அந்தோனியாரு இருக்காரு இல்ல?” என்று கேட்டுக்கொண்டே மளமளவென தண்ணீரை இறைத்து ஊற்றினார். அந்தோனியாருக்கு நிரந்தரமான நல்ல கட்டடம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்ற அத்தையின் ஆசை அவருக்கும் கேட்டிருக்க வேண்டும் போல. 2009ஆம் ஆண்டு நாங்கள் சென்றபோது புதிதாக சிறு ஆலயம் ஒன்று எழும்பியிருந்தது. அந்தோனியார் அதற்குள் சிறு பெட்டியில் பதுங்கியவர் போலானார். செவ்வாய்க்கிழமைகளில் எங்கெங்கிருந்தோ வரும் பங்காளி மக்கள் அந்தோனியாருக்கு ‘அசனம்’ தந்து வழிபடுவதுண்டு.

என் இரு குழந்தைகள் பிறந்த பின்பும் கெபிக்கு நேர்ச்சை வைத்திருக்கிறேன், வா என்று என்னை அத்தை கெபிக்கு அழைத்துக்கொண்டு போனார். குழந்தைகளை சுரூபத்தின் முன் காட்டி, ரசம் தேய்ந்து போயிருந்த கண்ணாடிக் கூண்டைத் தொட்டி இவர்கள் மேல் ஒற்றி, மாலை போடச் செய்து மெழுகுதிரி கொளுத்தி வணங்கிய பின்பு தான் அமைதிகொண்டார். குடும்பத்துக்கு வரும் புது வரவு யாராகிலும், இந்த பனங்காட்டுக் கெபி வணங்குதல் உண்டு. அங்கு வணங்கியபின் குடும்பத்து உறுப்பினர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் வராது என்பது அத்தையின் திடமான நம்பிக்கை. பழைய கதைகள் எதையுமே அறியாத புதிய தலைமுறைக்கு பனங்காட்டையும், அதன் கதைகளையும், கொட்டை ஊன்றுதலையும், தண்ணீர் ஊற்றுதலையும் கற்றுத்தரும் பழைய தலைமுறையின் இறுதி முயற்சியாக என்னால் இப்போது அத்தையை, அவர் உணர்வுகளை உணரமுடிகிறது.

கெபியிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் அத்தையின் ‘காடு’. முன்பொரு காலத்தில் அதன் நடுவே மிகப் பிரமாண்டப் புளியமரம் ஒன்று உண்டு என்று கணவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதிலிருந்து மூட்டை மூட்டையாகப் புளி உலுப்பி, சைக்கிளில் கட்டிக்கொண்டு வீட்டுக்கு எதிர்க்காற்றில் அவதிப்பட்டு மிதித்து வந்த கதையைக் கணவர் அடிக்கடி சொல்வதுண்டு. எங்கள் பனங்காட்டை பஞ்சு என்பவருக்கு அப்போது அடைத்துக் கொடுத்திருந்தார்கள். பஞ்சு உண்மையில் பஞ்சு தான். அத்தனை மெல்லிய மனது. ஆட்களைக் கண்டதும் அந்தக் கரிய முகத்தில் அத்தனை உற்சாகம் தோன்றிவிடும். “ஏ அம்மா… பயினி இல்லையே, பக்கத்து காட்டுல வியாங்கிட்டு வரட்டுமா? கொட்டை இப்பத்தான் போட்டேன் பாத்துக்கிடுங்க. ஆனா நம்ம புள்ளையளுக்கு இல்லாததா? நம்ம மணக்காட்டுக் கெழங்கு டேஸ்டு வருமா? புடுங்கிக்கிடலாம், வாங்க” என்று தான் எப்போதும் உபசாரம் இருக்கும்.

இறக்கிய பதநீரை அத்தை ஊற்றித்தருவதற்காகக் காத்திருப்போம், அருகில் கிடக்கும் பனை ஓலையைச் சட்டென எடுத்து லாகவமாக அவர் பட்டை கட்டித்தர, அதில் பதநீரை ஊற்றி அங்கேயே குடிப்பது எல்லாம் அத்தனை பசுமையாக நினைவிலிருக்கிறது. குழந்தைகள் இருவரையும் இழுத்துக்கொண்டு செல்லும் பஞ்சு, விளையாத கொட்டைகளையும் அவசரம் அவசரமாகப் பிடுங்கி அவர்கள் கைகளில் திணிப்பது தான் அவரது உச்சபட்ச விருந்தோம்பல். கை நிறைய பனங்கிழங்கையும், வயிறு நிறைய பதநீரையும், வாய் முழுக்க கருப்பட்டியையும் சுமந்தபடி ஊருக்குள் திரும்பிய பயணத்தை என்னளவு என் பிள்ளைகள் நினைவில் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தக் கெபியின் அருகே தான் ஒரு முறை ‘கூப்பயினி’ காய்ச்சுவதை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.

இப்படி வாழ்க்கையுடன் ஒன்றித்திருந்த பனை வீடுகளுக்குள் ஆதிக்கம் செலுத்துவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டது. கிராமத்து வீடுகளில் பனங்கழிகள்தான் தாங்கி நிற்கும். ஓட்டுவீடானாலும், குடிசையானாலும், தார் பூசப்பட்ட பனங்கழி கட்டாயம் உண்டு. கணவரது வீட்டில் கான்கிரீட் தாண்டி கூடுதல் பலத்துக்கு பனங்கட்டைகள் இன்றும் கூரையைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் தகரமும், ஆஸ்பெஸ்டாசும், கான்கிரீட் வீடுகளுமாக கிராமப்புறம் நகரமயமானதில் பனை தேடுவாரின்றிப் போனது. பனை ஓலைக் கொழுக்கட்டைகளை மட்டுமே கிறிஸ்துமஸ் பண்டங்களாக சில நூற்றாண்டுகள் உண்டு திளைத்த சமூகம், கேக், மில்க் ஸ்வீட் என்று மாறிப்போனது. கருப்பட்டி காபி புருவாகிப் போனது; பதநீர் ஃபான்டாவானது; கள்ளுக்கடைகள் டாஸ்மாக்காகிப் போயின. தீபாவளிக்கு ஓடியோடி வெடித்த ஓலைப்பட்டாசுகள் காற்றில் புகைந்து போய், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலர் கலர் வெடிகளாக மாறின. காலம் பனையை மக்களிடமிருந்து ஒதுக்கத் தொடங்கியது. காட்டிலிருந்து வருமானம் சுத்தமாக ஒரு கட்டத்தில் நின்று போனது.

சில ஆண்டுகளுக்கு முன் மாமா தான் கெதியாக இருக்கும்போதே காட்டை விற்று பிள்ளைகளுக்குத் தந்துவிடலாம் என்று முடிவு செய்தார். பஞ்சு அத்தையிடம் வந்து புலம்பித்தள்ளிவிட்டுப் போனார். காடு பிரிவினை செய்யப்பட்டு விற்கப்பட்டது. இப்போதும் ஈசிஆரில் அந்தப் பகுதியை காரில் கடக்கும் ஒவ்வொரு தடவையும் எங்களுக்குச் சொந்தமில்லாத, ஆனால் எங்கள் மூதாதையர் வளர்த்தெடுத்த பனங்காட்டை ஏக்கத்துடன் பார்த்துச் செல்வதுண்டு. அந்தோனியாரிடம் கோபித்துக் கொண்டிருக்கிறேன்.

என் உயிர் நண்பனான இளைய கொழுந்தனார் புற்றுநோய்க்கு இரையானதற்குப் பின்னர் அவரை இதுவரை நான் சென்று பார்க்கவில்லை. காப்பாற்றுவதற்காகத் தானே அவரை அங்கே நூற்றாண்டுகளாகப் பராமரிக்கிறார்கள், அவர் ஏன் செய்யவில்லை என்ற எண்ணமும் உண்டு. பஞ்சு கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஊருக்குச் சென்றபோது வந்து அத்தையிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனார். ஒடுங்கியிருந்தார். பழைய சிரிப்பும் இல்லை. பிள்ளைகள் யாரும் பனை ஏறுவதில்லை என்று சற்று சலிப்புடன் சொல்லிக்கொண்டார். “நான் தெவங்கிட்டேன். என்ன செய்ய? இங்க தான் ஊருக்குள்ள இப்ப இருக்கேன். நீங்களும் காட்டைக் குடுத்துட்டீங்க…” என்றபடி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதுதான் பஞ்சுவைக் கடைசியாக நான் பார்த்தது. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது அத்தையும் தன் இறுதி நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். புற்று அவரையும் அரித்துக்கொண்டிருக்கிறது. நாடடங்கு இல்லையென்றால், கடைசியாக ஒரு முறை அவரை கெபிக்கு அழைத்துச்சென்று காட்டியிருக்கலாமே என்ற எண்ணம் எழாமல் இல்லை. அந்தோனியாருக்குத் தெரியும். தன் தலைக்குக் கூரை தரத் துடித்த உயிரை அவர் காப்பார் என்றே நம்புகிறேன். காணாமல் போனவற்றைத் தேடிக்கண்டெடுத்துத் தரும் அந்தோனியார் ஆயிற்றே?

நாடடங்கு முடிந்தபின் கட்டாயம் இந்தப் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு பனங்காட்டுக்குள் மீண்டும் சென்று, அத்தை சொன்னக் கதைகளைச் சொல்ல வேண்டும். சில கொட்டைகளையாவது ஊன்றிவிட்டு வர வேண்டும். இது வரை நான் ஒரு பனையைக் கூட உருவாக்கியது இல்லை. தமிழகத்தின் மாநில மரம் இன்று தேடுவாரின்றி அநாதையாக நெடுஞ்சாலை ஓரங்களில் காற்றில் கைகளை வீசியபடி ஆதரவு தேடிக்கொண்டிருக்கிறது. எலுமிச்சைக்குப் பனங்காட்டிலும் வேலை உண்டு; மலங்காட்டிலும் வேலை உண்டு தான். காடு காத்து கானுயிர் காப்போம்!

கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon