மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும்: ஸ்டாலின்

விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும்: ஸ்டாலின்வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகரராஜா மற்றும் ஹெலன் சத்யா ஆகியோரின் திருமணம் இன்று (ஜனவரி 27) கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது.

விழாவில் பேசிய ஸ்டாலின், “மணமகன் மணமகள் இருவரும் வீட்டில் மத்திய -மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது, கேள்வி கேட்க வேண்டும். அதிமுக அரசு போல் மத்திய அரசுக்கு கால்பிடித்து மௌனமாக இருந்து உரிமைகளை பறிகொடுக்க கூடாது. ஆணும் பெண்ணும் சமம் என்ற உரிமையை, கேள்வி கேட்கும் உரிமையை தந்தை பெரியார் பெற்றுத்தந்தார். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்யக்கூடிய சூழல் இன்றைக்கு உள்ளது. பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரை விமர்சிக்கிறார்கள் என்றால் அதுதான் பெரியாரின் இருப்பைக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

மதம், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தக் கூடிய வகையில் மத்திய அரசு சட்டங்களைக் கொண்டுவருகிறது என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், ராஜஸ்தான் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். இதையெல்லாம் விட பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சிஏஏவை ஆதரித்து வாக்களித்தது. ஆனால், அதனை அனுமதிக்கமாட்டோம் என தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோல, இந்தியா முழுவதும் சிஏஏவை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும், “தமிழகத்தில் சிஏஏவை எதிர்க்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் தாங்கள் நல்லாட்சி நடத்திக்கொண்டிருப்பதாகவும், அதற்காக விருதுகள் வாங்கிக் கொண்டிருப்பதாகவும் பேசுகிறார்கள். அந்த விருது கொடுத்தவனைத்தான் முதலில் அடிக்க வேண்டும்.நம்முடைய உரிமைகள் பறிபோகும் நிலையில் இருப்பதை தடுப்பதற்கு யோக்கியதை இல்லை. பிறகு என்ன விருது வேண்டியிருக்கிறது? சிஏஏவுக்கு எதிராக நான் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தை இதுவரை எடுத்துக்கொள்ளவே இல்லை. நீங்கள் எத்தனை ஊழல் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுங்கள். உங்களை மனமுவந்து பாராட்டுகிறேன்” என்றும் விழாவில் பேசினார் ஸ்டாலின்.

மத்திய பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி நல்லாட்சிக்கான குறியீட்டுக் கூட்டுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்தது. மேலும் பல்வேறு துறைகளில் விருதுகளும் தமிழகம் பெற்றுவந்தது. இதனைக் குறிப்பிட்டு தமிழகத்தில் நல்லாட்சி நடந்துவருவதாகவும், பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்குவதாகவும் முதல்வர் உள்பட அமைச்சர்கள் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில்தான் விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்கிற கருத்தைக் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon