மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு: அடுத்த வாரம் விசாரணை?

ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு: அடுத்த வாரம் விசாரணை?

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மீண்டும் இன்று (ஜனவரி 24) மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி கொறாடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட இந்த 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சக்கரபாணி.

அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே ஓ.பன்னீர் எடப்பாடி தலைமையிலான அரசில் இணைந்து துணை முதலமைச்சர் ஆகிவிட்டார். அவருடன் மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதன் பின் ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பட்டியலிடப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 24) ஆம் தேதி மனுதாரான திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டேவிடம், “ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நெடுநாட்களாக வழக்கு விசாரணைக்கு வராமலேயே இருக்கிறது” என்று முறையிட்டார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி போப்டே, “அடுத்தவாரம் அந்த வழக்கை விசாரிப்பது பற்றி பரிசீலிக்கிறோம்” என்று கபில் சிபலுக்கு பதில் அளித்துள்ளார்.

ஏற்கனவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இருந்தபோதும் கபில் சிபல் இதேபோல அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்திருக்கிறார். அப்போதும் இப்படித்தான் பதில் சொன்னார்கள்.

வெள்ளி, 24 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon