மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

குடியரசு தினம்: மோடிக்கு காங்கிரஸ் அளித்த பரிசு!

குடியரசு தினம்:  மோடிக்கு காங்கிரஸ் அளித்த பரிசு!வெற்றிநடை போடும் தமிழகம்

இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சாசனம் வரையறுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள்தான் ஜனவரி 26. அதையே இந்தியா குடியரசு நாடான நாள் என்ற வகையில் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

இன்று நாட்டின் 71 ஆவது குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் பிரதமர் மோடிக்கு ஒரு பரிசை அனுப்பியுள்ளது. காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பரிசு பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

என்ன பரிசென்றால், இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசன புத்தகத்தை அமேசானில் புக் செய்து அதை பிரதமர் மோடியின் இல்ல முகவரியிட்டு அனுப்பி வைப்பதைப் போல ட்விட்டரில் சித்திரித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மேலும் அதில், “அன்புள்ள பிரதமர் அவர்களே.... நாட்டை பிளவுபடுத்தி வரும் உங்களுக்கு அதுபோக மீதி நேரம் கிடைக்கும்போது இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். அன்புடன் காங்கிரஸ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் 71 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளின் அடிப்படையான அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசால் பல்வேறு வகைகளில் மீறப்படுவதையே காங்கிரஸ் இந்த அமேசான் பரிசு மூலம் சுட்டிக் காட்டுகிறது. மேலும் இந்த புத்தகத்தை 170 ரூபாய் கொடுத்து பிரதமர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சித்திரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் 14 வது பிரிவை மத்திய பாஜக அரசு மீறிவிட்டது. அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் அனைத்து நபர்களுக்கும் மதம், சாதி, பாலினம் எதுவாக இருந்தாலும் சட்டத்தின் முன் சமத்துவம் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் அரசியலமைப்பின் இந்த பிரிவு மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் முற்றிலும் மீறப்பட்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon