மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

திமுக தலைமைச் செயற்குழுவில் அதிரடி முடிவு!

திமுக தலைமைச் செயற்குழுவில் அதிரடி முடிவு!

திமுகவின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. இதன் தொடர்ச்சியாக திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், “கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் 21.1.2020 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். கட்சியின் ஆக்கப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூட்டத்தில் அடுத்து நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, ஸ்டாலின் அறிக்கையால் அந்த பிரச்சினை முடித்துவைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸை விமர்சித்து சில தலைவர்கள் கருத்து கூறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் சில முக்கிய முடிவுகளை எடுத்து அதிரடியாக அறிவிக்கப் போகிறார் என்று அறிவாலய வட்டாரங்களில் சொல்கிறார்கள். தலைமைக் கழகப் பதவிகளில் சில முக்கிய மாற்றங்களை ஸ்டாலின் செய்யப்போகிறார். அதன்படி, தலைமைக் கழகப் பொறுப்பில் உள்ளவர்கள் சிலர் விடுவிக்கப்பட்டு, புதிதாகச் சிலர் தலைமைக் கழகப் பொறுப்புக்கு வரவுள்ளனர். அதுபோலவே சில மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்படவுள்ளனர் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கான அறிவிப்பு அவசர செயற்குழு முடிந்தவுடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 21 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon