மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

அதிமுக ஆட்சிக்கு அமாவாசை கெடு!

அதிமுக ஆட்சிக்கு அமாவாசை கெடு!

அதிமுக ஆட்சிக்கும் அமைச்சருக்கும் 11 அமாவாசைதான் கெடு என்று தகுதியிழந்த எம்.எல்.ஏ அரூர் முருகன் பொது மேடையில் சபதம் ஏற்றுள்ளார். இது அமமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அறிவித்திருந்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். நேற்று முன்தினம் (ஜனவரி 20) தர்மபுரியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் பேசிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளருமான முருகன் தனது பேச்சில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனைக் கடுமையாகத் தாக்கினார்.

“அரூரில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பி.டி.ஆர்.வி பள்ளியை வாங்கியுள்ளார். 11 அமாவாசைக்குப் பிறகு அமைச்சரும் இருக்க மாட்டார், ஆட்சியும் இருக்காது. அதன் பிறகு அமைச்சர் வாங்கிய பள்ளிக்கூடத்தையும் இடத்தையும் மீட்டு கட்சிக்காரர்களுக்கு வீடுகட்ட பிளாட் போட்டுக்கொடுப்பேன்” என்று உறுதி கொடுத்துள்ளார்.

அமமுக முருகன் பேசியதைப் பதிவு செய்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் போட்டுக் காட்டியுள்ளார்கள், முழு ஆடியோவைக் கேட்ட அமைச்சர் கொதித்துப்போய்விட்டதாகச் சொல்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். மேலும், “11 அமாவாசைதான் கெடு என்று சொல்லியிருக்கிறார் முருகன். 11 அமாவாசை என்றால் என்ன அர்த்தம்? இந்த வருடம் நவம்பர் மாதம் வரை நாங்கள் ஆட்சியில் இருப்போம் என்றுதானே அர்த்தம்? ஜனவரி தொடங்கி நவம்பர் வரை அதிமுக ஆட்சிதான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார் முருகன். அவர் வாக்கு பலிக்கட்டும். ஆட்சி அவ்வளவு நாள் இருந்தாலே போதும்” என்கிறார்கள் லோக்கல் அதிமுக நிர்வாகிகள்.

புதன், 22 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon