ரஜினியுடனான கூட்டணி பற்றி சொன்னேனா? தடுமாற்றத்தில் ராமதாஸ்

politics

அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2003-04ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பாமகவின் சார்பில் நிழல் நிதிநிலை வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, பாமகவின் சார்பில் நேற்று முன்தினம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றிப் பேசலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று (பிப்ரவரி 12) சென்னை நடைபெற்றது. நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “ரஜினி குறித்து நான் சொல்லாத, தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரஜினி கட்சியே ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்களே என்றுதான் நான் கேட்டேன். ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் பேசுவேன் என்றா சொன்னேன்? உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தற்போதும் அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளது” என்று ரஜினி குறித்த செய்திக்கு விளக்கம் அளித்தார்.

பிரஷாந்த் கிஷோர் திமுகவுக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பான கேள்விக்கு, “இதுபோல தமிழகத்தில் யாரையும் எப்போதும் அழைத்துவந்ததில்லை. திமுகவில் அறிவுப் பஞ்சம் ஏற்பட்டதால் பிகாரிலிருந்து பிரஷாந்த் கிஷோரை இறக்குமதி செய்துள்ளனர். 360 கோடி ரூபாயைக் கொடுத்து எப்படியாவது வெற்றிபெற வழிசெய்யுங்கள் என்று கோரியுள்ளனர்” என்று விமர்சித்தார்.

அதிமுக கூட்டணியில் சேரும்போது தெரிவித்த 10 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கப்படும் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டுதான் வருகிறார்கள். நாங்களும் வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

**த.எழிலரசன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *