மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

முஸ்லிம் அமைப்புகளுடன் முதல்வர்: நள்ளிரவில் நடந்தது என்ன?

முஸ்லிம் அமைப்புகளுடன் முதல்வர்: நள்ளிரவில் நடந்தது என்ன?

பிப்ரவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அலுவலக ரீதியான விடுமுறை நாளாக இருந்தாலும், தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரை நேற்று முக்கியமான வேலை நாளாகவே அமைந்துவிட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராடும் எஸ்டிபிஐ கட்சியினரை இரவு 10.45 மணி முதல் 11.30 மணி வரை சந்தித்துப் பேசியிருப்பது, இந்த விவகாரம் தமிழகத்தில் ஒரு திசையை நோக்கிச் செல்கிறதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

சிஏஏ சட்டத்துக்கு எதிராகவும், என்.பி.ஆர். எனப்படும் மக்கள் தொகைப் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடு முழுதும் போராட்டங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி இரவு போலீஸார் தடியடி நடத்தியதால் போராட்ட வீரியம் மேலும் அதிகமானது. ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தோடு தமிழக போலீஸாரைக் கண்டித்து பல இடங்களிலும் நள்ளிரவே போராட்டம் வெடித்தது.

இது தொடர்பாக 15 ஆம் தேதி சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனை அழைத்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன் பின் அன்று இரவே கமிஷனர் விஸ்வநாதன், இஸ்லாமிய கூட்டமைப்பினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து நீண்ட நேரம் பேசினார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 16) பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். அதில், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, கமிஷனர் விஸ்வநாதன், உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், பொதுத் துறை செயலாளர் செந்தில்குமார், முதல்வரின் செயலாளர் சாய்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை பற்றியும், அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய ராயபுரம் ஆலோசனை பற்றியும் மின்னம்பலத்தில் முதல்வரின் முக்கிய ஆலோசனை: சட்டமன்றத்தில் எதிரொலிக்குமா? என்ற தலைப்பில் நேற்று மாலை விரிவாக வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் திங்கள் கிழமை சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் நேற்று ஞாயிறு மாலை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் முதல்வரை சந்தித்துப் பேச முடியுமா என்று அவசரமாக ஒரு அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஏற்கனவே இது தொடர்பாக துணை முதல்வரையும், முதல்வரையும் சில வாரங்களுக்கு முன்பே சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனபோதும் சட்டமன்றத்தில் சிஏஏ, என்பிஆர் க்கு எதிரான தீர்மானம் வேண்டும் என்ற அவர்களின் நிலைக்கு எதிராக தமிழக அரசு முடிவெடுத்ததால் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான் நேற்று மாலை எஸ்டிபிஐ கட்சியினர் அப்பாயின்ட்மென்ட் கேட்ட தகவல் முதல்வருக்குத் தெரியப்படுத்தப்பட்டதும்... இரவு பத்து மணிக்கு மேல வரச் சொல்லுங்க என்று முதல்வரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரவு பத்துமணியளவில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு சென்றனர்.

இரவு 10.45 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் முக்கால் மணி நேரம் கடந்து 11.30 வரை நீடித்தது.

சிஏஏ, என்பிஆர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் பற்றி முதல்வருக்கு சுமார் அரைமணி நேரத்துக்கும் அதிகமாக விளக்கியிருக்கிறார்கள் பாகவி உள்ளிட்டோர். கேரளா, புதுச்சேரிபோல தமிழக சட்டமன்றத்திலும் சிஏஏ, என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். அதில் சில சந்தேகங்களையும் முதல்வர் கேட்க அவற்றுக்கும் விடை சொல்லியிருக்கிறார்கள்.

‘என்பிஆர் பற்றி எங்களுக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். இன்னும் பதில் வரவில்லை. இந்த அரசு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக, சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக எந்த முடிவும் எடுக்காது’என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். இந்த இரவு நேரத்தில் கேட்டவுடன் அப்பாயின்ட்மென்ட் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்கள் எஸ்டிபிஐ கட்சியினர்.

முதல்வரின் சந்திப்பு முடிந்தவுடன் நேரடியாக வண்ணாரப்பேட்டையில் இருக்கும் போராட்டக் களத்துக்கு சென்று, அங்கே கூடியிருந்த மக்களிடம் முதல்வர் கொடுத்த உத்தரவாதம் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள் அவர்கள்.

இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வண்ணாரப்பேட்டை பிரச்சினையை நிச்சயம் கிளப்பும். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு வரை இந்த விவகாரம் தொடர்பாக சந்திப்புகள், ஆலோசனைகள் என்று நடத்தியது தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. இது சிஏஏ விவகாரத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் கூட்டணி விஷயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துமா என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-ஆரா

திங்கள், 17 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon