மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: ராகி புட்டு

கிச்சன் கீர்த்தனா: ராகி புட்டு

நம் முன்னோர் பருவ நிலைகளைப் பொறுத்து, தம் வாழ்க்கை முறையைத் தகவமைத்துக் கொண்டார்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கோடை வெயில் வாட்டி எடுக்கும். அந்தப் பருவத்தில் கடும் வெப்பத்திலும் அதிக தண்ணீர் இன்றி, தாக்குப்பிடித்து வளரும் சிறுதானியங்களை வயலில் விதைத்தார்கள். ஆடி மாதம் வரும்போது, அந்தச் சிறுதானியங்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அப்படிப்பட்டவற்றில் முக்கியமானது கேழ்வரகு. ஆனால், எல்லா நாட்களிலும் கிடைக்கும் இந்த ராகி எனப்படும் கேழ்வரகு. தற்போதைய ஊரடங்கு நிலையில் ராகியை வாங்கி வைத்துக்கொண்டு தேவையானபோது விதவிதமான உணவுகளைச் செய்து சுவைக்கலாம்.

என்ன தேவை?

ராகி மாவு - கால் கிலோ

தேங்காய் - அரை மூடி

நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன்

சர்க்கரை - 2 டீஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, உப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கையால் பிடிக்கும் அளவுக்கு நன்கு கலந்துகொள்ளவும். இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்தவுடன் இட்லித் தட்டில் ஒரு துணியைப் போட்டு இந்த மாவை அதில் சேர்த்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.

மாவு வெந்தவுடன் அதை ஒரு தட்டில் போட்டு அதனுடன் நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை, நெய் சேர்த்துக் கலந்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். தேங்காயைத் துருவி இதனுடன் கலந்துகொள்ளவும்.

நேற்றைய சண்டே (வெஜ்) ஸ்பெஷல்: பிரியாணி - குருமா - மசாலா கறி

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது