மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

2 ஆண்டுகளுக்குப் பிறகு சீமான் மீது வழக்குப் பதிவு!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சீமான் மீது வழக்குப் பதிவு!

தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக சீமான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளையொட்டி 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி கிண்டியிலுள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியின் நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேராவாக முதல்வரும் துணை முதல்வரும் இருக்கிறார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “இதுபோன்ற செய்திகளை கேட்கக் கூடாது, இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான் அந்தத் தலைவர்கள் முன்பே இறந்துவிட்டனர்.” என்று தெரிவித்தார்.

7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு, “எஜமானர்கள் என்ன சொல்வார்களோ அதைத்தானே தமிழக அரசு கேட்கும். அரசியல் கட்சிகள் அழுத்தம் அளித்ததால் சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் இயற்றாமல், அமைச்சரவையை மட்டும் கூட்டி தீர்மானம் இயற்றி இருக்கிறார்கள். ஆளுநர் அதனை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அதுபோலவே எம்ய்ஸ் மருத்துவமனை தொடர்பாக அழுத்தம் தருவதாகத் தெரிவிக்கிறார்கள். எஜமானர் தூங்கும்போது கையைக் காலை அமுக்கிவிடுவதுதான் இவர்கள் தரும் அழுத்தம்” என்று தமிழக அரசை விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினைரிடைய அமைதியைக் குலைப்பது 153, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் 505 (1)(b)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

த.எழிலரசன்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon