tஅரசகுமார் போல திவாகரன்: அழைக்கும் ஸ்டாலின்

politics

சசிகலாவின் சகோதரர் திவாகரன் திமுகவில் இணைவாரா என்பது குறித்து ஸ்டாலின் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் சகோதரர் ராஜ்குமார் மகன் டாக்டர் ஸ்ரீராம் சுப்பையா- டாக்டர் சாருஹாசினி ஆகியோரின் திருமண விழா தஞ்சையில் இன்று (ஜனவரி 30) நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார். விழாவில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளோடு சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான திவாகரனும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய திவாகரன், ‘நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திமுக தலைவர் ஸ்டாலின்தான். அவர் பின்னால் அணிதிரள வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக தான் மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அந்த வெற்றி பெரும்பாலான இடங்களில் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் 85% உள்ளாட்சி இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கும் எனவும் கூறினார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஸ்டாலின், “இங்கு சகோதரர் திவாகரன் பேசியதைக் கேட்டு நீங்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தீர்கள். அதற்குப் பிறகு பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட அதை வலியுறுத்தி குறிப்பிட்டுச் சொன்னார்கள். பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார் இவ்வாறுதான் பேசினார். பேசிவிட்டு ஒரு வாரத்தில் திமுகவில் வந்து சேர்ந்துவிட்டார். இன்று திவாகரன் பேசி உள்ளார். அவர் எங்கே போகிறார், எங்கே வருகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், அவர் பேசும்போது, ‘கட்சி பாகுபாடின்றி, அதிமுக, திமுக என்று பாராமல் தமிழ்நாட்டைக் காப்பாற்ற தமிழன் என்ற உணர்வைப் பெற்றாக வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அதைத்தான் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் நாம் சற்றே அலட்சியமாக இருந்து விட்டதாகக்கூட திவாகரன் குறிப்பிட்டுச் சொன்னார். கவனமாக இருந்ததால் தான் இந்த அளவுக்கேனும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதைத் திவாகரனுக்கு சுட்டிக்காட்டுகிறேன் எனக் கூறிய ஸ்டாலின், “2 நாட்களுக்கு முன்னர் என் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் என்ன, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். திமுக பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்” என்று விளக்கினார்.

மேலும், “என் மீது வழக்கு போடுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ படிப்புக் கனவை, நிறைவேற விடாமல் தடுக்கும் ‘நீட்’ தேர்வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இருக்கிறதா? இந்த நிலையில்தான் இன்று நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதை டெல்டா பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்து பார்த்து, உங்களுக்காக உழைக்கும், உங்களுக்காக பாடுபடும் திமுகவிற்கு பக்கபலமாக இருக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சிஏஏ கோலமிட்டவர்களை கைது செய்தது குறித்தும், தமிழகத்திற்கு நல்லாட்சி விருது வழங்கப்பட்டது தொடர்பாகவும் ஸ்டாலின் விமர்சனம் செய்த நிலையில், அவருக்கு எதிராக இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே இவ்வாறான கருத்தைத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

[ஸ்டாலினைப் புகழ்ந்த சசிகலாவின் சகோதரர்!](https://minnambalam.com/politics/2020/01/30/131/dhivakaran-prises-dmk-leader-stalin)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *