மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

தவறான தகவல்: மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி.!

தவறான தகவல்: மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி.!

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். போலீஸாரின் தாக்குதலால் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இதனிடையே இந்த போராட்டத்துடன் நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களையும் மீம்ஸ்களையும் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வந்தனர். இந்த நிலையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமாரும் ரஜினியைத் தொடர்பு படுத்தி ட்விட் செய்திருந்தார்.

அதில், இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆளாக நிற்பேன் என்று சொன்னது நீதானா சொல்.... சொல் .... என்று விமர்சித்திருந்தார்.

இதுமட்டுமின்றி வண்ணாரப்பேட்டை தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்த அவர் மத்திய மாநில அரசுகளுக்கும், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பாஜக அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நீங்கள் ஆதரவு அளித்த வாக்கின் விளைவுதான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைமைக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவோடு, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் இறந்தார் என்று திருவாரூர் அருகே சாலை விபத்தில் ரத்த காயத்துடன் கிடக்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

ஆனால் போராட்டத்தின் போது யாரும் உயிரிழக்கவில்லை என்று சென்னை காவல் துறை தெரிவித்தது.

அதுபோன்று திமுக எம்பி செந்தில்குமாரின் பதிவிற்குக் கீழே, இது உண்மைக்குப் புறம்பான செய்தி என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்புவதே உங்கள் கட்சியினருக்கு வாடிக்கை என்று கண்டித்திருக்கின்றனர்.

இந்நிலையில் தவறான புகைப்படத்தை பதிவிட்டதற்காக செந்தில்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நான் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் நபர் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர் அல்ல. விபத்தில் சிக்கியவர் என்று எனது நண்பர்களும் சில நலம் விரும்பிகளும் சுட்டிக் காட்டியதன் மூலம் தெரிந்து கொண்டேன். இதைப் பதிவு செய்ததற்காக மன்னிப்பு கோருகிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவலைப் பதிவு செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருப்பேன் என்று மன்னிப்பு கோரியுள்ளார்.

கவிபிரியா

ஞாயிறு, 16 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon