மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

கலைஞர் நினைவிடத்தில் கண் கலங்கிய நேரு

கலைஞர் நினைவிடத்தில் கண் கலங்கிய நேருவெற்றிநடை போடும் தமிழகம்

கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக மாவட்டச் செயலாளர் என்ற முறையில் சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்துக்கு ஆயிரமாயிரம் முறை வந்து சென்றிருக்கும் கே.என். நேரு, முதல் முறையாக இன்று (ஜனவரி 26) பகலில் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் என்ற புதிய பொறுப்போடு அறிவாலயத்துக்கு வந்தார்.

அதற்கு முன் கோபாலபுரத்தில் கலைஞர் இல்லம் சென்று அங்கே கலைஞர் உருவப் படத்தின் முன் மண்டியிட்டு கொஞ்ச நேரம் கண் கலங்கினார். பின் மெரினாவில் இருக்கும் கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற நேரு, ஆனந்தத்தில் கண்கள் கசிய அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கலைஞரை வணங்கினார். அந்த இடமே உணர்ச்சிக் குவியலானது. திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனையும் அவர் இல்லம் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டு அங்கிருந்து அறிவாலயம் வந்த கேஎன். நேருவை தலைமைக் கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.

பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ ஆகியோருடன் அறிவாலயத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நேருவை வரவேற்று வாழ்த்தினார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று நன்றியும் கூறினார் நேரு. பின்னர் ஸ்டாலின் மருமகன் சபரீசனும் நேருவை வாழ்த்தினார்.

இன்றே நேருவை முதன்மைச் செயலாளர் அறையில் அமர வைத்துவிடலாம் என்று நினைத்த ஸ்டாலின், அந்த அறையை தயாராக வைக்குமாறு உத்தரவிட்டார். அறிவாலய ஊழியர்கள் சென்று பார்த்தபோது முதன்மைச் செயலாளர் அறை பூட்டியிருந்தது. விசாரித்தபோதுதான் இதுவரை முதன்மைச் செயலாளராக இருந்த டி.ஆர்.பாலு அறையை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டது தெரிந்தது. பின் இன்னொரு சாவி யாரிடம் இருக்கிறது என்று தேடி. ஐடி விங் கார்த்தி இன்னொரு சாவியைக் கொண்டுவந்து முதன்மைச் செயலாளர் அறையை திறந்தார். அதன் பின் நேருவை அந்த அறைக்கு அழைத்துச் சென்றனர்.

நேருவுக்கு முதன்மைச் செயலாளர் என்று காலை முரசொலியில் பார்த்ததுமே பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் அவருக்கு அலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். திமுகவில் 90% மாவட்டச் செயலாளர்கள் நேருவுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.

தனக்கு முதன்மைச் செயலாளர் அளிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் கே.என். நேரு, “கலைஞர் அவர்களின் ஆசியோடு முதன்மை கழக செயலாளராக கழகத்திற்காக பணியாற்ற என் மீது முழு நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த கழக தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியை சிறப்புடன் செய்வேன் என உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon