மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

ஊழலுக்கு உடன்பட மறுத்த ஐஏஎஸ் விஆர்எஸ் - அதிரவைக்கும் பின்னணி!

ஊழலுக்கு உடன்பட மறுத்த  ஐஏஎஸ் விஆர்எஸ் - அதிரவைக்கும் பின்னணி!

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மை செயலாளர் டாக்டர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் விருப்ப ஓய்வில் செல்லும் மர்மம் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு நமது விசாரணையில் கிடைத்திருக்கும் பதில், தமிழக அரசையே உலுக்கக் கூடிய பதிலாக இருக்கிறது.

தான் விருப்ப ஓய்வில் செல்வதாக தனது முகநூல் பகுதியிலும் பதிவு செய்து, ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளார் சந்தோஷ்பாபு.

யார் இந்த சந்தோஷ்பாபு?

தனியார் கேபிள் டிவிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த, தனியார் கேபிள்களை அரசு உடைமையாக்கி, கிராமங்களில் இணைய வசதியை உருவாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நல்ல திறமையான நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் சந்தோஷ்பாபுவை தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக நியமித்தார்.

2011ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி பூம்புகார் கைவினை பொருள் பிரிவுக்கு மாற்றப்பட்ட சந்தோஷ்பாபுவை மீண்டும் ஐடி செயலாளராகக் கொண்டுவந்தார்கள். கடந்த ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடி கணினி வழங்க 15 லட்சத்து 66 ஆயிரத்து 22 மடிகணினிகள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டதில், சில மூத்த அமைச்சர்கள் கோடிக்கணக்கில் பணம் பார்க்க குறிப்பிட்ட நிறுவனத்துக்குக் கொடுக்கச் சொல்லி அதிகமான விலையில் கொள்முதல் செய்யச் சொல்லி சந்தோஷ்பாபுவுக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.

ஆனால், சந்தோஷ்பாபு தரமான மடி கணினி குறைவான விலையில் இருக்க வேண்டும் என்று ஒரு மடிகணினி விலை 12,273 ரூபாய் என்று கொள்முதல் செய்து தமிழக அரசுக்குப் பல கோடி ரூபாய் மிச்சப்படுத்தினார். நிதி நெருக்கடியான சூழ்நிலையில் இந்த செயல்பாட்டுக்காக சக அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றார் சந்தோஷ் பாபு. இந்த செய்தியை அப்போது நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம்.

இப்போது என்ன பிரச்சினை?

தற்போது 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளுக்கு இணையச் சேவை அதிவேக அலைக்கற்றை வழங்க, பைபர் ஆப்டிகல் கேபிள் 55,000 கிலோமீட்டர் தூரம் இணைப்புகள் கொடுக்க டெண்டர் விடுவதில்தான் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சிலர் பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு டெண்டர் விதிகளைத் தளர்த்திக் கொடுக்கச் சொல்லி மிரட்டலான அழுத்தம் கொடுத்ததால், தலைமைச் செயலாளரிடம் விருப்ப ஓய்வு கடிதத்தைக் கொடுத்துள்ளார் சந்தோஷ்பாபு.

கிராமப்புறங்களுக்கும் இணையச் சேவை வழங்க மத்திய அரசுத் திட்டமான பாரத் நெட் ஸ்கீம் திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்த, முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு திட்ட அறிக்கையைத் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி, தொடர்ந்து ஃபாலோ செய்து வந்தார்.

இது தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டபோது தனது உடல்நலம் ஒத்துழைக்காதபோதும் சென்று கலந்துகொண்டார். அதாவது வீல் சேரிலேயே காரில் அமர்ந்து விமான நிலையம் போய், அங்கிருந்து டெல்லி சென்று வீல்சேரிலேயே மீட்டிங்கிலும் கலந்துகொண்டார் சந்தோஷ் பாபு. இதேபோல் பலமுறை வீல்சேர் உதவியுடன் டெல்லிக்குச் சென்று ரூ.1815 கோடி நிதியைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார்.

டெண்டர் நிபந்தனைகளை மாற்ற நெருக்கடி

நிதி ஒதுக்கப்பட்டதிலிருந்து பெரும் முதலாளிகள் பலாப் பழத்தில் ஈ மொய்ப்பதுபோல் தலைமைச் செயலகத்திலும், முக்கிய அமைச்சர் வீட்டிலும் மொய்த்து வந்தார்கள். செயலாளர் சந்தோஷ்பாபு முதலில் டெண்டரில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களுக்கும் தகுதியான நிறுவனங்களுக்கும் அழைப்புக்கொடுத்தார். அதன்பேரில் சுமார் 60 பேர் கலந்துகொண்டார்கள். ஜனவரியில் டெண்டர் விடப்பட்டு 2021இல் முழுவதுமான வேலையை முடிக்க வேண்டும், ஐந்து வருடம் பராமரிப்புகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள் ஐடி துறை அதிகாரிகள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதக் கடைசியில் டெண்டர் அறிவித்தார்கள். அதற்குள் பிரச்சினைகள் ஏற்பட்டதும், டெண்டர் படிவத்தை அப்டேட் செய்யவில்லை. அதனால் டெண்டர் விடுவதில் தடைப்பட்டது.

ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமம், எல்&டி, டேராஷாப்ட்டர் ஆகிய மூன்று நிறுவனத்தினர் போட்டியிலிருந்தார்கள். டெக்னிக்கல் டிஜிட்டல் கம்யூனிகேஷன் (TANFINET ) டெண்டர் கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டு தயாராகவிருந்த நிறுவனம் எல்&டி மட்டும்தான்,

வேதாந்தாவுக்கு வளையாத சந்தோஷ்பாபு

ஆனால், வேதாந்தா குழுமம் டெண்டர் எடுக்க சில விதிமுறைகளைத் தளர்த்தச் சொன்னார்கள், அதைதான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சந்தோஷ்பாபுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். கேபிள் மற்றும் மூலப்பொருள்கள் தரம் வாய்ந்த சில நிறுவனத்திடம்தான் வாங்க வேண்டும் என்பதுதான் முக்கியமான நிபந்தனை. அதை மாற்றி வேதாந்தா குழுமம் சொல்லும் நிறுவனத்தின் பொருள்களை வாங்குவதுபோல் விதிமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம். இதை மாற்றினால் பணிகளை ஒரு வருடத்தில் முடிக்க முடியாது,

இந்த விஷயம் அறிந்த எல்&டி நிறுவனம் மூலப்பொருள்கள் வாங்கக்கூடிய நிறுவனத்தை மாற்றியமைத்தால் நீதிமன்றம் செல்வோம். அதிகாரிகளுக்கும் பெரும் சிக்கல் ஏற்படும் என்று நேரடியாகவும் இ-மெயில் மூலமாகவும் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள்.

வீட்டுக்குப் போவேனே தவிர சிறைக்குப் போக மாட்டேன்

இந்த அழுத்தத்தால் குழம்பிய செயலாளர் சந்தோஷ்பாபு அண்மையில் ஒரு நாள் மாலை தனது அலுவலகத்தில் தனக்கு கீழே வேலை செய்யும் அதிகாரிகளிடம், “சுமார் 2,000 கோடி மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் தவறுகள் நடந்தால் பிற்காலத்தில் நான்தான் சிறைக்குப் போக வேண்டும். நான் வீட்டுக்கு போனாலும் போவேனே தவிர, சிறைக்குப் போக மாட்டேன்” என்று கீழ்மட்ட அதிகாரிகளிடம் சிரித்தபடியே சொல்லிவிட்டுப் புறப்பட்டுள்ளார். .

தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட சந்தோஷ்பாபு

அதன் பிறகுதான் ஒரு நிறுவனத்தின் பிரமுகர், முக்கிய அமைச்சர்கள் உதவியை நாடியுள்ளார். அந்த பிரமுகருக்கு பாஜக பிரமுகர்களும் ஆசியிருப்பதால் முதல்வருக்கு ஒன்றும் புரியாமல்தான் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபுவை முதல்வர் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் வரவழைத்து அலைக்கழித்து பேசியுள்ளதாகச் சொல்கிறார்கள். ஒரு அமைச்சர் குரல் உயர்த்தியும் பேசியுள்ளார். மனமுடைந்துபோன சந்தோஷ்பாபு தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளார். “அவர்கள் சொல்லும் நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டிஷனை மாற்ற முடியாது. ஒருவருக்காக டெண்டர் விதிமுறைகளை மாற்றினால் பெரிய சிக்கல்கள் வரும்.அதனால் நான் செய்ய முடியாது. இதற்கு மேலும் எனக்கும் அழுத்தம் கொடுத்தால் நான் விஆர்எஸ் வாங்கிக் கொண்டு செல்கிறேன்” என்று சந்தோஷ்பாபு சொல்ல, அவரை சமாதானம் செய்துள்ளார் தலைமைச் செயலாளர். .

முகத்தைத் திருப்பிக் கொண்ட முதல்வர்

முதல்வர் எடப்பாடியைச் சந்தித்தும் தலைமைச் செயலாளரிடம் கூறியதை அப்படியே சொல்லியுள்ளார் சந்தோஷ்பாபு, முதல்வரும் முகம் கொடுத்து பேசாமல். ‘பாத்துக்கலாம். போங்க’ என்று அனுப்பியுள்ளார். ஆனால், அதன் பிறகும் மீண்டும் தொடர் அழுத்தத்தால் வேறு வழியில்லாமல்தான் விஆர்எஸ் கொடுத்துள்ளார் சந்தோஷ்பாபு.

விஆர்எஸ் கொடுத்ததைத் தனது முகநூலில் சந்தோஷ்பாபு பதிவு செய்ததும், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளார்கள். பிரபலமான நிறுவனம் ஒன்று சந்தோஷ்பாபுவைத் தொடர்புகொண்டு, “உங்களைப் போன்ற நேர்மையான திறமையான நபர்தான் எங்களுக்கு வேண்டும். அதனால் நீங்கள் எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள், அரசு கொடுக்கும் சம்பளத்தைவிடப் பல மடங்கு அதிகமாகக் கொடுக்கிறோம். தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பாகச் செய்துகொடுக்கிறோம்” என்று அழைத்துள்ளனர்.

என்ன கவர்ன்மென்ட் இது?

விஆர்எஸ் கொடுத்துட்டு வீட்டுக்கு வந்ததும் நெருக்கமான நண்பர்கள் சிலர் சந்தித்துள்ளார்கள். அவர்களிடம், “என்ன கவர்மென்ட் இது? ஃபுல் கரப்ட் அப்பப்பா. இவர்களிடம் நம்மால் வேலை செய்ய முடியாது, என் வொய்ஃப் அரசு மருத்துவமனையில் மெடிக்கல் ஆபீஸராக இருக்கிறார். ஒரே மகன். அவனுக்குதான் ஒரு வழிகாட்ட வேண்டும். வங்கியில் சில கோடிக்குக் கடன் வாங்கி தவணைக் கட்டிவருகிறேன், கடனில் இருக்கும் ஐஏஎஸ் யார் என்றால் அது நானாகத்தான் இருப்பேன்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார் சந்தோஷ் பாபு.

சந்தோஷ்பாபுவைத் தமிழக காவல் துறையின் முக்கியமான அதிகாரிகள் கண்காணித்து வருவதால் எந்த போன் வந்தாலும் அட்டன் செய்யாமல் இருந்து வருகிறார். காரணம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்தவராயிற்றே.

இந்த நிலையில் சந்தோஷ்பாபு மீது சில பழிகளைச் சுமத்த ஏதாவது விஷயம் கிடைக்குமா என அரசுத் தரப்பு தேடி வருவதாகவும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்து தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாகப் போவது உண்மை.

வியாழன், 23 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon