முதல்வர் வேட்பாளர் எடப்பாடி: மெகா மாஸ்டர் பிளான்!

politics

சட்டமன்றத்தில் அண்மை நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உடல்மொழி ரொம்பவே மாறிவிட்டது என்று அவரை உற்றுக் கவனிப்பவர்கள் கூறுகிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, துரைமுருகன், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களானாலும் சரி அவர்களின் கேள்விக்கு ஆவேசமாகவும், ஆக்ரோஷமாகவும் பேசுகிறார் முதலமைச்சர். அதேநேரம் சில நேரம் மிகவும் கூலாக உள்ளங்கைகளால் ஓவியம் வரைந்தபடி சிரித்துக்கொண்டும் பேசுகிறார்.

இந்த இரண்டு நிலைகளிலுமே எடப்பாடி பழனிசாமி திட்டமிட்ட ஓர் உடல்மொழியை வெளிப்படுத்துவதைக் கவனிக்க முடிகிறது என்கிறார்கள் திமுக, அதிமுக உறுப்பினர்கள் இருதரப்பினருமே.

நேற்று முன்தினம் அவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நான் முதல்வராக இருப்பதே, தமிழக மக்களுக்குச் சேவகனாகப் பணி செய்யவும், உழவன் வீட்டுப் பிள்ளையாக இருந்து விவசாயிகளுக்கு நன்மை செய்யவும்தான். எனக்கு முதல்வராக ஏசி காரில் செல்லும்போது இருக்கும் பெருமிதத்தைவிட வேளாண் மண்டலச் சட்டம் இயற்றியதற்காக விவசாயிகள் நன்றி தெரிவிப்பு விழாவில், மாட்டு வண்டியில் சென்றதுதான் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. வேளாண் மண்டலச் சட்டம் கொண்டு வந்ததற்காக ஒரு விவசாயியாக நான் பெருமை கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்தப் பேச்சுக்கும், முதல்வரின் நடவடிக்கைகளுக்கும் பின்னால் ஒரு பெரிய உட்கட்சி அரசியல் இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவில்.

“திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் உத்தி வகுப்பாளராக இருக்கிறார். அங்கே ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் பேர் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், அதிமுகவில் நிலைமை அப்படி இல்லை. வரும் 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்று சில மாதங்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிரஸ்மீட்டில் சொன்னார்.

ஆனால், அதிமுகவின் 2021 முதல்வர் வேட்பாளர் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அவருக்கு நெருக்கமான கொங்கு அமைச்சர்கள் மீண்டும் மீண்டும் மேடைகளில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் போட்டியிலிருந்து அகற்றுவதற்காகவும் எடப்பாடியே அடுத்த முதல்வர், முதல்வர் வேட்பாளர் என்ற முத்திரை குத்துவதற்காகவும் எடப்பாடியின் மகன் மற்றும் அவரது உறவினர்கள் ஒருங்கிணைப்பில் ஒரு உத்தி வகுக்கும் டீம் செயல்படுகிறது. ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆலோசனை அளித்து வந்த சுனிலின் ஆலோசனைகளும் இந்த டீமுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில்தான் சமீப நாட்களாக எடப்பாடியின் ஒவ்வொரு நகர்வுகளும் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றன. அடுத்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதி செய்வதற்காகவே காவிரி வேளாண் மண்டல அறிவிப்பை பட்ஜெட்டுக்கு முன்பே வெளியிட்டது, பட்ஜெட் அறிவிப்புகளைத் தாண்டி 110 விதிகளை அறிவிப்பது, டெல்டாவில் மாட்டு வண்டியில் ஊர்வலம் போனது, நாற்று நட்டது போன்றவற்றைச் சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த ஆட்சியின் முகமாக முன்னிறுத்தப்படுகிறார். இதற்கு நேர் மாறாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறார். இதையெல்லாம் அறிந்தும் ஓ.பன்னீர் இப்போது குழப்பத்தில் மௌனமாக இருக்கிறார். பன்னீரின் மௌனம் என்றைக்கு வெடிக்குமோ அப்போது அதையும் சமாளிக்க திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் அதிமுகவிலுள்ள எடப்பாடி தரப்பினர்.

**வேந்தன்*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *