மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 ஜன 2020

சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தீர்மானங்கள்!

சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தீர்மானங்கள்!

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மான வரைவுகள் உலக அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐந்து பக்கத் தீர்மானத்தை உருவாக்கி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இதுபற்றி விவாதிக்கக் கோரியிருக்கிறார்கள்.

“இந்தச் சட்டம் இந்தியாவில் குடியுரிமை தீர்மானிக்கப்படும் வழியில் ஆபத்தான மாற்றத்தைக் குறிக்கிறது மற்றும் உலகின் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்க இந்தச் சட்டம் காரணமாக இருக்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது

182 எம்.பி.க்கள் கொண்ட மைய - வலது ஐரோப்பிய மக்கள் கட்சி, “முஸ்லிம்களைக் குடியுரிமை கோருவதிலிருந்து விலக்குவதன் மூலம் இந்தியாவின் சர்வதேச பிம்பம் மற்றும் உள் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படக்கூடிய பரந்த அளவிலான எதிர்மறை விளைவுகளைப் பற்றிய கவலை ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் ஆதிக்கம் செலுத்தும் அண்டை நாடுகளிடமிருந்து துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு உதவுவதற்கான இந்திய அரசாங்கத்தின் முயற்சியை மதிக்கும் அதே வேளையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு ஒரு விதிமுறையையும், மற்றவர்களுக்குக் குறைந்த சாதகமான விதிகளையும் உருவாக்குவது பாரபட்சமாகக் கருதப்படலாம்” என்று கூறுகிறது அந்தத் தீர்மானம். சிஏஏ சட்டத்தை அடுத்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்களையும், அதைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும் இந்தத் தீர்மானங்கள் பேசுகின்றன.

ஐரோப்பா குழுமம் முன்மொழிந்துள்ள இன்னொரு தீர்மான வரைவில், “இந்தியா அதன் இயல்புகளை மீறி அகதிகளுக்கான கொள்கைகளில் மத அளவுகோல்களை இணைத்துள்ளதற்கு வருத்தத்துக்குரியது. சிசிஏ திருத்தங்கள் இந்தியாவில் குடியுரிமை நிர்ணயிக்கப்படும் வழியில் ஆபத்தான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளது.

சிஏஏவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆதரவுக் குரல்களும் இருக்கின்றன. 66 உறுப்பினர்களைக்கொண்ட கூட்டாட்சி எதிர்ப்பு குழுவான ஐரோப்பிய கன்சர்வேடிவ்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் சிஏஏவுக்கு ஆதரவாக உள்ளனர். “திருத்தப்பட்ட சட்டத்தின் பின்னணியில் உள்ள பகுத்தறிவை இந்திய அரசாங்கம் விளக்கியுள்ளது ஓர் இறையாண்மை கொண்ட நாடாக இந்தியா தனது குடியுரிமை யாருக்கு வழங்கப்படலாம் என்பது குறித்து தானே முடிவு செய்ய இந்தியாவுக்கு சுதந்திரம் உள்ளது” என்று குறிப்பிடும் அவர்கள், “அதேநேரம் சிஏஎவுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது பாதுகாப்புப் படையினர் அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது” என்கிறது.

இதுபோன்ற ஐந்து தீர்மானங்கள் வரும் ஜனவரி 29ஆம் தேதி அதாவது புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மறுநாள் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில், மத்திய அரசு பல வெளிநாட்டு தூதர்களை காஷ்மீருக்கு அழைத்துச் சென்றது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஜம்மு காஷ்மீர் பயணத்தைத் தவிர்த்தது. ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசால் வழிகாட்டப்படும் சுற்றுப்பயணத்தை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தனியாக பின்னர் வருகை தருகிறோம் என்றும் ஐரோப்பிய ராஜ தந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் இந்த விவாதத்துக்கு இந்தியா கடுமையான பதில் கொடுத்துள்ளது.

“சிஏஏ, காஷ்மீர் விவாகரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள் விவகாரங்கள். நாட்டின் ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமையாக விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இவை நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே இவற்றில் வெளிநாட்டினர் தலையிடுவதில் நியாயமில்லை” என்று இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் மார்ச் 13ஆம் தேதி இந்திய - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டுக்காக பிரதமர் மோடி பிரசல்ஸ் செல்ல இருக்கும் நிலையில்தான் இந்தியாவுக்கு இப்படி ஒரு சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தீர்ப்பதற்கு இந்திய வெளியுறவு அதிகாரிகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

தடுப்பூசி தாறுமாறு: மன்சூர் அலிகான் கைது எப்போது?

4 நிமிட வாசிப்பு

தடுப்பூசி தாறுமாறு: மன்சூர் அலிகான் கைது எப்போது?

வாக்கு எண்ணிக்கை: சுற்றுகளைக் குறைக்கத் திட்டமிடும் தேர்தல் ...

5 நிமிட வாசிப்பு

வாக்கு எண்ணிக்கை: சுற்றுகளைக் குறைக்கத் திட்டமிடும் தேர்தல் ஆணையம் - ஏன்?

நோயாளிகள் உயிரிழக்கக் கூடும்: கண்ணீர் விடும் மருத்துவர்கள்! ...

4 நிமிட வாசிப்பு

நோயாளிகள் உயிரிழக்கக் கூடும்: கண்ணீர் விடும் மருத்துவர்கள்!

திங்கள் 27 ஜன 2020