பொதுத் தேர்வு நடைபெறும்: தமிழக அரசு திட்டவட்டம்!

politics

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. ஆனால், பொதுத் தேர்வு நடத்துவதால் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது. ஆளும் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், மாணவரின் திறனை மேம்படுத்தவே இதுபோன்ற தேர்வுகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜனவரி 28) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

மனுவில், “இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைமுறையில் இல்லை. பொதுத்தேர்வு முறையைப் புகுத்துவது என்பது மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். குழந்தைப் பருவத்தினர்மீது இத்தகைய பொதுத் தேர்வைத் திணிப்பது குழந்தைகள் அச்சமடைவதற்கும் பதற்றமடைவதற்கும் மட்டுமே உதவும். குழந்தைகளுக்குக் கல்வியின் மீதும், கற்றலின் மீதும் சலிப்பும், வெறுப்பும் ஏற்படவே வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைக்கூட தேர்வு பயம் எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு இருக்கும்போது மழலை மனம் மாறாத ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு மிகுந்த அச்சத்தையும் சுமையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும்” என்றும், “தமிழகத்தில் உள்ள நீண்ட கல்வி மரபுக்கு முரணாக, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறையை அமலாக்கி, மாணவர்களையும் பெற்றோர்களையும் அச்சத்திற்குள்ளாக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். இந்தப் பொதுத்தேர்வு முறை மாணவர்களின் இடைநிற்றலுக்கும், படிப்பை துறப்பதற்கும் காரணமாகிவிடக் கூடாது” என்பதையும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்வு தொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “பொதுத் தேர்வு நடத்துவது மிக மோசமான ஒரு அரசு பயங்கரவாத நடவடிக்கை. இது மாணவ – மாணவிகள் மீது நடத்தப்படுகின்ற உளவியல் தாக்குதல். இதை அரசு எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுபோலவே திமுக மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி, “பல்வேறு தரப்பினரும் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தமிழக அரசு மூர்க்கமாக, கட்டாயமாக மாணவர்கள் மத்தியில் பொதுத் தேர்வைத் திணிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக அமைந்துவிடும். இளம் வயதிலேயே மாணவர்கள் மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும். ஆகவே, ஈகோ பார்க்காமல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இப்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தேர்வு நடத்துவதில் விடாப்பிடியாக உள்ளது தமிழக அரசு. சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இருக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *