மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

ஆந்திராவில் கலைக்கப்படும் மேலவை!

ஆந்திராவில் கலைக்கப்படும் மேலவை!

ஆந்திராவில் சட்டமன்ற மேலவையை கலைப்பதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது.

ஆந்திர பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலங்கானா உருவானபோது, 5 ஆண்டுகள் வரை ஐதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக செயல்படும் என்றும், அதற்குள் ஆந்திரா புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, அமராவதியை புதிய தலைநகராக அறிவித்து பணிகளை மேற்கொண்டது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மாநிலத்திற்கு மூன்று தலைநகரை அமைக்க முடிவெடுத்தது. அதன்படி, விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூலை உயர் நீதிமன்றத் தலைநகராகவும் செயல்படும் என ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது.

மூன்று தலைநகரை அமைக்கும் மசோதா ஓய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக சட்டமன்றத்தில் எளிதாகவே நிறைவேறிவிடும். ஆனால், 58 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் அதிகம் (28) இருப்பதால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது. ஆகவே, மூன்று தலைநகர் மசோதாவை நிறைவேற்ற தடையாக இருக்கும் மேலவையைக் கலைக்க ஜெகன் மோகன அரசு முடிவெடுத்தது.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 27) ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டமன்ற மேலவையை கலைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர சட்டமன்றத்தில் மேலவையைக் கலைப்பது தொடர்பான தீர்மானம் இன்று பிற்பகல் அறிமுகப்படுத்தப்பட்டது. வாக்கெடுப்பின்போது தீர்மானத்தில் ஆதரவாக 133 வாக்குகள் பதிவானதால், மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

தொடர்ச்சியாக இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மசோதாவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்த பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

ஆந்திராவில் 1983ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தெலுங்கு தேசம் 1985ல் மேலவையை கலைத்தது. 2007ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் சட்ட மேலவை மீண்டும் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon