மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜாவா? மறுத்த அமைப்புச் செயலாளர்!

தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜாவா? மறுத்த அமைப்புச் செயலாளர்!

தமிழக பாஜக தலைவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் முதல் வாரத்தில் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு 5 மாதங்களாகியும் இதுவரை தமிழக பாஜகவுக்கு தலைவரை நியமிக்காமல் அமைதிகாத்து வருகிறது அக்கட்சியின் தேசிய தலைமை. இதன் காரணமாக தலைவர் இல்லாமலேயே ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தலை சந்தித்தது பாஜக.

புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக கடந்த 5ஆம் தேதி சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.அதில் அகில இந்திய இணை அமைப்புப் பொதுச் செயலாளர் சிவபிரகாஷ், தேசிய செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ஆகியோர் கலந்துகொண்டு தலைவர் பதவி தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டுவந்தனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக ஹெச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஒரு சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதில், “தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் ஜனவரி 17 அன்று முடிவடைந்தது. தலைவராக அதிக உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக ஹெச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 2023ஆம் ஆண்டு வரை இப்பதவியில் அவர் நீடிப்பார்” என்று ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜகவின் அமைப்புத் தேர்தல் அதிகாரி அஷ்வத் நாராயணா மற்றும், பார்வையாளர் என்ற இடத்தில் சி.டி.ரவி ஆகியோரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தனது முகநூல் பக்கத்தில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவர் பற்றி பல்வேறுவிதமான வதந்திகளும் சித்தரிப்புகளும் கடந்த பல நாட்களாக பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்பனை செய்து கொண்டு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவை உண்மைக்கு மாறானது, தமிழக மாநிலத் தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. இதற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும். முடிவாகும் போது அந்த தகவல் உங்களுக்கு அதிகாரபூர்வமாக கட்சியின் சார்பில் கொடுக்கப்படும். ஆகையால் தவறான தகவல்களை தந்து நமக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பாஜக மாநிலத் தலைவராக ஹெச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்னும் தகவலை கேசவ விநாயகம் மறுத்துள்ளார். அதே சமயம் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் தான் தான் என்று ஹெச்.ராஜா சில நாட்களாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறார்.

சனி, 18 ஜன 2020

அடுத்ததுchevronRight icon