மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 ஜன 2020

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு

திமுகவின் முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேரு நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்று (ஜனவரி 26) திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அண்மையில் நடந்து முடிந்த தலைமைச் செயற்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது.

“திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடைய நெருங்கிய நண்பரும் இளைஞரணி இணைச் செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி மாவட்டச் செயலாளர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாகவே இருந்தது. இதை உதயநிதி திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்குக்கொண்டு சென்றார்.

தற்போது திருச்சியில் இரு மாவட்டங்களாக திமுக செயல்பட்டாலும் கே.என்.நேருவே அங்கே முக்கியமான இடத்தை நீண்ட காலமாக வகிக்கிறார். திருச்சி திமுகவில் அவரை மீறி யாரும் இல்லை என்பதே இதுவரையிலான நிலைமை. இப்படிப்பட்ட நிலையில் திருச்சியில் அன்பில் மகேஷை மாவட்டச் செயலாளர் ஆக்குவது எப்படி என்று யோசித்த ஸ்டாலின், அதன்படி நேருவை மாநில அளவில் முதன்மைச் செயலாளர் பொறுப்பு கொடுத்து உயர்த்திவிட்டு அதன் பிறகே அன்பில் மகேஷுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுப்பது சரியாக இருக்கும் என்று கருதினார்.

இதை முதலில் நேருவிடம் ஸ்டாலின் கேட்டபோது முதலில் நேரு ஒப்புக்கொள்ளவில்லை. பற்பல ஆண்டுகளாக திருச்சி திமுகவுக்கும் தனக்கும் இருக்கும் நெருக்கத்தையும், தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்னொருவர் முதன்மைப்படுத்தப்படுவதையும் நேரு ரசிக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் நேரு இதை தவிர்த்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தலைமையின் எண்ணம் புரிய ஆரம்பித்ததும் இந்த ப்ரமோஷனை ஏற்றுக் கொண்டார்.

நேருவுக்கு முதன்மைச் செயலாளர் பதவி அளிக்கலாம் என்று தற்போதைய முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவிடம் ஸ்டாலின் கூறியபோது முதலில் அவர் ஏற்கவில்லை. ‘ நான் எவ்வளவு சீனியர். அப்படின்னா நான் வெறும் எம்பிதானா?’ என்று கேட்க அவரையும் ஸ்டாலின் சமாதானப்படுத்தியிருக்கிறார். டி.ஆர்.பாலுவை சமாதானப்படுவதற்காகத்தான் நேருவின் முதன்மைச் செயலாளர் நியமன அறிவிப்புக்கு இத்தனை நாட்கள் தாமதம் ஆகிவிட்டது” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

கே.என்.நேருவுக்கு மாநில அளவிலான முதன்மைச் செயலாளர் அளிக்கப்பட்டுவிட்டதால் விரைவில் திருச்சியில் ஒரு மாவட்டத்துக்கு அன்பில் மகேஷ் மாசெ ஆக நியமிகப்படுவது உறுதியாகிவிட்டது. நேருவின் மோட்டார் பைக்கில் அன்பில் மகேஷ் பின்னால் அமர்ந்து சென்று திருச்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டதே இதற்கு சான்றாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் திருச்சி திமுகவினர்.

அனேகமாக திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படலாம் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்: ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய ...

3 நிமிட வாசிப்பு

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்: ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்!

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

தி.மு.க., தி.மூ.கா. வேலை முடிந்தது - பி.கே.அன்கோவின் பஞ்சாப் பறப்பு! ...

10 நிமிட வாசிப்பு

தி.மு.க., தி.மூ.கா. வேலை முடிந்தது - பி.கே.அன்கோவின் பஞ்சாப் பறப்பு!

ஞாயிறு 26 ஜன 2020