மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

வெளியான ஓமர் அப்துல்லா புகைப்படம்: மம்தா அதிர்ச்சி!

வெளியான ஓமர் அப்துல்லா புகைப்படம்: மம்தா அதிர்ச்சி!

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அப்போது காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, ஓமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

காஷ்மீர் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் தற்போது தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஓமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வெட்டர் அணிந்து மற்றும் தாடியுடன் இருக்கக் கூடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இது ஓமர் அப்துல்லாவா என்று பலரும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில் நேற்று மாலை முதல்வர் மம்தா பானர்ஜி அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து அதிர்ச்சி தெரிவித்திருந்தார். மம்தாவின் பதிவைத் தொடர்ந்து அது ஓமர் அப்துல்லாதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னால் ஓமர் அப்துல்லாவை அடையாளம் காணவே முடியவில்லை. ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமா? இதெல்லாம் எப்போது முடிவுக்கு வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, “இந்தப் படம் மத்திய அரசைப் பற்றிய உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா எந்தக் குற்றச்சாட்டும் இன்றி பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரும் அவரது கட்சியும் இந்தியாவின் மிகப்பெரிய வாக்காளர்களாக இருந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் உண்மை நிலவரத்தை அறியவும் இரண்டு நாள் பயணமாக 15 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் நேற்று முன்தினம் அங்கு வந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ஓமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon