மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

டிஜிட்டல் திண்ணை: அடுத்த தேர்தல்: எடப்பாடியின் கரன்சி மேப்!

டிஜிட்டல் திண்ணை: அடுத்த தேர்தல்: எடப்பாடியின்  கரன்சி மேப்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“தமிழ்நாட்டின் அரசியல் சாலை அடுத்த தேர்தலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 2021ஆம் ஆண்டுதான் சட்டமன்றத் தேர்தல் என்றாலும் அதற்கு முன்னரே கூட தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வந்துவிடுமோ என்ற கேள்விக்கும் நிறையவே இடமிருக்கிறது.

அதிமுகவின் ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்ட வாரியாக நேற்று (பிப்ரவரி 10) தொடங்கியிருக்கும் நிலையில், ‘மாநகராட்சித் தேர்தல், நகராட்சித் தேர்தல்னு மட்டும் நினைக்காதீங்க. சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைனு பாருங்க. பணத்தைப் பத்தி கவலைப்படாதீங்க. நாம போடுற திட்டங்களை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்ப்பதுதான் உங்க வேலை’ என்று கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு ஒருபக்கம் கட்சி நிர்வாகிகளைக் கூர் தீட்டிக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததால், கூட்டணிக்குள் கசமுசா செய்துகொண்டிருந்த பாமக வெளிப்படையாகக் கூட்டணியில் இருப்பதற்கான கமிட்மென்ட்டுக்கு வந்திருக்கிறது. பாமக வைத்த பத்து கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கை இது. மேலும் டெல்டாவில் வலுவாக இருப்பதாக கருதப்படும் அமமுகவுக்கும் திமுகவுக்கும் முதல்வரின் டெல்டா முடிவு அரசியல் ரீதியான சரியான செக்.

இவ்வளவெல்லாம் இருந்தபோதும் தேர்தல் நேரத்தில் தனக்கு உதவுவது பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று உறுதியாக நம்புகிறார் எடப்பாடி. மக்கள்நலத் திட்டங்கள், இமேஜை உயர்த்தும் நடவடிக்கைகள் எல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும் தேர்தல் வெற்றியின் நிஜமான கூட்டணிக் கட்சி கரன்சிதான் என்பதை உணர்ந்து சில நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறார் முதல்வர்.

இதுபற்றி கோட்டை வட்டார அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது கொட்டுகிறார்கள்.

‘பொதுவாகவே தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பிருந்தே அதிகாரிகள் தரப்பு அரசுக்கு அதுவரை அளித்துவந்த முழு ஒத்துழைப்பை அளிக்க மாட்டார்கள் என்பது வழக்கமானதுதான். அதுவும் ஜெயலலிதா மறைந்து ஓபிஎஸ் முதல்வராகி அதன்பின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி தன் முதல்வர் நாற்காலியைப் பல்வேறு வழிமுறைகளால் ஸ்திரப்படுத்திக்கொண்டாலும், இந்த அரசுக்குக் கடைசி மாதங்களில் முக்கிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு பற்றிய சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது.

ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பிப்ரவரி 1ஆம் தேதி தன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், ‘அடுத்த வருடம் சட்டமன்ற பொதுத் தேர்தல். 2020 ஆரம்பித்து இதோ என்பதற்குள் ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் ஆரம்பித்துவிட்டது. தேர்தலும் இப்படி வெகு விரைவில் வந்துவிடும். களப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் குழப்பமே நிலவுகிறது. யார் தலைவர் என்று தொண்டர்களால் சொல்லமுடியாத நிலை, இதை யாரும் மறுக்க முடியாது என்பதே உண்மை. தலைவர்கள் இருவராக இருக்கலாம். ஆனால், கட்சியில் மற்றவர்கள் இணையும்போதுகூட தனித்தனியாகச் சந்திப்பது ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியே. இருவரும் இணைந்து ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.

வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு நீங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பார்களா? அதன்படி நடப்பார்களா? கட்டாயம் நடக்க மாட்டார்கள் என்பதே வரலாறு, இப்போதே சிலர் நடக்கவில்லை என்பதே குற்றசாட்டு. உங்கள் களப்பணிக்கான நேரம் இதுவே, அம்மாவின் பாசறையில் வளந்தவர்களே பயணப்படுங்கள், வெற்றி உங்களை அரவணைக்க காலம் சிறிதே!

உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே, தொண்டர்களை மதியுங்கள். அவர்கள் கேட்பவற்றை காதுகொடுத்து கேட்டு, தயவுசெய்து செய்து கொடுங்கள். தேர்தலில் பணியாற்றி உங்களை வெற்றிபெற வைப்பவர்கள் அவர்களே. இதையெல்லாம் நீங்கள் சந்தித்தவர்கள். நீங்களும் தொண்டராக இருந்து உயர்ந்தவர்கள்தான். உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இருக்கும்போதே அதிகார வர்க்கம் தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் எப்படித் திசை மாறும் என்பதை பூங்குன்றன் கடந்த வாரம் எடுத்துக் காட்டியிருந்தார். அதன்படியே அரசின் பல துறைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கின்றன.

அதாவது முக்கிய துறைகளான பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, உள்ளாட்சித் துறை, விவசாயத் துறை உள்ளிட்ட பல துறைகளில் டெண்டர்களை எல்லாம் முன்கூட்டியே விடுவதற்காக அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்

உதாரணத்துக்கு நெடுஞ்சாலைத் துறையில் Comprehensive Road Infrastructure Development Programme என்ற ஒரு திட்டம் உள்ளது. இதை சுருக்கமாக சிஆர்ஐடிபி என்று சொல்லுவார்கள்.

தமிழக நெடுஞ்சாலைத் துறை மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் 59,405 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைப் பராமரிக்கிறது. இந்தச் சாலைகளுக்கான திட்டங்கள் தனித்தனியே டெண்டர் விடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தாலும், 2004-05 கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில்தான் நெடுஞ்சாலைத் துறைக்கென இந்த சிஆர்ஐடிபி என்ற சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதாவது ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயர் வைக்கப்பட்ட இத்திட்டத்தில் தமிழக நெடுஞ்சாலைத் துறை வசம் இருக்கும் அத்தனை சாலைகளையும் பராமரித்தல் பழுது பார்த்தல், சாலைகளில் பாலங்கள், மதகுகள் கட்டுதல், பழுதுபார்த்தல் உள்ளிட்ட வேலைகளுக்காக இந்த பொதுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் இந்தத் திட்டத்துக்கான டெண்டர்கள் விடப்பட்டு அதே நிதியாண்டில் மார்ச்சுக்குள் வேலை முடிக்கப்பட வேண்டும் என்பதுதான் இதுவரையிலான இத்திட்டத்தின் வழக்கம். (2014-15 நிதியாண்டில் இருந்து 18-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் சாலைப் பாதுகாப்புப் பணிகளுக்காக மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 1752.19 கோடி ரூபாய். இதில் சிஆர்ஐடிபி திட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட தொகை 1,152 கோடி ரூபாய்)

ஆனால், இந்த டெண்டர் முறையில் இப்போது மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அக்டோபரில் விடப்படும் டெண்டரை வரும் ஏப்ரல் மாதமே வைத்துவிடலாம். இந்த நிதியாண்டுக்கான வேலைகள் மார்ச்சில் முடிந்துவிடும் நிலையில், அக்டோபர் வரை காத்திருக்க வேண்டாம். ஏப்ரலிலேயே டெண்டரை வைத்து அடுத்த நிதியாண்டுக்கான வேலைகளையும் பார்த்துவிடலாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அக்டோபரில் டெண்டர் விட்டால் சில மாதங்களில் தேர்தல் வந்துவிடும் என்பதால்தான் இந்த உத்தரவு. இந்த டெண்டரின் மதிப்பு 4,500 கோடி ரூபாய் என்கிறார்கள். இதில் துறை அமைச்சருக்கு மட்டுமே 12.5% என்பதுதான் தற்போதைய நிலவரம். அப்படியென்றால் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நெடுஞ்சாலைத் துறையில் மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலும் இதேபோல டெண்டர்களை எல்லாம் முன்கூடியே வைத்து அமைச்சர்கள் மூலம் அடுத்த தேர்தலுக்கான கரன்சி மேப் திட்டவட்டமாகத் தீட்டப்பட்டு வருகிறது. இதனால் முக்கிய துறைகளில் எல்லாம் பரபரப்பான பணிகள் நடந்து வருகின்றன” என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 11 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon