சேலம் தோல்வி: தலைமையை நோக்கி விரல் நீட்டிய வீரபாண்டி ராஜா

politics

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோல்வியுற்ற மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களிடமும் நிர்வாகிகளிடமும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விசாரணை நடத்திவரும் படலத்தை ஒவ்வொரு மாவட்டமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் சேலம் தோல்வி பற்றியும் தீவிர விசாரணை நடத்தினார்.

சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளரான எஸ்.ஆர். சிவலிங்கத்தைப் பார்த்து ஸ்டாலின், ‘பேசுங்க’ என்றார். வழக்கமாக மாசெக்கள் சொல்லும் காரணத்தையே வாசித்தார் சிவலிங்கம்.

“எல்லா மாவட்டத்துலையும் ஆளுங்கட்சி அராஜகம் இருந்துச்சுன்னா சேலத்துல ரெண்டு மடங்கு இருந்துச்சு. அதையும் தாண்டி நாம 45% ஓட்டு வாங்கியிருக்கோம். நிர்வாகிகளும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஆனாலும் முதலமைச்சரோட நேரடி அதிகாரத்தாலதான் இப்படி ஆகியிருக்கு” என்று சிவலிங்கம் விளக்கிக் கொண்டிருக்கும்போதே, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தாரமங்கலம் அம்மாசி எழுந்தார்.

“எல்லாத்துக்கும் அவங்களையே குத்தம் சொல்லிக்கிட்டிருக்க முடியாதுங்க. நம்மகிட்ட சரியான ஒருங்கிணைப்பு இல்லை. பஞ்சாயத்து, 5 ஆயிரம் கவுன்சிலர், 50 ஆயிரம் கவுன்சிலர்னு எந்த பதவிக்கும் வேட்பாளர் தேர்வுல சரியாக ஆலோசனையோ ஒருங்கிணைப்போ இல்லை. எல்லா முடிவையும் மாவட்டமே எடுத்தாரு. அதனாலதான் இப்படி ஆனது. எல்லாருமே நல்லா வேலை செஞ்சோம். ஒருங்கிணைப்பு சரியா இருந்துச்சுன்னா இன்னும் கூட ஜெயிச்சிருக்கலாம். சட்டமன்றத் தேர்தல்ல இந்த ஒருங்கிணைப்பை நாம விட்டுவிடக் கூடாது” என்று பேசினார்.

அதன் பின் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரான வீரபாண்டி ராஜா பேசினார்.

“நான் எங்க அப்பா மாதிரியே என்றைக்கும் தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன். கிழக்கு மாவட்டத்தில் தகுதியற்ற நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும். அப்போதுதான் கட்சி நன்றாக இருக்கும் என்று கள ஆய்வில் இருந்தே சொல்லிவருகிறேன். மீண்டும் நம்ம அமைப்புக்கிட்ட (ஆர்.எஸ்.பாரதி)கிட்ட சொன்னேன் நடக்கவில்லை. அண்ணன்கிட்ட (துரைமுருகனைப் பார்த்து) சொன்னேன். நடக்கவில்லை. எனக்கு ஏத்த நிர்வாகிகள் இல்லாதபோது என்னால எப்படிங்க வெற்றிகரமா செயல்பட முடியும்?” என்று வீரபாண்டி ராஜா சொல்லிக் கொண்டிருக்கும்போதே துரைமுருகன் குறுக்கிட,

“அண்ணே…அதைத்தான்னே சொல்லிக்கிட்டிருக்கேன்” என்று குரலை உயர்த்திய வீரபாண்டி ராஜா,

“காசுக்காக யார்கிட்டையும் போய் நான் நின்னதில்லை. இன்னிய வரைக்கும் என் கைகாசை செலவழிச்சு கட்சி நடத்திக்கிட்டிருக்கேன். யார்கிட்டையும் விலை போனதில்ல. என் அப்பா மாதிரியே கட்சிக்கும் தலைமைக்கு விசுவாசமா இருக்கேன். தலைமைக் கழகம் எனக்குக் கொடுத்திருக்கிற நிர்வாகிகளை வச்சிக்கிட்டு செயல்பட்டேன். இவ்வளவுதான் கிடைச்சது” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.

துரைமுருகன் அதிர்ந்துவிட்டார். ஸ்டாலின் சில நிமிடங்கள் வீரபாண்டி ராஜாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சேலம் மத்திய மாவட்ட பொறுப்பாளரான பனைமரத்துப் பட்டி ராஜேந்திரன் மாநகர எல்லையில் வருவதால் அவர் பேசவில்லை.

அடுத்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட மாவட்டம் காங்கிரஸால் பாதிக்கப்பட்ட மாவட்டம்.

அதென்ன மாவட்டம்?

(நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்)

[கழுத்தறுத்த காங்கிரஸ்](https://www.minnambalam.com/politics/2020/01/22/107/aliagation-against-congress-in-dmk-exicutive-meeting)

[நாமக்கல், கரூர்: ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://minnambalam.com/politics/2020/01/22/30/dmk-chief-excucitive-meet-stalin-enquiry-namakkal-karur-districts)

[இரண்டொரு நாளில் திமுகவில் ஆபரேஷன்: ஸ்டாலின் எச்சரிக்கை](https://www.minnambalam.com/politics/2020/01/21/135/operation-in-dmk-party-in-fewdays-stalin)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *