மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

மூன்றாகும் திருச்சி திமுக: மகேஷுக்கு மாசெ பதவி!

மூன்றாகும் திருச்சி திமுக: மகேஷுக்கு மாசெ பதவி!வெற்றிநடை போடும் தமிழகம்

திருச்சி மாவட்டச் செயலாளராக சுமார் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிற நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியை மையமாக வைத்து திருச்சியில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் அன்பில் மகேஷுக்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி என்ற முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அன்பில் மகேஷ் முதலில் உதயநிதி ரசிகர் மன்றப் பணிகளைக் கவனித்து வந்தார். ஏற்கெனவே ஸ்டாலின், அன்பில் பொய்யாமொழி இருவருமே குடும்ப நண்பர்கள் என்பதால் உதயநிதி - மகேஷ் நட்பும் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் ஸ்டாலினே உதயநிதியிடம், ‘மகேஷ் உன் நண்பர்தான். அதை எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டிருக்காதே’ என்றும் அறிவுரை சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு இருவரும் இணைபிரியாத நண்பர்கள்.

இந்த நிலையில் அன்பில் மகேஷுக்கு திருச்சியில் மாவட்டச் செயலாளர் பதவி கொடுப்பது பற்றி உதயநிதி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் நீண்ட அனுபவம் பெற்ற கே.என்.நேருவை மாநில அளவில் முதன்மை செயலாளர் ஆக்கிவிட்டு, திருச்சி மாவட்டத்தில் அன்பில் மகேஷுக்கு மாசெ பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டது.

கே.என்.நேருவை அழைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து விவாதித்தபோது ‘திருச்சியில் சமுதாய ரீதியான பிரதிநிதித்துவத்தை அடிப்படையாக வைத்து மாசெக்கள் இருக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தியுள்ளார் நேரு.

இதுபற்றி திருச்சி திமுக வட்டாரங்களில் பேசியபோது, “இதன்படி இப்போது திருச்சி வடக்கு, தெற்கு என இருக்கும் மாவட்ட அமைப்பு மூன்றாகப் பிரிக்கப்பட இருக்கிறது. இதில் திருவரம்பூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த அன்பில் மகேஷ் மாவட்டச் செயலாளர் என்றும் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, லால்குடி சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மாசெ ஆக்கலாம் என்றும் முசிறி, மணப்பாறை, துறையூர் தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு இப்போது இருக்கும் முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த காடுவெட்டி தியாகராஜனே மாவட்டச் செயலாளராகத் தொடரலாம் என்றும் தெரிகிறது.

அதேநேரம் முன்னாள் துணை மேயரும் நகரச் செயலாளரும், நேருவின் தீவிர ஆதரவாளருமான அன்பழகன் தரப்பினர், நேரு திருச்சியை விட்டுச் செல்லும் நிலையில் அன்பழகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நேருவுடன் 20 வருடமாக இருந்துவரும் அன்பழகனுக்கு திருச்சி திமுகவில் முக்கிய இடம் வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். இதையும் நேருவால் தட்டமுடியவில்லை.

இதனால் மூன்று மாவட்டச் செயலாளர்களில் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த இருவர், ஒரு முத்துராஜா என்று மாறவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இப்படி மாறினால் நகரச் செயலாளர் பதவிக்கு வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த வக்கீல் பாஸ்கர் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது” என்றும் கூறுகிறார்கள் திருச்சி திமுகவினர்.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon