மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

பனிப்போர் விளைவு: பட்ஜெட்டைப் புறக்கணித்த முதல்வர்?

பனிப்போர் விளைவு: பட்ஜெட்டைப்  புறக்கணித்த முதல்வர்?

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்ரவரி 14ஆம் தேதி, நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் வெளியேறியதாகச் சொல்கிறார்கள் சில அமைச்சர்கள்.

பிப்ரவரி 14ஆம் தேதி, பட்ஜெட்டுக்கு முன்னதாகவே மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ‘இபிஎஸ் - ஓபிஎஸ், பட்ஜெட் பனிப்போர்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். மின்னம்பலம் செய்தியின் உண்மை சட்டமன்றத்தில் வெளிப்பட்டது.

நேற்று காலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சுமார் 10 பேர் சட்டமன்றத்திற்குள் வந்திருந்தார்கள். 11ஆவது எம்.எல்.ஏ.வாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வந்து அவரது இருக்கையில் அமர்ந்தார். முதல்வர் அவரது அறைக்கு முன்னதாக வந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் நிறைந்துவிட்டார்கள்.

அதன்பின் துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைக்குச் சென்று முதல்வரைச் சட்டமன்றத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று பெஞ்சைத் தட்டி வரவேற்றார்கள். அப்போது தினகரன் சுற்றிப் பார்த்துவிட்டு எதையோ படித்துக்கொண்டிருந்தார்.

நிதியமைச்சர் ஓபிஎஸ் பட்ஜெட் வாசிக்கத் தொடங்கினார். வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்றவர் ஒரு சில இடங்களில் மட்டுமே முதல்வர் என்று குறிப்பிட்டு சொன்னார். விரக்தியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருகட்டத்தில் எழுந்து வெளியே சென்றுவிட்டு வந்தார். வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் வெளியே சென்று வருவது இயல்புதான் என்றாலும் முதல்வர் கணிசமான நேரம் சென்று வந்தார் என்கிறார்கள்.

முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் என்ன மன வருத்தம் என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“எம்ஜிஆர், அம்மா, கலைஞர் முதல்வராகவிருந்தபோது முதல்வர் ஆலோசனையின் பேரில்தான் பட்ஜெட் தயாரிப்பார்கள். இந்த பட்ஜெட் தயாரிப்புக்காக முதல்வர் எடப்பாடி பல ஆலோசனைகளை நடத்தினார். அமைச்சர்களிடம் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆனால் பட்ஜெட் வாசிக்கும்போது முதல்வர் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், முதல்வரை இருட்டடிப்பு செய்வதுபோல் சட்டமன்றத்தில் நடந்துகொண்டார் ஓபிஎஸ். அதனால்தான் முதல்வரின் இந்த வெளிநடப்பு” என்கிறார்கள்.

-மின்னம்பலம் டீம்

ஞாயிறு, 16 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon